பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி)
அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர்.
களம் : 4 காட்சி : 4
பஃறொடை வெண்பா
அல்லி : குடிமக்கள் போற்றும்
முடிவேந்து வாழ்க
அடிபணிவார் காக்கும்
அருள்வேந்து வாழிய
நாட்டின் ஒளிவிளக்காம்
நங்கை இளவரசி
ஏட்டி லெழுதவொணா
இன்பமுடன் வாழியவே
அரசன் : மங்கையீர் நீங்கள்
மதிக்குந் தலைவிதான்
பங்கமில் யாப்பைப்
பழுதறக் கற்கும்
குறையறு கல்வி
முறைபிறழ் வின்றி
நிறையுறக் காத்தல்தான்
நேரிழையீர் நுங்கடன்
அல்லி : ஏவும் பணிசெய்யும்
ஏழையேம் குற்றேவல்
தாவும் விரைபுரவி
தாள்பட் டெழுமோர்
துகளி லொருகூறு
தொய்வுற்ற றென்றால்
மகபோல் குடிகாக்கும்
மாமன்னர் கண்ணோடல்
ஏழையாம் செய்த
இரும்பே றதுவன்றோ
வாழை யடிவாழை
வாழ்கநின் தொன்மரபே
அரசன் : அற்றம் மறையேல்
அரசுக் கொளியாதீர்
உற்ற தெதுவெனினும்
ஊசி முனையளவும்
மாற்றல் குறைத்தலின்றி
மங்கையீர் ஓதுகநீர்
ஏற்றம் எதுவென
ஏலும் வகையறிவேன்
அல்லி : தஞ்சமெனத் தாழ்வாரைத்
தாங்கும் பெருமன்னா
பஞ்சும் நெருப்புமாய்ப்
பக்கத் திருத்தினால்
கொஞ்சமேனும் பற்றா
திருத்தல்தான் கேட்டதுண்டோ
விஞ்சுமோர் செங்கோல்
விறல்வேந் தறியாதோ
அரசன் : அஞ்சா துரைத்தாய்
அணங்கேயுன் சொல்லது
வஞ்சனை யாயின்
வதைப்பேன் அறிவாய்
அல்லி : முறைசெய்து காக்கும்
முடிபுனை வேந்தே
இறையுமது தாள்பணியும்
எம்மைப் பொறுத்தருள்க
மன்னவ மங்கை
அமுதவல்லி அன்புமிகத்
தன்னை உதாரனுக்குத்
தத்தம் புரிந்தாளாய்க்
காதலெனும் இன்பக்
கடலில் குளித்துவிட்ட
மாதிரியாய்த் தோன்றுகிறாள்
மற்றிதை மன்னர்
திருமுன்னே சாதித்தோம்
விண்ணப்பம் தாழ்ந்தே
அரசன் : வருமுன்னர்க் காக்கவென
வக்கணையா யிட்டதிரை
பாழ்பட்டுப் போனதென்ன
பாவா யறியாயோ
அல்லி : ஏழ்கடல் சூழும்
இரும்புவி யாள்மன்ன
வானும் நிலவும்
வரம்பி லடங்குமோ
தேனுண்ணும் வண்டு
திசைதான் அறியாதோ
வெற்றுத் திரையதுவும்
வேலியோ காதலுக்கு
முற்றும் பிழையாகும்
முன்னே யதுகாத்தல்
கொற்றவ நுங்கடன்
கொள்வேம் நுமதுபணி
அரசன் ; சற்றும் ஒளியாது
சாற்றினீர் நன்மைக்கே
ஒன்று மறியீராய்
உம்பணி மேற்கொள்க
கன்றிய கள்வரைக்
கைமெய்யாய் நான்பிடிப்பேன்
மன்றில் நிறுத்தியே
மாசறு எம்நீதி
ஒன்றும் வகைசெய்வேன் ஓர்ந்து
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment