இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார்
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார்
ஆ. பதிப்புரை & நன்றியுரை
பதிப்புரை(2002)
தமிழின் தொன்மைச் சிறப்பையும், முதன்மைச் சிறப்பையும், தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும் உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே!
சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல் சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியத்தையும்
அறியும் வாய்ப்பைப் பெற்றிருப்பின் தமிழ் உலக மொழிகளின் தாய் என்பதை
நிறுவி இருப்பார் எனப் பன்முறை எடுத்து இயம்பியவர். எனவேதான், தமிழ்
இலக்கியமே பழந்தமிழர் வரலாறு அறிவிக்கும் மூலங்களுள் முதன்மையானது
என்பதைக் கூறி வரலாற்று ஆசிரியர்கள் தமிழ் இலக்கிய அறிவு பெற வேண்டும் என
வலியுறுத்தியவர், இன்றைய இலக்கிய எழுத்தோவியர்களுக்கு
முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவரும் பேராசிரியப் பெருந்தகை
முனைவர் சி. இலக்குவனார் அவர்கள்தாம்.
புலவர்களில் பலரே சங்க இலக்கியச்
சிறப்பை அறிந்திராத சூழலை மாற்றிப் பொது மக்களும் சங்க இலக்கியங்கள் பற்றி
அறியப் பெரும் பேராசிரியர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. இவற்றிற்கு
அடிப்படையான நிகழ்வினைப் பேராசிரியர் வரிகளிலேயே பின்வருமாறு
குறிப்பிடவிழைகின்றேன்:
“வட்டத் தொட்டிக்
குழுவினர் முதன்மையாக இருந்து கம்பர் விழா ஒன்றை நடத்தினர். அவ் விழாவில்
சொற்பொழிவாற்றிய திரு. திரிமூர்த்தி என்பார் சங்க இலக்கியங்களை வங்காளக்
குடாக் கடலில் போட வேண்டும்; இரும்புக் கடலை போன்ற அவை
யாருக்கு வேண்டும் என்று குறிப்பிட்டார். அங்கு கூடியிருந்த தமிழர் கை
கொட்டி ஆர்ப்பரித்து அவ்வுரையை வரவேற்றனர். சங்க இலக்கியத்தின் இனிமையை
அறியாததால் அவ்வாறு செய்தனர். கம்பரே சங்க இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றவர்
என்பதையும் அவர் அறியார். சங்க இலக்கியக் கடலில் முழுகி எழுந்ததால்தான்
இராமாயணத்தை இனிய தமிழில் அவரால் எழுத முயன்றது என்பதனையும் அறிந்திலர். சங்க இலக்கியக் காலமே தமிழிலக்கியத்தின் ஏன், தமிழர்களின் பொற்காலம். இருபதாம் நூற்றாண்டின் மேலைநாட்டு உயர்ந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டு எண்ணத்தகும் பெருமை படைத்தவை அவை; இயற்கையையும் மக்கள் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை. உயர்நலமும்
இனிமையும் எழிலும் கொண்டு விளங்கும் சங்க இலக்கியமாம் தமிழர் கருவூலத்தைக்
கடலில் கொட்ட வேண்டுமென்று இவர் கூறுதலும் அதனைத் தமிழர்களே வரவேற்பதும்
என்ன பேதைமை! சங்க இலக்கியத்தைக் கற்று அதன் இலக்கியத்தைப்பற்றி
மக்கள் அறியுமாறு செய்தலே என் கடனாகும் என்று கருதினேன். கம்பரின்
அன்பர்கள் ‘கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்’ என்ற
முழக்கத்தைக் கொண்டிருந்தனர். ‘சங்கத் தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம் ‘என்ற முழக்கத்தை யான் மேற்கொண்டேன். ‘சங்க இலக்கியம்’ என்னும் பெயருடன் வார ஏடு ஒன்றைத் தொடங்கினேன்.
சங்க இலக்கியப் பாடல்களுக்கு விளக்கமும் சங்க காலத் தமிழ் மக்களின்
வரலாற்றுச் செய்திகளையும் தாங்கி அது வெளிவந்தது. மாணவர்களிடையேயும்
பொதுமக்களிடையேயும் தமிழ் எழுச்சி உண்டாக அவ்வேடு பெரிதும் துணைபுரிந்தது.
சங்க இலக்கியம்பற்றி ஏனைய இதழ் ஆசிரியர்களும் கற்றவர்களும் எண்ணத்
தொடங்கினர். புலவர்கட்கு மட்டும் அறிமுகமாயிருந்த சங்க இலக்கியம் பொதுமக்கள் முன்னிலையிலும் வரத் தொடங்கியது. இரும்புக் கடலை என இகழப்பட்ட பாடல் இன்சுவை அமுதாகக் கருதப்பட்டது.
இசைத் தமிழ்ப்
பாடல்கள் சில என்னால் இயற்றப்பட்டு இசைமணி சங்கரனாரால் இசையமைக்கப் பெற்று
இவ்வேட்டில் வெளிவந்தன. …. … …. … … …. … … … … …
… … … திரு.கனகசபாபதியும் என்னுடைய இசைப்பாடல்களை அவ்வப்பொழுது
பாடுவார்கள்.”
மேலும் தூய தமிழ்ப் பற்றை மக்களிடையே வளர்த்தலையும் சங்க இலக்கியத்தைப் பரப்புவதையும் கடமையாகக் கொண்டு ‘சங்க இலக்கியம்’, ‘இலக்கியம்’ ஆகிய இதழ்களை நடத்திய பேராசிரியப் பெருந்தகையவர்கள், தமிழர் வாழ்வியலைச் சங்க இலக்கியம் வாயிலாக எடுத்துரைக்கும் இந் நூலையும் படைத்தளித்தார். இந் நூல் மீண்டும் இப்பொழுது வெளியிடப் பெறுகிறது.
இலக்குவனார் திருவள்ளுவன்
(2002 ஆம் ஆண்டு) சென்னை. 600 004
000
நன்றியுரை
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
(சங்கக் காலம்) என்னும் இந்நூலில் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர்
சி.இலக்குவனார் அவர்கள், சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழர் நாகரிகம், வரலாறு, பண்பாடு, நகரம், அரசு, மக்கள், புலவர்கள், மெய்யுணர்வுக் கொள்கை, இல்லறம், வணிகம், போர்கள், முதலானவற்றின் சிறப்புகளை எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்கள். முதலில் 1962இல் புதுக்கோட்டை வள்ளுவர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பொழுது சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் இந்நூல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. 2002இல் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ வெளியிடப்பட்ட பின்பு சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலை மாணாக்கர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பண்டைத் தமிழர்களின் சிறப்பை அறிய உதவும் தக்கதொரு நூலைப் பாடநூலாகத் தெரிவு செய்துள்ள சிம் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்த்துறையினருக்கும் இணையத்தின் நன்றி. மாணாக்கர்களுக்கும்
வேலைவாய்ப்புத் தேர்வர்களுக்கும் பெரிதும் உதவும் இந்நூலை இலக்குவனார்
இலக்கிய இணையம் மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
நூல் அச்சிற்குத் துணை நின்ற மூவேந்தர் அச்சகத்தார் (இராயப்பேட்டை, சென்னை 600 014), அட்டை வடிவமைத்த பொறி.தி.ஈழக்கதிர் ஆகியோருக்கும் நன்றி.
பொறி இ.திருவேலன்
தலைவர்
இலக்குவனார் இலக்கிய இணையம்
12அ, வீணா தோட்டம், இரகுராமன் தெரு
அரும்பாக்கம், சென்னை 600 106
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Comments
Post a Comment