Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)





(ஆ) முருகன்: விநாயகனுக்குத் தம்பி இவன். இவனுக்குச் ‘சிவகுமாரன், சரவணன், கார்த்திகேயன், சேனாபதி, குகன், ஞானபண்டிதன், சுவாமிநாதன், சுப்பிரமணியன்’ என்று பல திருநாமங்கள் உண்டு. இவன் பிறப்பைப் பற்றியும் பலகதைகள் உண்டு. பாமரமக்கள் உணர்வதற்காகப் புனையப்பெற்றவையே இக்கதைகள். தந்தை பெரியார் அவர்கள் இக்கதைகளை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் சாடுகிறார்கள். அறிஞர்கள் இக்கதைகளில் அடங்கியுள்ள தத்துவத்தை மட்டிலும் எடுத்துக் கொள்கின்றார்கள்.
அண்டமெங்குமுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனிடத்திருந்து வந்தவை. ஆகவே அவை யாவுக்கும் அவன் அப்பனாகவும், பராசக்தி அன்னையாகவும் இருக்கின்றனர். தோன்றிய உயிர்களுள் உயர்வுதாழ்வு உண்டு, விலங்குக்கும் மனிதனுக்கும் எவ்வளவு வேற்றுமை? இதற்கெல்லாம் மேலாக மக்களுக்கும் அமைந்துள்ள தராதரமோ அளப்பரியது. கல்நிலையிலிருந்து கடவுள் நிலைவரை மக்களைக் காணலாம். மனிதன் எவ்வளவு மேலோன் ஆகமுடியும் எனபது ஒரு பெரிய வினா. இவ்வினாவுக்கு விடையாக அமைந்திருப்பவன் சிவக்குமாரன்.

பிறப்பு: உலகை உய்வித்தற்பொருட்டு உண்டு பண்ணப்பட்டவன் முருகக் கடவுள். அவன் உண்டான விதம்- பிறப்பு- வியக்கத்தக்கது. சிவபெருமான் யாண்டும் தன் சொரூபத்தில்- தடத்த நிலைக்கு வாராமல்-திளைத்திருந்தார். அவனது நிறைநிலையைக் கலைக்க முயன்ற காமனை- மன்மதனை- அவர் காய்ந்தார் [குறிப்பு 1]. ஆதி சக்தி அவரைக் குறித்துத் தவம் செய்து அவரை அடைந்தாள். பிறகு அவர்களுக்குக் கந்தன் மைந்தனானான். ஆகவே அவன் தோற்றத்துக்கும் காமத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. தவத்தின் விளைவே முருகவேள்.
சிவனாரது ஐம்பொறிகளின்று ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தினின்று மற்றோர் ஒளிப்பிழம்பு, ஆக ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிக்கிளம்பின. அவற்றின் தேசுவை (தேசசை)க் கண்டு அம்பிகையே திகைத்துப் போய்விட்டாள். கங்கையை உலர்த்திவிட்டு அவ்வொளித்திரள் சரவணப் பொய்கையில் பிரவேசித்தது. சரவணப் பொய்கை என்பது நாணல் காட்டிலுள்ள நீர்நிலை. ஆங்கிருந்து ஆறுமுகம் பன்னிருதோள் ஓர் உடல் உடைய, தெய்வக்குழந்தையொன்று உருவெடுத்து வந்தது. சண்முகன் என்பவன் அவனே.
கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர் அவனைப் பேண முன் வந்தனர். அவர்களின் பொருட்டு அவன் ஆறு குழந்தைகளாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதுண்டு. அவர்களிடம் பால் பருகின பிறகு அவன் ஓர் உருவமாகி விடுவான். விளையாட்டாகக் கணக்கற்ற உருவங்களையும் அவன் எடுப்பதுண்டு. படுத்துறங்கும்பொழுது ஒற்றை மேனியனாகி விடுவான். கார்த்திகை மங்கையர்களால் வளர்க்கப் பெற்றமையினால் அவனுக்குக் ‘கார்த்திகேயன்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது.
சரவணபவன்: சீவர்களின் தோற்றத்திற்கே முருகக்கடவுள் முன்மாதிரியாகின்றான். சரவணப்பொய்கை கருப்பைக்குச் சமமானது. அது முற்றிலும் சக்தி சொரூபம், சிவசேதனம் என்னும் பித்து (விந்து) அதன்கண் நாட்டப்பெற்றது. அப்பொழுது பஞ்சேத்திரியங்களும் மனமும் ஒன்றுபட்டன. உயிர்களுள் ஆறு அறிவோடு கூடியது மிக உயர்ந்தது. பரஞானம் அல்லது இறைஞானத்தைப் பெறுவதற்கு ஆறு அறிவு உயிரே முற்றிலும் தகுதி வாய்ந்தது. கண், காது, வாய் போன்ற ஒவ்வோர் இந்திரியமும் தனித்தனியே பயிற்சிபெறுகின்றது. கார்த்திகை மாதர் ஆறுபேரிடம் ஆறு வடிவங்களில் இருந்து வளர்பொருள் பஞ்சேந்திரியங்களும் மனமும் நல்ல பயிற்சி பெறுதலாகும். உறங்கும் பொழுது எல்லா இந்திரியங்களும் மனமும் ஒடுங்கி விடுவதால் ஓர் உருவம் ஆய்விடுகின்றது.
சொரூப விளக்கம்: ஆறுமுகமும் பன்னிருதோளும் ஒரு திருமேனியும் உடைய சரவணபவன் தோன்றியதில் பொருள் பல புதைந்து கிடக்கின்றன. இயற்கையின் அமைப்பில் பல தலைகளுக்குத் தேவை இல்லை. இரண்டு தலையுடன் ஏதாவது பிறந்தால் அது பிழைக்காது. ஆறுதலைகளுக்கு வேலை என்ன என்ற வினா எழுகின்றது. பல கைகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்; பல தலைகளைப் பயன்படுத்துதல் எவர்க்கும் முடியாது. சீவர்களுள் மனிதனாகப் பிறந்தவனிடத்து உள்ள மகிமைகளெல்லாம் உருவெடுத்தவன் முருகன். உயர்ந்த தத்துவங்களை உருவகப்படுத்தி ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலையாகக் கருதப்பெறுகின்றது. தலைபெறுகின்ற சிறப்பை வேறு எந்த உறுப்பும் பெற முடியாது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தின் வடிவத்தின் வகை அறிவதற்கு ஐம்பொறிகள் அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக எண்ணவும் உணரவும் வல்லது மனம். இவை ஆறும் ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை. முகம் போன்று இவை பாராட்டப்பெறல் வேண்டும். முறையாக இவற்றை வளர்க்குங்கால் ஒவ்வொன்றும் ஒரு முகத்துக்குச் சமமானது.
பகவான்’ என்னும் சொல்லுக்கு ஆறுகுண சம்பந்தன் என்பது பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், செல்வம் கீர்த்தி ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்து உள்ளனவோ அவன் பகவான், இந்த ஆறனுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக அமைந்து விட்டாலேயே சாதாரண சீவன் ஒருவன் பெருமகனாகி விடுகின்றான். இந்த ஆறு தெய்வமகிமைகளும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் மிளிருமானால் அவன் முருகக் கடவுளாகவே ஆகிவிடுகின்றான். பிறந்தது நாணற்காடு ஆகிய பிரபஞ்சம். ஆங்கு வளர்ந்திருந்து அடையப்பெறும் பெருமையாவும் தெய்வ சம்பத்துகளாம். ஆறுமுகமுடைய குமரேசன் இந்தக் கோட்பாட்டை ஓயாது உயிர்களுக்கு நினைவூட்டி வருகின்றான்.
ஆறுமுகத் தத்துவத்தில் தன்னையே மறந்து ஆழங்கால் பட்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைத் துதிக்கும் பாடல் இது:
ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே; 
⁠ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே; 
கூறும்அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே; 
⁠குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே; 
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே; 
⁠வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே; 
ஆறுமுகம் ஆனபொருள் நீஅருளல் வேண்டும்; 
⁠ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே.
 
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ 
பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
 
குறிப்பு 1
. இவ்வரலாறு இன்னொரு விதமாகவும் சொல்லப்பெறுவதுண்டு. சனகாதி முனிவர்கட்கு சிவதத்துவத்தை உபதேசிக்கும் பொருட்டு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய கதை.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்