பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5 தொடர்ச்சி)
களம் : 5 காட்சி : 1
நாற்சந்தியில் பொதுமக்கள்
அறுசீர் விருத்தம்
முதியோன் 1 : மண்ணாள் வேந்தன் குலக்கொடிக்கு
மறவா வண்ணம் யாப்புரைக்க
எண்ணி யழைத்தார் சூதாக
இளமைப் பருவந் தோதாக
பெண்ணாள் கவியின் தமிழாலே
பிணையல் கொண்டாள் அன்பாலே
நண்ணும் அவையில் இற்றைநாள்
நல்ல முடிவைக் காண்குவமோ
முதியோன் 2: உற்றவ ரென்று நெருங்காமல்
உறவை மறந்து விலகாமல்
கற்றையா யெரியும் நெருப்பெனவே
காத்தல் வேண்டும் அண்மைநிலை
கொற்றவன் நட்பைப் பேணும்வகைக்
குறித்தா ரன்றோ வள்ளுவனார்
பற்றையும் வைத்தான் நெருப்பின்மேல்
படுமோர் துன்பஞ் சொலலாமோ
எண்சீர் விருத்தம்
இளையோன் 1 : பஞ்சும் நெருப்பும்
பக்கம் வைத்தார்
பற்றா திருக்கத்
திரையை யிட்டார்
கொஞ்சுந் தமிழில்
குறைக ளைந்து
குலவும் யாப்பைக்
கொள்ள வைத்தார்
விஞ்சு மியற்கை
விளைக்குந் துணையால்
வெல்லக் கண்டார்
விடலை வேகம்
அஞ்சிக் காதல்
அழிக்க எண்ணின்
அவனி யாள
அடுத்தா ளில்லை
முதியோர் 3 : வான்முட்டிப் பாய்ந்தாலும்
சின்னச் சிட்டு
வல்லூருக்குக் கிணையாக
மதிக்கற் பாற்றோ
கான்முட்டிப் பாய்ந்தாலும்
சூழ்ச்சி மிக்க
கள்ளநரி பெற்றிடுமோ
புலியின் வீரம்
தேன்முட்டிப் பாய்ந்தாலும்
எந்தப் பூவும்
தெண்ணீர்வாழ் தாமரைக்கு
நிகரென் றாமோ
கோன்முட்டிக் குலம்மாற்ற
முனைவோ மானால்
கொள்ளிமீனும் வீழ்ந்துலகம்
அழிந்தே போகும்
சிந்து கண்ணி
இளையோன் 2 : ஆணும் பெண்ணும் பார்க்கிறார்-இன்பம்
அள்ளிக் கொஞ்சம் சேர்க்கிறார்
காணும் கண்ணை மையிட்டு – இரு
கையுங் காலும் வெட்டுதலாய்
நாணுங் கெடுத்து நம்பியை – காதல்
பேணச் செய்த நங்கையை
காணார் போல நடிக்கிறார்-இங்கே
காளையை மட்டும் வதைக்கிறார்
இளையோன் 3 : பெண்ணென்பதோ – பெரும்
பேயென்பதோ
கண்பேசுவார் – இன்பக்
கதைபேசுவார்
பொட்டுவைப்பார் – கண்ணில்
பூட்டிவைப்பார்
ஆட்டுவிப்பார் – நம்மை
மாட்டிவைப்பார்
கூட்டுவித்தால் – என்ன
குற்றமுண்டாம்
தேட்டறிவால் – நாமும்
திருந்தவேண்டும்
நாடாளுவார் – அவரும்
நம்மவரே
கூடுநீங்கினால் – உயிர்க்குக்
குறியீடுண்டோ?
அறுசீர் விருத்தம்
முதியோன்2 : தன்னள வெண்ணி யொழுகாது
தகுதி யறியுந் திறனின்றி
மன்னும் அரசை மதியாது
மன்னன் மகளை வளைத்திட்டான்
தின்னும் உணவுக் குப்பில்லான்
தீம்பால் திரட்டை நினைப்பானோ
இன்னும் பலரும் இவ்வாறாய்
இயங்கின் உலகம் என்னாகும்
இளையோன்1: இலம்தேடி வந்த வர்க்கே
இனியதமிழ் உரைத்தி ருந்தான்
புலம்நாடிக் கவியு ரைக்கப்
புவிவேந்தன் அழைத்து வந்தான்
குலம்நாடிக் கவிவேந் தைத்தான்
கொல்லுமெனில் புவிவேந் துந்தான்
நலம்நாடி வருப வர்க்கே
நன்மைசெய யார்தான் உண்டு?
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment