பழங்காலத் தமிழ் மக்கள், அழகின் வீடாகிய இயற்கையை வியந்தார்கள். விழியாலும் அதைப் போற்றினார்கள். விரும்பி வழிபட்டார்கள். இறைவனுக்குரிய முதன்மை வழிபடு பொருளாக இயற்கையை அமைத்துக் கொண்டார்கள். இயற்கை அழகை விழைவுடன் போற்றிய மரபு இப்படித்தான் பிறந்து, வளர்ந்து, தலைமை பெற்றது.மனதை மயக்கிய இயற்கைக்கு அடுத்தபடியாக, மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்ட பொருளைப் போற்றும் பழக்கம் ஏற்றம் பெற்றது. வேட்டையாடி, காட்டில் உணவு தேடுவதையே நாளும் நாடிய தொழிலாகக் கொண்டிருந்த மக்கள், வழிவந்த முறையைக் கைவிட்டனர். ஓரிடத்தில் கால் ஊன்றினர். விழுமிய தொழிலாகிய உழவை மேற்கொண்டனர். மூங்கிலில் விளைந்த நெல்லை, வயல் பயிர்தாங்கும் செந்நெல்லாக மாற்றினர். அந்த உணவு நெல் அவர்களுடைய மிக முக்கிய பொருளாகவும், பெரிதும் விரும்பிப் போற்றப்படும் முதன்மைப் பொருளாகவும் ஆனது. அதனையும் தலைமேற்கொண்டனர். தொலை நாள் தமிழ்மகள், பூவோடு நெற்கதிரையும் தலைமுடியில் சூடி மகிழ்ந்தாள். இப்படி நெல்லுக்கு வாடாப் பெருமையைக் கொடுத்தாள். இதனை,""செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு தடந்தாள் ஆம்பல் மலரொடும் சூடி''என்று சங்க இலக்கியமாகிய அகநானூறு (78:17-18) அறிவிக்கிறது. இந்தப் பழக்கம், தொடர்ந்து நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது என்பதை,""தளையவிழ்ப் பூங்குவளை மதுவிள்ளும் பைங்குழல்கதிர்நெல் மிலைச்சிய புன்புலைச்சியர்''(திருநாளைப்போவார்-10)என்று பெரியபுராணம் அறிவிக்கிறது. மேலும், நெற்கதிருடன் அறுகம்புல், குவளைமலர் ஆகியவற்றையும் சேர்த்து மாலையாகக் கட்டி, சூடிக்கொண்டார்கள் தமிழர்கள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.""தொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்துவிளங்குகதிர் தொடுத்த விரியல் சூட்டி''(சிலம்பு:10132-133)என்ற வரிகள் அந்தப் பழக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.தலைமேல் வைத்து, மகிழ்வு நிலையில் போற்றப்பட்ட நெற்கதிர், பிறகு இறைவழிபாட்டுக்கும் உரிய பொருளாக மாறியது. வீரச்செயல் அல்லது அருஞ்செயல் புரிந்தபோது இறந்த ஒருவனுக்கு, முன்பு நடுகல் அமைக்கப்பட்டது. இதைத் தொல்காப்பியம் சொல்லும். நடப்பட்ட நினைவுச் சின்னமான நடுகல், பின்பு தொழப்படும் புனிதத் தன்மையைப் பெற்றது. அப்போது அதை, நெல் தூவி வணங்கும் முறை தொடங்கியது.""கல்லே பரவின் அல்லதுநெல்லுகுத்துப் பரவும் தெய்வமும் இலவே''(புறம்:335.11-12)எனப் புறநானூறு கூறுகிறது. கடவுள் சிலையின் முன் அடி பணிந்த பழக்கமும் நிலை பெற்றது.""இரும்செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇநெல்லொடு மலரும் தூஉய்க் கைதொழுது''என்று நெடுநல்வாடை (42-43) சொல்கிறது.நெல்லொடு முல்லைப் பூவைக் கலந்து தூவப்பட்ட நடைமுறையை, முல்லைப்பாட்டு (8-10) கூறுகிறது,""அகநக ரெல்லாம் அரும்பவிழ் முல்லைநிகர்மலர் நெல்லொடு தூய்'' (சில.9:1-2) என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.பழந்தமிழர், மணமக்களை மலரும், நெல்லும் தூவி வாழ்த்தினார்கள் என்று அகநானூறு வழி அறிகிறோம்.""நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரிபல்லிருங் கதுப்பின் நெல்லொடு தூய்''(அகம்:86-15-16)ஸ்காட்லாந்தில் நெல்லைத் தூவி மணமக்களை வாழ்த்தும் பழக்கம் சில குடும்பங்களில் உள்ளது என்று, ஒரு பாதிரியார் சொன்னதாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரா.ந.சஞ்சீவி கூறியுள்ளார். நெல்லைத் தூவி மணமக்களை வாழ்த்தும் முறை, பிறகு அரிசிதூவி வாழ்த்தும் முறையாக மாறியது. மணமக்களை நோக்கி வீசி எரியப்பட்ட நெல்லின் கூர்முனை, மக்களின் கண்ணில் பட்டோ பிற வகையாலோ பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும். தரையில் விழுந்த நெல் பாதத்தில் தைத்திருக்கக்கூடும். இப்படி உடலுக்கு ஊறு விளைவித்த காரணத்தால், நெல்லுக்குப் பதிலாக அதன் உள்ளீடான அரிசியைத் தூவி வாழ்த்தும் முறை பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.கம்பு, கேழ்வரகு, சோளம் போன்று உருண்டை வடிவமாக இல்லாமல் நீளமான-நெட்டையான உருவம் கொண்டிருந்த காரணத்தால் நெ-என்ற மூலத்தின் அடிப்படையில், நெல் என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. உள்ளிருக்கும் பொருளைக் குறிக்கும் "அரி' என்பதன் அடிப்படையில் "அரிசி' என்பது வந்தது. காற்சிலம்பின் உள்ளே இருக்கும் மாணிக்கம், அரி எனப்படும்.÷இறந்த தமிழனுடைய வாயில், இறுதியாக, உண்ட அரிசிச் சோற்றை வைத்து வழியனுப்பும் பழக்கம் முன்பு இருந்திருக்கிறது. இது வாய்க்கரிசி என்று கூறப்பட்டது. அது இயல்பான வெள்ளை நிறத்துடன் இருந்தது.இறைவனை வணங்கும்போது உயிர்ப்பலி தரும் பழக்கம் அண்மைக் காலம் வரை நிலவியது. காளி வணக்கத்தில் இது கட்டாயமாக இடம் பெற்றிருந்தது. வெட்டப்பட்ட விலங்கின் ரத்தத்துடன் அரிசியைக் கலந்து வீசும் முறை இருந்தது என்பதை,""குருதியோடு கலந்த தூவெள்ளரிசிசில்பலி செய்து'' (233-34)÷என்று திருமுருகாற்றுப்படை உரைக்கும்.இறந்தவனுக்குத் தரும் அரிசி வெண்ணிறமானது. வழிபாட்டுக்குரிய அரிசி செந்நிறமானது. ஆகவே வாழ்த்துக்குரிய அரிசியை வேறுபடுத்திக் காட்ட வேண்டியது இன்றியமையாக் கூறானது. நெல்லின் மேற்புறம் ஏறத்தாழ மஞ்சள் நிறம் கொண்டது. நெல்லுக்குப் பதிலாக, வாழ்த்தப் பயன்படும் அரிசிக்கு மஞ்சள் நிறம் ஏற்றினால் பொருத்தமாக அமையும் என்ற கருத்து உதயமானது. மஞ்சள் நிறம் மங்கலத்துக்கு உரியது என்ற உணர்வும் துணைபுரிய, இந்த இரண்டு எண்ணங்களின் அடிப்படையில் மஞ்சள் நிறம் ஏற்றப்பட்ட அரிசி-மஞ்சள் அரிசி, மணமக்களை வாழ்த்துவதற்கும் பிற மங்கல நிகழ்ச்சிகளுக்கும் தகுதியான இடத்தைப் பெற்றது. மணமக்களை வாழ்த்த மட்டுமன்றி பிறரை மங்கலமாக இருக்க வாழ்த்தவும் மஞ்சள் அரிசி தூவும் பழக்கம் இன்றளவும் தமிழரிடையே இருந்து வருகிறது.
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment