திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்
திருக்குறளும் மாறாத விழுமியங்களும்
— அமைதி
எல்லோரும் அமைதிஉற்று நல்வாழ்வு
வாழ்ந்திடல் வேண்டும் என்னும்
நல்லெண்ணம் அல்லால் வே[று]ஒன்[று]
அறியேன் வள்ளுவப் பெருமானே….!
1.0.0.நுழைவாயில்
இன்று உலகம் முழுவதும் அமைதியும் நல்லிணக்கமும் பழுதற அமைய வேண்டும் என ஐ.நா.அவையின் ‘யுனெசுகோ’ அறிவுறுத்துகின்றது; வலியுறுத்துகின்றது.
உலக மக்களின் வாழ்க்கையின் ஆழத்தையும் உயரத்தையும் நீளத்தையும் அகலத்தையும் அணுகி, நுணுகி, ஆழ்ந்து, கூர்ந்து, அலசி ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அவர் தனிமனிதர்களிடம் குடும்பங்களில் சமுதாயங்களில் நாடுகளுக்குள் உலக நாடுகளுக் கு இடையில் அமைதியும் நல்லிணக்கமும் அரும்பி, மலர்ந்து, மணக்க வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.
அவற்றிற்கு உரிய விழுமியங்களை எல்லாம் திருவள்ளுவர் அழகுறத் திருக்குறளில் பதிவு செய்துள்ளார்.
2.0.0.அமைதி என்பதன் பொருள்கள்
அமைதி எனின், பொருத்தம், தன்மை, நிறைவு, காலம், செய்கை, அடக்கம், சாந்தம், மாட்சிமை, உறைவிடம் என அகர முதலி பல பொருள்களை வழங்குகின்றது.
எனினும் நடைமுறையில் அமைதி எனும் சொல் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள்களில் வழங்குகின்றது. அதுபற்றி யும் அறிதல் நலம். அவற்றுள் சில:
- சற்றும் ஒலி இல்லாத நிலை
மிகவும் அமைதியாக ஓர் இடம் இருந்தால், அங்குச் சுடுகாட்டு அமைதி நிலவுவதாகக் கூறுவது வழக்கம். இது புறஅமைதியாம்.
- மனத்தில் குழப்பம் இல்லாத நிலை
இடம் மாறினால் மனத்துக்கு அமைதி கிடைக்கும் என உளவியல் மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு. இது மனஅமைதி தொடர்பானது.
- ஒலி, ஓசை இல்லாத நிலை
ஆசிரியர் வந்ததும் வகுப்பில் அமைதி ஏற்பட்டது.
தந்தை வீட்டில் இருந்தால், குழந்தைகள் சேட்டைகள் / குறும்புகள் ஏதும் இரா. வீடே அமைதியாக இருக்கும்.
- முகத்தில் குழப்பம் இல்லாத நிலை, தெளிவான நிலை
துறவியின் முகத்தில் முழுமையான அமைதி நிலவுகின்றது.
- தொல்லை / துன்பம் இல்லாமை
அவருக்கு அமைதியான வாழ்க்கை அமைந்தது.
- நாட்டில் போர், கலகம் இல்லாத நிலை
நாட்டில் ஓரிரு விரும்பத் தகாத நிகழ்வுகள்தவிரப் பொதுவாக எங்கும் அமைதி நிலவுகிறது.
அமைதிக் காலப் பணி என்பது வேறு,
போர்க் காலப் பணி என்பது வேறு.
- அடக்கம்
அவரது அமைதி மிக்க குணம் அனைவரையும் கவரும்.
குறள்செல்வன் மிகவும் அமைதியான மாணவன்
- கலையில் இசைவு. மரபுக் கவிதையின் யாப்பில் காணப் படும் ஓசை அமைதி.
இலக்கண வழுவமைதி
விதிக்கு மாறாக இருந்தாலும், விலக்காக ஏற்கத் தகுந்தது.
- தவறு, தோல்வி போன்றவற்றுக்கான விளக்கம்
தேர்தல் தோல்விக்குக் கட்சித் தலைவர் என்ன அமைதி சொல்லப் போகிறார்…?
- பேசாத நிலை
நீ பேசாதே. அமைதியாக இரு.
வகுப்பில் மாணாக்கர்கள் பேசியும் சிரித்தும் கொண் டும் இருப்பார்கள். அப்போது ஆசிரியர், “அமைதியாக இருங்கள்.” எனச் சத்தம்போட்டுக் கூறுவார்.
சொற்பொழிவின்போது எல்லோரும் அமைதியாக இருத்தல் வேண்டும்.
- பதற்றம் இல்லாத நிலை
நோய்வாய்ப்பட்டவர் / விபத்தில் சிக்கியவர் பதற்றத்தில் இருப்பார். அப்போது, அவரிடம் “பதற்றப்படாதே. அமைதியாக இரு.” எனச் சொல்வது வழக்கம்.
- நதியில் வெள்ளம் இல்லாத நிலை
காவிரியில் வெள்ளம் வடிந்து. இப்போது அது அமை தியாக இருக்கின்றது.
- கடலில் கொந்தளிப்பு, சீற்றம், புயல் காற்று, ஆழிப்பேரலை கள் இல்லாத நிலை
நாளை கடல் சீற்றத்துடன் இருக்கும். எனவே, மீன வர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
- வழுவமைதிகள் 5 வகைப்படும். அவை:
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இட வழுவமைதி
கால வழுவமைதி
மரபு வழுவமைதி
பால் வழுவமைதி
பால் வழுவமைதி சான்று: மகிழ்ச்சி காரணமாக மகளை,
“வாடாச் செல்லம்” என அழைத்தல்.
- புயலுக்குப் பின் அமைதி
2.1.0.அமைதிக்குத் தற்காலப் பொருள்கள்
அமைதி என்னும் சொல் பல்வேறு பொருள்களில் வழங் கினாலும், தற்காலத்தில் உலக அளவில் போர், பகைமை, வன் முறை, பயங்கரவாதம் போன்றவை அற்ற நிலை என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.
2.2.0.காந்தி அடிகளது அமைதி பற்றிய கருத்துகள்
காந்தி அடிகளின் கருத்துப்படி ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாது இருத்தல், சமூக நீதி இல்லாதவரை அங்கே அமைதி இருப்பதாகக் கூற முடியாது. நீதி என்பது அமைதிக்கு அடிப்படையானதும் கட்டாயமானதுமான கூறு என்பதும், அமைதி என்பது வன்முறை இல்லாமல் இருத்தல் மட்டுமன்றி, நீதி இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமானதும் ஆகும்.
2.3.0.அறம்கூறும் புறச்சான்று:
அறவழியே அமைதிவழி
அறவழிச் செல்லும் மாந்தர்
அமைதிக் குவழி வகுப்பார்;
புறப்பகை இல்லா தார்க்குப்
பூமியே சொர்க்க மாகும்;
திறமை யைநம்பு வோரே
தேசத்தை வாழ்விப் பார்கள்..!
உறவினைப் போற்றிக் காப்போர்
உலகத்தைத் தாங்கு வார்கள்
கறவினம் ஒடி வந்து
கன்றுக்குப் பாலை ஊட்டும்;
பறவைகள் தேடிச் சென்று
பசிக்[கு]இரை தின்று வாழும்;
துறவிகள் நாடிச் சென்று
துவண்ட வரைத்தேற்ற வேண்டும்;
திறமுடன் வாழக் கற்போம்
தேசத்தில் அமைதி காப்போம்.
நன்றி: கவிஞர் சொ.பத்மநாபன்
3.0.0,அமைதியின் வகைப்பாடுகள் — 2
அமைதியை 2 வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம்.
அவை:
1.அகஅமைதி / மனஅமைதி
2.புறஅமைதி / வெளிஅமைதி
3.1.0.அகஅமைதி / மனஅமைதி பற்றிய விளக்கம்
குழந்தைகள்முதல் முதுமுதுவர்கள்வரை,
முதல் வகுப்பு மாணாக்கர்முதல்,
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்வரை,
ஏவலர்முதல் முதலமைச்சர்கள்,
தலைமை அமைச்சர்வரை,
ஆண்டிகள் முதல் ஆள்வோர்கள்வரை,
பக்தர்கள் முதல் மதத் தலைவர்கள்வரை,
படைப்பாளர்கள் முதல் படிப்பவர்கள்வரை,
தனிமனிதர்கள் முதல் உலக நாட்டுத் தலைவர்கள்வரை
அனைத்துத் தரப்பு மக்களும்,
ஆண்கள், பெண்கள் என்னும் பால் வேறுபாடு இல்லாமல், தங்கள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்தல், தங்கள் உரிமைகளை முறையாக நிலைநாட்டுதல், மற்றவர்கள் உரிமைகளில் தலையிடாமை, அவற்றை மதித்தல், அறம்சார் அனைத்து வகைப் பொதுத்தொண்டுகளையும் வேறுபாடும் மாறுபாடும் இன்றிச் செய்தல் போன்ற செயற்பாடுகளையும் செய்தல் வேண் டும்.
மேற்கண்ட செயற்பாடுகளால் அனைவரது மனங்களில் மகிழ்ச்சியும் முகங்களில் மலர்ச்சியும் முகிழ்க்கும். அத்தகு மகிழ்ச் சியும் மலர்ச்சியும் அவர்களில் மனங்களில் அமைதியை அமைக் கும் என்பது உறுதி, இதுதான் அகஅமைதி / மனஅமைதி என விளக்கப்படுத்தலாம்.
3.2.0.புறஅமைதி / வெளிஅமைதி பற்றிய விளக்கம்
மேலே குறிப்பிட்டபடி தனிமனிதர்களுக்கும், குடும்பங் களுக்கும் சமுதாயங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் தங்கள் நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் உலக மக்களுக் கும் பல்வேறு சிக்கல்களை, தீமைகளை, துன்பங்களைத் தீர்க்கும் வகைகளில் புரை தீர்ந்த — அறச்செயற்பாடுகளைத் தினை அளவு வேறுபாடும் மாறுபாடும் இன்றி நிறைவாகச் செய்தல் வேண்டும்.
அத்தகு செயற்பாடுகளால் தனிமனிதர்களிடத்தில், குடும்பங்களில், சமுதாயங்களில், நாடுகளில், உலக நாடு களில் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மலரும்; வளரும். அதனால், அமைதியான சூழல்கள் சூழும், இத்தகு புறவெளியில் அமையும் அமைதியையே புற அமைதி / வெளிஅமைதி என விளக்கப்படுத்தலாம்.
(தொடரும்)
பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,
கோவிற்பட்டி 628 502
Comments
Post a Comment