கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து "சுயமரியாதை' என்ற சொல் தமிழர்களுக்குப் பழக்கமாகிவிட்டதொன்று எனில் மிகையல்ல. ஆனால், சுயமரியாதை என்பது நமது முன்னோர்கள் வாழ்க்கையில் இயல்பாக அமைந்ததொன்று.இன்றைக்கு அதிகாரம் பெற்ற யாரிடத்தும் கற்றறிந்த மாந்தர் யாராயினும், வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், கும்பிட்டும் புகழ் மொழிகளை மட்டும் பாடி இன்புறுவதைக் காணலாம். சுயமரியாதை என்பதே பிறர்க்குக் காட்டும் மரியாதையே என்பதாயிற்று!தமிழ்கூறு நல்லுலகம் சங்ககால சுயமரியாதை பற்றி என்ன சொல்கிறது?பிறரைப் பாடி பரிசில் பெறும் வறிய புலவன் ஒருவன், நாடாளும் மன்னனை, அவனது அவையிலேயே தன் சுயமரியாதை உணர்வை வெளிப்படுத்திக் காட்டும் முகமாக ஒரு பாடல் பாடினார் எனில் அவரை நாம் நினைக்கத்தானே வேண்டும்?வனப்பு மிக்க வளங்கள், எங்கு நோக்கினும் சிறு மலைகள், சில்லென்ற சிற்றோடைகள், நீண்டு நெளியும் சிறு நதிகள் இவைகள்தாம் திருக்கோவிலூரை முதன்மை நகராகக் கொண்ட மலையமானாட்டிற்கு அழகு சேர்ப்பவை. பகைவர்கள் வெல்ல இயலாத வீரம் செறிந்த பூமி. இந்நாட்டை அந்நாளில் வல்வில் ஓரியை வென்று கொல்லியை கொடையாகச் சேரனுக்கு ஈந்த பெருவீரன் வள்ளல் திருமுடிக்காரி ஆண்ட காலமது.இவன் அரசுக் கட்டிலில் அமர்ந்து கோலாச்சிய பழம்பெரும் பதிக்கு ""செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்'' வந்தார்.காரியின் பெரும்வீரம், ஈகைக் குணம் அறிந்த கபிலர், காரியின் கொடைச் சிறப்பு, கொற்றச் செழிப்பு, குணநலன், பிறநலன் இவற்றின் பொருள் விளங்க, புகழ் தோய்ந்த பாடல் பல எழுதி அவனது அத்தாணி மண்டபத்தில் அவனிடம் அளிக்கிறார். வரையாது வழங்கும் வள்ளல் திருமுடிக்காரி அன்றைய நாளின்கண் அரண்மனை வந்துற்ற அத்துணை புலவர்களுக்கும் அளித்தான் வெகுமதிகளை ஒருசேர, ஒரு நிறையோடு!கிடைத்தது அரசப்பொருள் என்றெண்ணி மயங்கிடாது, மகிழ்ச்சி அடையாது மாறாக வருந்தினார். வாழ்வது வறுமையில் என்றாலும் பாடிப் பிழைப்பது தொழில் என்றாலும், செம்மை சேர் செம்பொருளிடத்து அல்லாது, இம்மையில் எவர்க்கும் தலை குனியாது வாழும் புலனழுக்கற்ற அந்தணாளன் அல்லவா? கபிலர். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம், குற்றமே என்ற பெரும்புலவர் நக்கீரரின் நண்பர் அல்லவா கபிலர்?தக்கவாறு தம் புலமை அறியாது பிறரோடு ஒன்றாக எண்ணிய வள்ளலின் திருமுகம் நோக்கிக் கூறலானார். பகை குலம் அஞ்சும் புகழ்வேந்தே! பாரில் புகழ் பரக்க வாழும் வள்ளலே! நான் கூறுவதைச் சிறிது கேட்பாயாக. வையத்தில் உள்ள ஒரு வள்ளலை நாடி பரிசில் பெறவிழையும் பொருந்திய அவனும் வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்னாது பரிசுகளை அளிப்பது அவனுக்கு மட்டுமல்ல, அவனையொத்த எவர்க்கும் எளிதே! வள்ளல்கள் யாரும் இதைச் செய்யாதிரார். இதற்கு வேண்டுவனவெல்லாம் மனம் ஒன்றே!ஆயின், பரிசில் பெற வருவோர் யாரும் ஒரே நிலையான தகுதியைக் கொண்டவர்களாக அல்லர். ஒவ்வொருவரும், அவரவர்தம் கல்வி, கேள்வி குண நலன்களுக்கு ஏற்ப வேறுபடுவர். இந்நிலையில், பரிசில் பெற விழையும் அனைவரையும் அவரவர்தம் தகுதிக்கு ஏற்ப பரிசில் அளிப்பதே சாலச் சிறப்பு. ஆனால், இவ்வகையில் வருகின்றவர்களை அளவிடும் ஆற்றல் வேண்டும் ஆளும் அரசனுக்கு! உன்பால் இவை இரண்டு குணநலன்களும் நிரம்ப இருக்கும் எனக் கருதியே இவண் வந்தனை யான். ஆனால் வரிசைக் காணும் பேராற்றல் நின்பால் இல்லை என்பதை ஈண்டு உணருகிறேன்.வள நாட்டை ஆளும் வளவ! நினது மனம் பரிசில் அளிக்கும் குணம் மட்டும் உடையது, என்பதை யாரும் ஏற்கவில்லை. வரிசை அறியும் அறிவும், ஆற்றலும் உடையவன் நீ என்பதைத்தான் நான் காண விரும்புகிறேன். எல்லோரையும் பொதுவாக எண்ணி பரிசில் அளிக்காது அவரவர் தகுதி அறிந்து பாராட்ட விழைய வேண்டும். இதுவே என் போன்றோருக்கு உவகையும், உறுதியையும் ஈட்டும் பொருளாக அமையும். இனி வரும் காலத்தில் இவ்வண்ணம் செய்து புகழ் கொண்டு புரப்பாயாக என்ற பொருளில் சுயமரியாதை ததும்பும் பாடல் ஒன்றைப் பாடிச் சென்றார். பாடல் இதுதான்.""ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்பலரும் வருவர் பரிசில் மாக்கள்;வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்ஈதல் எளிதே; மாவண் தோன்றல்!அது நன் கறிந்தனை யாயின்,பொது நோக்கு ஒழி மதி புலவர் மாட்டே''(புறம்-121)
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment