உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார்
(க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
உ.தமிழர் திருமணமுறை
தொல் பழந்தமிழர் திருமணமுறை தமிழர்கட்கு இன்று புதுமையாகத் தோன்றுகின்றது. ஏன்? ஆரியர் தமிழகம் போந்து விளைத்த சீர்கேடுகளுள் இஃது ஒன்று! தமிழர்தம் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியன கெட்டு யாவும் ஆரியமயமாகிவிட்டமையை எத்துணைத் தமிழர் அறிவர்? ஆகவே, பண்டைத் தமிழர் திருமண முறை பற்றி இன்று பேசினால் இற்றைத் தமிழர் ஏற்க மறுக்கின்றனர்.
ஆரிய முறை அத்துணை ஆழமாகத் தமிழரிடையே வேரூன்றிவிட்டது. பெரியார் ஈ.வெ.ராவும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் பட்டி, தொட்டியெங்கும் சென்று தமிழர் திருமணமுறை பற்றி எடுத்துக் கூறினார். சீர்திருத்தத் திருமணம் என்பதை ஏற்ற மக்களும், ஆரிய முறைப்படி தாலிகட்டுவதைக் கைவிடவில்லை!
இவற்றிற்கெல்லாம் அடிப்படை யாது? தமிழர்கள் பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிப்பதைக் கைவிட்டு, ஆரிய மத இலக்கியங்களாகிய பாரதம், இராமாயணம், கீதை முதலியவற்றையே படித்தமைதாம்.
இந்தியக் குடியரசு தலைவராகவுள்ள ஆரியர் சங்கர் தயாள் சர்மா என்பவர், சமற்கிருத அறிஞர் மாநாட்டில் பேசுங்கால் சமற்கிருதம் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கூறியுள்ளார். தனக்கென எழுத்துகளில்லாத, பேச்சு வழக்கில் இல்லாத சமற்கிருதம் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாம்! ஆயின். தமிழ் அங்கு சேயாகின்றது. என்னே! தலைவரின் மொழியறிவு!
தமிழ் மக்கள் தம் தாய்மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் புறக்கணிதத்தன் விளைவு இது!
இன்று தமிழ்ப்புலவர் தேர்வுகட்குப் பயில்பவர்களும், அடிப்படை நூல்களை ஆழ்ந்து படிப்பதில்லை! வினா விடை நூல்களைப் படித்தே, குறைந்த மதிப்பெண் பெற்றுத் தேறிவிடுகின்றனர். பணங்கொடுத்துத் தேர்ச்சி பெறுபவர்களும் உளர்! ஏன் பொத்தகத்தைக் கிழித்துச் சென்றும், துண்டுத்தாளில் எழுதிச்சென்றும் பார்த்து எழுதி வெற்றி பெறுபவரும் பலர்! இத்தகையோர்க்குத் தமிழர் பண்பாடு எங்ஙனம் தெரியும்? இவர்கள் பிழைப்புக்காகத் தமிழ் படிப்பவராவர்.
பொதுவாக நோக்கின், இக்காலத்தில் நுனிப்புல் மேய்பவரே மிகப்பலர்! தமிழ்த் திருமணம் என்று இன்று நடத்துபவர்களும் தம்தம் மனப் போக்குக்கேற்ப மணமுறைகளை மாற்றிக் கொள்கின்றனர். இறுதியில் பெண்ணிற்கு மங்கலநாண் கட்டுவதை மறப்பதில்லை. ஆரியம் தமிழகம் புகுமுன் யாத்த எந்தத் தமிழ் நூலிலாவது திருக்குறள் உட்பட, வாழ்க்கைத்துணை ஏற்கும் விழாவின் போது மகளிர்க்குத் தாலி கட்டியதாகக் கூறப்பெற்றுள்ளதா? தாலி என்பது ஆண் குழந்தை பிறந்து ஐந்தாம் நாள் அணியும் ஓர் அணிகலன் என்று புறநானூற்று அரும்பத உரைக்குறிப்பில் தமிழறிஞர் உ.வே.சா கூறியுள்ளார். தமிழறிஞர் மா.அரசமாணிக்கனாரும் தம் தமிழர்க்குத் தாலியுண்டா? என்னும் நூலில் இல்லையென்றே முடிவு செய்துள்ளார். இத்துணைபேர் எடுத்துரைத்தும், தமிழறிஞர் சிலர் தாலிகட்டும் – ஆணுக்குப் பெண் அடிமையாக்கும் – ஆரிய முறையை விடாது பற்றுவது வியப்பானதே!
இனி தமிழ் இலக்கியங்கள் இயம்பும் தமிழர் திருமணமுறையைக் காண்போம்.
களவு முறை
தொல்காப்பியர் காலத்திற்கு முன் தமிழ்மக்கள் பின்பற்றிய மணமுறை களவுமுறை எனப் பெயர் பெற்றது. அதாவது, பருவமடைந்த ஓர் இளைஞனும், ஓர் இளைஞியும் தனியே சந்தித்து. காதல் வயப்பட்டு, பிறரறியாமல் களவொழுக்கத்தில் இணைந்து வாழ்வது. பின்னர் பெற்றோரால் அறியப்பட்டு இருவரையும் வாழ்க்கைப் படுத்துவதுமுண்டு.
அங்ஙனமின்றி, களவொழுக்கத்தையறிந்து பெற்றோரும் உற்றோரும் தடுக்க முற்பட்டால், காதலர் இருவரும் உடன்போக்கை மேற்கொள்வர். அதன்பிறகு தேடிக்கொணர்ந்து மணமுடிப்பர். இக் களவுமுறையில் பல சீர்கேடுகள் நேர்ந்தமையின் தமிழ்ச்சான்றோர் கற்புமுறையைக் கண்டனர்.
இதனை,
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல்.1091)
என்பது கொண்டு அறிக.
கற்புமுறை
கற்புமுறை என்பது திருமணச் சடங்கோடு பொருந்தக் கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைமகன், கொடுத்தற்குரிய முறைமையினையுடைய தலைமகளைக் கொடுக்க வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதாம். இதனை,
கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே
(தொல்.1088)
என்னும் நூற்பாவால் அறிந்துகொள்ளலாம்.
திருமணம், அகப்பொருள் இலக்கணங்களில் இச்சொல் வரைவு என்றும், மன்றல் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மணம் என்னும் சொல் பிற்காலத்தில் கையாளப்பட்டது.
வரைவு என்றால் தமிழ்ச்சான்றோரால் வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கட்கு உட்பட்டு வாழ்வதாக உறுதிபூண்டு ஏற்பது.
மன்றல் எனின் அறிஞர், பெரியோர், உற்றார், உறவினர் கூடிய அவையில் இளைஞனும், ஓர் இளம்பெண்ணும் வாழ்க்கைத் துணைவர்கள் ஆக்கப்பெறுவது.
மணம் என்பது கூட்டம். இளம் காதலனும், இளம் காதலியும் இணைந்து ஒன்றுபட்ட இல்லறம் ஏற்கும் நிலை. திரு என்னும் அடைமொழியைச் சேர்த்து திருமணம் என்றாக்கினர். மணம் என்பதனைக் காமக்கூட்டம் என்பர். மணத்திற்குரிய மக்களைத் தெரிவு செய்யுங்கால் பண்டைத் தமிழர் பத்துப்பொருத்தங்கள் பார்த்துத் தெரிவு செய்தனர். அவை யாவன :
பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அன்பு, நிறை, அருள். அறிவு, திரு, உரு என்பவாம் (தொல்.1219)
இன்று பார்க்கும் பொருத்தங்கள் ஆரியர் இறக்கிய சரக்குகளே. ஐந்திரம் பார்த்துக் கணிப்பது அவர் முறை.
தமிழ்த் திருமணம் செய்யும் முறை
இன்று உலகம், (இந்தியா தவிர்த்து) பலவகையிலும் முன்னேறியுள்ளது. ஆனால், இந்தியா மடமைச்சேற்றில் ஆழ்ந்து அவதிப்படுகிறது. மதவெறி, குல (சாதி) வெறி மண்டைக்கேறி மாழ்குகிறது. இந்த இருபதாம் நூற்றாண்டில் கூடத் திருந்த மறுக்கின்றது. வானொலி, தொலைக்காட்சிகளை மதம் பரப்பும் நிலையங்களாகப் பயன்படுத்துகிறது. சீர்திருத்தம் பற்றிப் பேச யார்க்கும் இடமளிப்பதில்லை. மதத்தை வளர்க்கவே இந்திய அரசு பெரிதும் பாடுபடுகிறது. இந்து மத நாடாக்க முயல்கிறது.
தமிழக அடிமையரசும் மதம் பரப்புவதில் இளைத்ததல்ல. ஆயினும், இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று விளம்பரம் செய்கிறது. முழுப்பொய்! இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண்ணும், இந்தியாவிலுள்ள ஓர் ஆணும் தொலைப்பேசி வழி மணவுடன்படிக்கை மேற்கொண்ட செய்தியும் அறிவோம்.
தமிழர் அனைவரும் தமிழ்த் திருமணமுறையைப் பின்பற்ற முன்வரல் வேண்டும். இன்று நாம் செய்யும் ஆரியர் திருமண முறையை அடியோடு அகற்றல் வேண்டும்.
பெரும்பாலும், நடைமுறையிலுள்ள எல்லாச் சடங்கு முறைகளும் ஆரியர்களுடையனவே!
யாம் எழுதியுள்ள பண்டைத்தமிழர் வாழ்வியல், என்னும் நூலில் தமிழர் சடங்கு முறைகள் பற்றி அறியலாம். மேற்கூறிய பத்து பொருத்தங்கட்கு ஏற்ப மணமக்களைத் தேர்ந்தெடுத்தபின் உறவினர், உற்றார் வந்து அமர்ந்துள்ள திருமணமன்றில், மணமக்களை மணவுடைகளை அணிந்து வந்து மேடையிலே, விசிப்பலகையிலோ, நாற்காலிகளிலோ அமரச் செய்தல் வேண்டும். முன்னரே குறிக்கப் பெற்ற மூதறிஞரைத் தலைமையேற்க முன் மொழிந்து, வழிமொழிந்து திருமண விழாவை நடத்தித் தருமாறு கேட்டுக் கொள்ளல் வேண்டும். தலைமை ஏற்றவர் முன்னுரையாக வாழ்க்கைத் துணையேற்பு பற்றிச் சுருக்கமாகச் சில செய்திகள் சொன்னபிறகு, மணமக்களை மலர்மாலையை மாற்றியணியச் செய்தல் வேண்டும். கணையாழியும் மாற்றிக் கொள்ளலாம். பிறகு தலைவர், ‘வாழ்க மணமக்கள்! வளம் பல பெற்றே!’ என்று சொல்ல அவையோர் ‘வாழ்க! வாழ்க!’ என்று மும்முறையும் சொன்ன பிறகு மணமக்கள் இருக்கையில் அமர்தல் வேண்டும். மலர்மாலை மாற்றிக் கொள்ளும்போழ்து, மன்றிலுள்ளளோர்க்கு முன்னரே உதிரிப்பூக்கள் கொடுத்துச் சொரியச் செய்வதும் நன்றே.
பிறகு பட்டறிவுள்ள ஒரு பெரியவரையும், ஓர் அம்மையாரையும் முறையே இல்லறமேற்ற இளைஞனது கடமையையும், இளம்பெண்ணின் கடமையையும் கூறச் செய்தல் வேண்டும். பின்பு பரிசு வழங்கல் முடிந்ததும், நன்றி கூறல். மணமகன் பெற்றோர், அல்லது மணமகள் பெற்றோர் கூறலாம். மணமகன் அன்றி மணமகளும் நன்றி நவிலலாம். பின்னர், மணமக்களைத் தனியறைக்கு அழைத்துச் சென்று, பழமும், பாலும் அருந்தச் செய்யலாம். இறுதியில் திருமண விழாவிற்கு வருகை தந்தவர்க்கு உணவு படைத்தல், வழியனுப்புதல் முறைமையாகும்.
மணப்பந்தர்க்கு அழகு செய்வதில் வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வந்து கட்டுதல் தேவையற்றது. நெட்டிலிங்கத்தழை அல்லது மாந்தழை முகப்பில் கட்டலாம். பனங்குலைகள் இருப்பின், பந்தலில் கட்டலாம். எல்லாவற்றிற்கும் மேலாகத் திருமணப் பதிவு செய்வது சிறப்பாகும். சார்பதிவாளரை மணவிழா நடக்குமிடத்திற்கு அழைத்தும் செய்யலாம். மணவிழா முடிந்தபிறகு மணமக்களைச் சார்பதிவாளர் அலுவலகத்திற்குக் கொண்டு போயும் பதிவு செய்யலாம். இது மணமக்கள் இருவர்க்கும் பாதுகாப்பாகும்.
முடிவுரை
இன்று பலர் மணவிழா மன்றை அரசியல் மேடையாக்கி விடுகின்றனர். அதனைவிட்டு தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழரிடையேயுள்ள மூடப்பழக்கவழக்கங்கள் குறித்து விளக்கிச் சொல்லுதல் பயனுடையதாகும். தமிழ்மக்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, திருக்குறள் முதலிய தமிழ் இலக்கியங்களை நன்கு பயிலல் வேண்டும். பண்டைய தமிழர் வாழ்வியல் பற்றி அறிய உதவும். தமிழர்வாழ ;தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வோமாக!
(நன்றி : தினப்புரட்சி)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment