Skip to main content

புள்ளிகளும் கோலங்களும் ! – மெல்பேன் செயராசர்

அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017

புள்ளிகளும் கோலங்களும் !



வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால்
வினையாவும் குடிபுகுந்து விட்டதென  நாம்நினைப்போம்
புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால்
நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயன்று நிற்போம் !
புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும்
புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும்
புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின்
நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் !
நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம்
வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார்
சொல்லவல்ல விசயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும்
நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் !
எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும்
இழுக்குடைய செயல்செய்தால் மெய்மையங்கே அழிந்துவிடும்
புள்ளிவைத்த மானைத்தான் யாவருமே விரும்பிடுவார்
கள்ளநிறை நரியதனை காதலிப்பார் யாருமுண்டோ !
புள்ளியது இடம்மாறின் கோலமெல்லாம் மாறிவிடும்
கரும்புள்ளி செம்புள்ளி காறியே உமிழவைக்கும்
நெற்றியிலே வைக்கும்புள்ளி வெற்றியினைக் காட்டிநிற்கும்
நற்றமிழில் புள்ளியது நவின்றுவிடும் இலக்கணமே !
ஏட்டினிலே புள்ளிவைத்தால் எல்லாமே கிழிந்துவிடும்
புள்ளியில்லா எழுத்தினிலே தெள்ளுதமிழ் வளர்ந்ததுவே
பிற்காலப் பெரும்புலவோர் புள்ளியினைத் தான்புகுத்தி
இக்காலத் தமிழெழுத்தை எமக்களித்தார் ஏற்றமுடன் !
பொட்டென்னும் பேரினிலே புள்ளிவைப்பார் தமிழ்மக்கள்
கட்டழைக் காட்டியது களிப்பினையே நல்கிநிற்கும்
மங்கலத்தைக் காட்டுதற்கு குங்குமத்தைப் பொட்டுவைத்து
சந்தனமும் சேர்த்திடுவார் சந்தோசம் கூடிவரும் !
பெரும்பணத்தைக் கொண்டாரை பெரும்புள்ளி எனவழைப்போம்
அரசியலில் பெரும்புள்ளி அனைத்தையுமே அள்ளிவிடும் 
பெரும்புள்ளி பலபேரும் பேயாட்டம் ஆடிடுவார்
புள்ளியது பெயராலே புரட்சியே வெடித்தும்விடும் !
வாசலிலே கோலமிட்டு மங்கலத்தைக் காட்டிடுவோம்
மாக்கோலம் பூக்கோலம் வகைவகையாய் போட்டிடுவோம் 
புள்ளிவைத்துக் கோலமிடும் புள்ளிமானைக் குறிபார்க்கும்
நல்லபுள்ளி கெட்டபுள்ளி நாமறிந்தால் நல்லதன்றோ !
  நல்லபுள்ளி நல்லகோலம் நலம்பயங்கும் யாவருக்கும்
  அல்லல்தரும் புள்ளியினால் அவதூறே வந்துநிற்கும் 
  புள்ளியினைத் தேர்ந்தெடுத்து புதுக்கோலம் அமைத்திடுவோம்
  நல்லதெல்லாம் எம்வாழ்வில் அமைந்துவிடும் புள்ளியினால் !
மெல்பேன் செயராசர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue