இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம்



தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும் படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது.இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன?"இலக்கியம்', அறைக்குள் இருக்கும் வைரக்கல் என்றால், "இலக்கணம்', அதனைப் பார்ப்பதற்கு}கதவைத் திறக்கத் துணை செய்யும் சாவி}திறவுகோல் என்பதை இங்கு இரண்டு மேற்கோள்களால் விளக்கலாம்.""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்''என்பது திருக்குறள்}கடவுள் வாழ்த்து.நிலமிசை நீடுவாழ்வோர் யார் என்றால், இறைவனின் மாட்சிமை பொருந்திய திருவடியை இடைவிடாது நினைப்பவர்தான் என்பது இதன் கருத்து. இதில் இரண்டு சொற்கள் பூட்டுகள் போல் உள்ளன. ஒன்று, "ஏகினான்' என்பது; மற்றொன்று "சேர்ந்தார்' என்பது. இவ்விரண்டிலும் என்ன சிக்கல்கள் உள்ளன?இறைவனைப் பற்றிய சொல்லின்கண் இறந்தகாலக் குறிப்பு வரக்கூடாது. ஏனெனில், அவர் நேற்றும் இன்றும் நாளையும் இருப்பவர்; முக்காலத்திலும் இருப்பவர். முக்காலங்களிலும் இருக்கும் ஒரு பொருளை நிகழ்காலச் சொல்லில் தான் கூற வேண்டும் என்பது இலக்கணம். எப்படியெனில், ""இமயமலை நிற்கிறது'', ""கங்கை நதி ஓடுகிறது''}என்று கூற வேண்டும். இமயமலை நின்றது என்றோ, நிற்கும் என்றோ கூறக்கூடாது. ஏனெனில், ""நின்றது'' என்றால் இன்றில்லை என்றாகிவிடும் ""நிற்கும்'' என்றால், நேற்று இல்லை என்றாகிவிடும். மேலும் சிந்திக்கும்போது, இமயமலை நேற்றும் இன்றும் நாளையும் இருக்கும் பொருள் என்று கூற வேண்டுமானால், இமயமலை நிற்கிறது'' என்று கூறவேண்டும். அதே போலத்தான் கங்கை நதிக்கும்.முந்நிலைக் காலம் தோன்றும் இயற்கைஎம்முறைச் சொல்லும் காலத்துமெய்ந்நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்என்றார் தொல்காப்பியர். இக்கருத்தை,முக்காலத்தினும் ஒத்தியல் பொருளைச்செப்புவர் நிகழுங் காலத்தானேஎன்றார். அதனால்தான் மாணிக்கவாசகர்,""எங்கள் பாண்டிப்பிரான் மூலபண்டாரம்வழங்குகின்றான் வந்து முந்துமினே''என்று "வழங்குகின்றான்' என நிகழ்காலத்தில் கூறினார்.இத்தகைய அழுத்தமான இலக்கணங்கள் இருக்கும்போது, திருவள்ளுவர், ""மலர்மிசை ஏகுகிறான்'' என்று கூறாமல், ""ஏகினான்'' என்று இறந்த காலத்தில் கூறியது பொருந்துமா? என்பதே இங்குள்ள சிக்கல்; அதாவது பூட்டு. இதனைப் பரிமேலழகர் அழகான ஒரு சாவியை}திறவுகோலைத் தந்து விளக்கினார்.மூன்று காலத்திலும் நிகழும் பொருளை நிகழ்காலத்தில்தான் கூறவேண்டும் என்று கூறிய தொல்காப்பியர், இன்னொரு நூற்பாவில், எப்பொழுதோ, விரைவு காரணமாகவோ, உறுதி காரணமாகவோ நிகழ்காலச் சொல்லையும் எதிர்காலச் சொல்லையும் இறந்த காலத்தில் கூறலாம் என்று வழுவமைதியும் கூறியுள்ளார்.எப்படி என்றால், ஒரு நண்பன், வீட்டுவாசலில் வந்து நின்றுகொண்டு, ""என்னப்பா! இன்னும் புறப்படவில்லையா?'' என்று கேட்கிறான். அப்போது, உள்ளே இருக்கும் அவனது நண்பன், ""இதோ வந்துவிட்டேன்'' என்று கூறினான். இவன் வரப்போகிறவன்; எனினும் வந்துவிட்டேன் என்று இறந்தகாலத்தில் கூறலாமா என்றால், இங்கு விரைவும் உறுதிப்பாடும் தொனிக்க அவ்வாறு அவன் கூறியதை இலக்கணம் ஏற்றுக்கொள்கிறது.நாம் வாழ்க்கையில் நேரத்திற்கு ஏற்ப பேசும் சொற்களுக்குக் கூட, அது தவறாகும் என்றாலும், "சரி என்று ஏற்றுக்கொள்ளலாம்' என்று இலக்கணம் அமைதி கூறுகிறது. இதனை வழுவமைதி என்பர். இவ்வாறு, சொற்களின் இலக்கணத்தை விட வாழ்க்கையின் போக்கும் நோக்கும்தான் அவசியமானது என்று இலக்கணம் ஏற்றுக்கொள்கிறது. இதற்குரிய நூற்பா,வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவிஇறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்விரைந்த பொருள் என்மனார் புலவர்என்பது தொல்காப்பியம்}வினையியல் நூற்பா. இங்கு வாராக்காலம் என்பது எதிர்காலம். நிகழுங்காலம் என்பது நிகழ்காலம்.இறைவன், நம்பொருட்டு அழைத்த குரலுக்கும் அன்புக்கும் ஏற்ப ஓடோடி வருவான் என்னும் விரைவுப் பொருளில்தான் திருவள்ளுவர், "ஏகுகிறான்' என்று நிகழ்காலத்தில் கூறவேண்டிய சொல்லை "ஏகினான்' என இறந்த காலத்தில் கூறினார்}என்று பரிமேலழகர் விளக்கினார். அவ்வுரைப்பகுதி வருமாறு:""அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், "ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார். என்னை? வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர் என்பது ஒத்ததாகலின்'' என்பது அது.நினைந்த வடிவோடு விரைந்து சேருவான் என்பதில் இரண்டு செய்திகளைக் கூறினார். விரைவாக வருவான் என்பது மட்டுமல்ல, எந்த உருவில் நினைக்கிறோமோ அந்த உருவில் வருவான் என்பதால், இங்கு சமயக் காழ்ப்பிற்கு இடமில்லை என்றும் கூறினார். இந்த இலக்கணம் ஒரு மாண்புடைச் சாவி தானே!இன்னொன்று, "சேர்ந்தார்' என்பது. சேர்தல் என்பது இடத்தால் சேர்தலா? இதயத்தால் சேர்தலா? என்பது கேள்வி. "மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்' என்பதில் சேர்தல் என்பது, இதயத்தால் சேர்தலைக் குறிக்கிறது. எண்ணத்தால், பக்தியால், உணர்வினால் சேர்தல் என்பது இதற்குப் பொருள். இது சாதகம்}பயிற்சி. இப்பயிற்சியை இடைவிடாது மேற்கொள்வார் அதாவது, தியானித்துக் கொண்டு இருப்பவர் நிலமிசை நீடு இனிது வாழ்வார் என்பதே பொருள்.இதற்கு இலக்கணம் இடம் தருகிறது. தொல்காப்பியத்தில், "வேற்றுமை மயங்கியல்' என்ற இயலில், "இரண்டாம் வேற்றுமை உருபு வரும்போது அந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை உருபும் வரலாம்' என்று ஒன்றோடு ஒன்று கூடிவரும் இலக்கணம் கூறியுள்ளார்.மயக்கம் என்றால், "கூடுதல்' என்பது பொருள். வேற்றுமை மயக்கம் என்றால், பொருள் நிலைக்கு ஏற்ப உருபுகள் ஒன்றோடு ஒன்று கூடி வரும் என்பது பொருள். எடுத்துக்காட்டாக, அரசனைச் சார்ந்தார், அரசர்கண் சார்ந்தார் என்பதில், அரசரைச் சார்ந்தார் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ'யும், அரசர்கண் சார்ந்தார் என்பதில் ஏழாம் வேற்றுமை உருபு "கண்'னும் அமைந்து பொருள் தருகின்றன. இதனை விளக்க வந்த தொல்காப்பியர், இவ்வாறு இரண்டு உருபுகள் இயைந்து பொருள் தருவது எப்போது என்றால், "கருமம் அல்லாச் சார்புப் பொருள்' வரும் பொழுது மட்டுமே என்று கூறியுள்ளார். கருமம் அல்லாச் சார்பு என்றால் செயல்; தூணைச் சார்ந்தான் என்றால், அங்கு உடம்பினால் சார்தல் என்னும் செயல் நம் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அரசனைச் சார்ந்தான் என்றால், உடம்பினால் சார்தல் கிடையாது. அரசனை உள்ளத்தால் சார்ந்து நிற்கிறான் என்பதே பொருள். இங்கு செயல் என்னும் "கருமம்' இல்லை. சிந்தனை என்னும் எண்ணம் உண்டு. இதுவே கருமமல்லாச் சார்பு என்றார் தொல்காப்பியர்.மாணடி சேர்ந்தார் என்பதில் உள்ள "சேர்தல்' என்பது இடத்தால் சார்தல் இல்லை. இதயத்தால் சார்தல் ஆகிய கருமமல்லாச் சார்பு எனப் பொருள்படும். எனவேதான், இங்கு சேர்தல் என்பது இடைவிடாது நினைத்தலை உணத்தியது என்கிறார் உரையாசிரியர்.இவ்வாறு, தெரிந்த குறளாக இருந்தாலும் தெரியாத சில நுட்பங்கள் பொருந்தி உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் சில தடைகளுக்குச் சரியான விடைகளால் தெளிவுகொள்ளவும் இலக்கணம் என்னும் திறவுகோல் என்றும் உதவும்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue