யாதும் ஊரே யாவரும் கேளிர் 1/8 – கருமலைத்தமிழாழன்



அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர் 1/8

தமிழ்த்தாய் வாழ்த்து

புத்தமுதாய்   இலங்குதொன்மைத்    தமிழைப்   போல
பூமிதனில்    வேறெந்த    மொழிதாம்   உண்டோ
முத்தமிழின்    பிரிவைப்போல்    உலகந்    தன்னில்
முகிழ்ந்துள்ள   மொழிகளிலே    பிரிவு    உண்டோ
நித்திலமாய்   ஐந்துவகை    இலக்க    ணத்தை
நீள்புவியில்    பெற்றவேறு    மொழிதான்    உண்டோ
எத்தனையோ    மொழிகளினைத்    திணித்த    போதும்
எழில்மாறாத்    தனித்தமிழ்போல்    வேறிங்    குண்டோ !

அகத்திற்கும்    புறத்திற்கும்    நெறிகள்    சொல்லும்
அருந்தமிழைப்    போலெந்த    மொழியிங்    குண்டு
தகவுடைய    திருக்குறள்போல்    வாழ்வைக்    காட்டும்
தனிநூல்கள்    வெறெந்த    மொழியி    லுண்டு
நகமகுட     விரல்கள்போல்    காப்பி   யங்கள்
நல்லெட்டு    பத்துதொகை     எங்கே   உண்டு
முகத்திற்கு    முன்நிற்கும்    மூக்கைப்    போலே
முன்பிறந்த   தமிழ்க்கிணையாய்    பிறிதெங்    குண்டு !

ஆழ்வார்கள்    நாயன்மார்    சமணர்   யாத்த
அரும்பாக்கள்    கொண்டமொழி;    இறைவன்   போற்றி
வாழ்வித்த   சங்கமொழி;    கணினிக்    கேற்ற
வளமுடைய    மொழியென்றே   உலகம்    ஏற்று
வாழ்த்தியவிஞ்    ஞானமொழி;    சித்தர்    தந்த
வளமருந்து   ஞானமொழி;    தமிழுக்    கீடாய்
வாழ்மொழியில்    எம்மொழிக்கு   மண்ணி    லின்று
வளம்கொண்ட  மொழியென்னும்  தகுதி உண்டு ! தாயே வணங்குகிறேன்  !
 இரண்டாம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு
இடம் இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.
நாள்  : வைகாசி 26, 2048 /  09 06 2017
கவியரங்கம்
தலைமை   கவியரசு  ஆலந்தூர் மோகனரங்கம்
தலைப்பு யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடுபவர் பாவலர் கருமலைத்தமிழாழன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue