திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்
திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும்
பழமொழிகள் சில மூலப் பொருள்களிலிருந்து விலகி இன்றைக்குத் தனியான தவறான பொருள்களில் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒரு பழமொழியே “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பது. இதனைப் பேச்சு வழக்கில் “ஆத்துல போட்டாலும் அளந்து போடு” என்றும் பெருவாரியாகக் கூறுகின்றனர். உண்மையில் இது பழ மொழி அல்ல. திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றின் சிதைந்த வடிவமே ஆகும். அதனைப் பார்ப்போம்.
முதலில் நாம் பழமொழிக்கான விளக்கங்களைக் காண்போம்.
“இந்தப் பழமொழி நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நல்ல கருத்தொன்றை வலியுறுத்துகிறது. நாம் எதைச் செய்தாலும் அளவறிந்து செய்ய வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது என்ற பொருளினை இப் பழமொழி கூறுகிறது என்பர்.” இவ்வாறு அவினாசி குழந்தைகள் உலகம் வலைப்பூவில் < https://avinashikidsworld.blogspot.com/ > தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, “மேலும் இதில், மற்றொன்று வேறு வகையானது. ஆற்றில் கொண்டுபோய் விட்ட பிறகும் கூட நம் மனம் சும்மா இராது. இவ்வளவு பொருட்கள் தேவையில்லாமல் இவ்வளவு காலம் நம்மிடம் ஏன் இருந்தன? என்ற எண்ணம் ஏற்படும். இவற்றின் விளைவு தான் என்ன? நாம் எதைச் செய்தாலும் நிதானித்து, ஆர அமரச் சிந்தித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இப் பழமொழி நமக்குக் கற்பிக்கிறது. தேவையற்ற பொருள்களைக் கழிக்கும் போது கூட, சிந்தித்துத்தான் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவாக, இதில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
“இப் பழமொழிக்குத் தற்காலத்தில் புதியதோர் கருத்தும் கூறப்படுகிறது. ஆற்றில் போடுவது என்பதே தவறு. இதில் அளந்து போட்டால் என்ன? அளக்காமல் போட்டால் என்ன? எதுவும் நேர்ந்து விடாது. எனவே நம்முன்னோர் இப் பழமொழியை முற்கூறிய கருத்தில் கூறவில்லை. அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதே இதன் உண்மையான வடிவமாதல் வேண்டும். அகத்தில் (வயிற்றுக்கு) போட்டாலும் (சாப்பிட்டாலும்) அளந்து போட வேண்டும் (சரியான அளவு சாப்பிட வேண்டும்). அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அளவுக்கு அதிகமாக (அளந்து உண்ணாமல்) உண்பதே பல வித நோய்கள் தோன்றுவதற்குக் காரணமாயமைகின்றதெனக் கூறப்படுகிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியும் அளந்துண்ண வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது எனலாம். சுருங்கக் கூறின் எச்செயலைச் செய்யும் போதும் நிதானித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கம் நமக்கு ஏற்பட வேண்டும் என்பதையே இப் பழமொழி வலியுறுத்துகிறது எனலாம்.”
மனதோடு மனதாய் < http://manthodumanathai.blogspot.com/2008/08/blog-post.html > என்னும் வலைப்பூவில்
“. . . . அவாள்கள் பாசையில் ஆத்துல – வீட்டுல இதன் படி வீட்டுக்கே — குடும்பத்துக்கே – செலவு செய்தாலும் கணக்கிட்டுச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வருமாறு, நாகராச சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ என்கிற அமாவாசை என்னும் முகநூல் பக்கத்தில் < https://www.facebook.com/NakarajacolanMamlaEnkiraAmavacai/posts/461153967321913/ > 17.08.2013 இல் பதியப்பட்ட ஒன்று, பெண்மை வலைப்பூவில் , https://www.penmai.com/ > 12.08.2015 இல் பகிரப்பட்டது.(மூலப்பதிவு வேறாக இருக்கும்.)
“. . . . இந்தப் பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பழமொழியின் உண்மையான பொருள். “அகத்தில் போட்டாலும் அளந்து போடு…” இது, காலப்போக்கில் “ஆத்தில் போட்டாலும் அளந்து போடு” என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்று எழுதினார்கள்.
‘அகம்’ என்பது நம் உடலைத் தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவைக் கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
“அகத்தில் போட்டாலும் அளந்து போடு…!” இவ்வாறு பழமொழியின் உண்மை வடிவமாக வேறொன்றைக் கூறுகிறது.
“ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.” இப்படியும் ஒரு விளக்கம் உள்ளது.
வலைத்தமிழ் பக்கத்திலும் தமிழ்இலக்கியம் வலைப்பூவிலும் இடம் பெற்ற மற்றொரு கருத்து; மேற்கூறியவாறான இரண்டையும் மறுத்துப் பின்வருமாறு விளக்குகின்றன.
“இப்பழமொழியில் வரும் ‘ஆத்துல’ என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் ‘அகத்தில்’ என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப்பழமொழியில் வரும் பொருள் ‘மனம் அல்லது நினைவு’ என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். ‘அளந்து’ என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது ‘அறிந்து’ என்று வரவேண்டும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும். தொடர்ந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுப் பின்வருமாறு முடிகிறது.
“இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல
சரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.”
தமிழ்ச்சுரபி வலைப்பூ, மருவிய பழமொழிகள் < http://lifeoftamil.com/transformed-proverbs-1/ > முதலான சிலவற்றில் இதன் இறுதி விளக்கம் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.
பொதுவாகத் தொன்மைக் கதைப்பொழிவு ஆற்றுவோர் நல்ல தமிழ்ப் பழமொழிகளையும் கருத்துகளையும் அறிவார்ந்து சொல்வதாகக் கருதித் தப்பும் தவறுமாக விளக்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். புரியாத கருத்துகளாயின் மேலும் சிறப்பாகத் தவறாக விளக்குவார்கள். இப்பொழுது இணையத்தளம் கையில் சிக்கிவிட்டதால் தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆளாளுக்குத் தம் விருப்பம்போல் எழுதுவோர் பெருகி விட்டனர். எனவேதான், இப்பழமொழி குறித்தும் வெவ்வேறான தவறான விளக்கங்கள்.
இவை தவறு என்றால் எது சரி என்கிறீர்களா? இப்பழமொழி அமையக்காரணமாக இருந்த திருக்குறள்தான்!
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
(திருவள்ளுவர், திருக்குறள், 477)
இக்குறள்தான் மக்கள் வழக்கில் தவறாக இடம் பெற்றுப் பழமொழியாக மாறிவிட்டது.
மணக்குடவர், “பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.” என்கிறார். பரிமேலழகர். “ஆற்றின் அளவு அறிந்து ஈக – ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி – அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்” என விளக்குகிறார்.
காலிங்கர், “பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு அரசர் யாவர்க்கும் ஈந்து ஒழுக;” என்கிறார். பரிதி. “ஏற்பவர் தமக்கு உதவுவாரா மாட்டாரா என் அறிந்து கொடுக்க” என உரைத்தார். பரிப்பெருமாளும் காலிங்கரும் ‘வருவாய் அளவறிந்து ஈந்து ஒழுகுக’ என்று பொருள் கூறினர். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், “தனக்குப் பொருள் வரும் வழியினை அறிந்து அதற்கு ஏற்பக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுத்தலே பொருளைக் காத்துக் கொண்டு கொடுத்து வாழும் நெறியாகும்” என்கிறார்.
தமிழ் மக்கள் கொடை மடம் மிக்கவர்கள். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் போல், மயிலுக்குப் போர்வை அணிவித்த பேகன் மன்னன்போல் கொடுக்க எண்ணும் பொழுது அறச்சிந்தனையில் மட்டும் கருத்து செலுத்திப், பொருள் இருப்பு குறித்துக் கவலைப்படுவதில்லை. யாருக்கு, எதற்குக் கொடுக்கிறோம் என்றும் பொருட்படுத்துவதில்லை. ஆள்வோர் இவ்வாறு இருந்தால் அஃது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் ஆளும் நாட்டிற்கும் தீதாகும். எனவேதான் இக்குறளைத் திருவள்ளுவர் எழுதினார்.
திருவள்ளுவர் பொருள் வரும் வழி அறிந்து அதற்கேற்பக் கொடுப்பதை வரையறுத்துக் கொள்ளுமாறு தெரிவிப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளனர். யாருக்கு, எதற்குக்கொடுக்க வேண்டும் என ஆய்ந்தறிந்து அதற்கேற்பவும் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார். பொருத்தமில்லாதவர்க்கு, உண்மைத் தேவையில்லாதவர்க்கு, வேண்டப்படும் அளவிற்கு மிகையாக, வாரி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது வழங்கப்படுபவர்க்கும் நன்றன்று. ஆதலின் கொடுக்க வேண்டிய அளவை உணர்ந்து வழங்க வேண்டும் என்கிறார்.
சரி. இதற்கும் பழமொழிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பொறுங்கள். பார்ப்போம்.
ஆறு என்பதற்கு, வழி, வழிவகை, அறம், பயன், இயல்பு எனப் பல பொருள்கள் உள்ளன. எல்லாப் பொருள்களும் இக்குறளில் பொருந்துகின்றன. கொடுக்கும் வழியை, வழிவகையை, அறத்தின் தன்மையை, பயனை, இயல்பை அறிந்து தக்கவர்க்குத் தக்க அளவில் வழங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
எனவே, பொருள் வரும் வழியையும் இருக்கும் அளவையும் உணர்ந்து கொடுக்க வேண்டிய வழிவகையையும் உணர்ந்து கொடுக்க வேண்டும் என்னும் நிதி மேலாண்மையை விளக்கும் குறளில் ‘ஆறு’ என்பதை நீரோடும் ஆறாகப் பிற்காலத்தில் தவறாகப் புரிந்து கொண்டனர். எனவே, ஆற்றில் அளவோடு போடவேண்டும் எனப் பொருத்தமில்லாக் கருத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே, ‘போட்டாலும்’ என்பதைச் சேர்த்து ஆற்றில் போட்டாலும் என்று தொடங்கி ‘அளவறிந்து ஈக’ என்பதன் பொருளாக ‘அளந்து கொடு’ என்று சொல்லாமல், முன்சொல்லிற்கு ஏற்ப ‘அளந்து போடு’ என்று சொல்லி விட்டனர்.
“ஆற்றின் அளவறிந்து கொடு!” என்னும் பொருளே திரிந்து வழங்குவதை உணர்வோம்! திருக்குறளைப் போற்றுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
செருமனியில் திருவள்ளுவர் விழா & ஐரோப்பிய தமிழர்கள் நாள்
சிறப்பு மலர், திசம்பர் 04, 2019. பக்கங்கள் 62-64
Comments
Post a Comment