Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு-தொடர்ச்சி)

          பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும்,        80

          தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும்,

தெரிதரு யாழில் விரிதரும் இசையும்,

முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும்,

காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும்,      

          ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும்,        85

          கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து

பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம்

மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது;

ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர்

          செவியகம் பாய்ந்து சிந்தை நிறைந்தது;          90

          புவியகம் யாங்கணும் புகழ்மணம் மலர்ந்தது;         

          சுரிகுழற் பூங்கொடி சொற்றமிழ் இசையை

மறுகிடைக் கேட்குநர் வழங்குதல் தவிர்த்துச்

செயல்மறந் தாங்கண் சிந்தையும் உருகிக்    

          கயல்விழி இசையின் கற்பனைத் திறனும்       95

          பயில்வார்க் கோதும் பாங்கின் திறனும்

நல்லிளம் பருவத்துப் பல்வகை இசையில்

வல்லவ ளாகிய வகையும் கண்டு

வியந்துரை கூறி வியநகர் மாந்தர்         

          நயந்தன ராகி நல்கினர் வாழ்த்தொலி;  100

          வாய்விட் டுரைத்து வாழ்த்திய மாந்தருள்

தோய்மகிழ் மனத்துத் தூயோர் ஒருசிலர்

கலைப்பணி ஒன்றே தலைப்பணி என்று        

நிலைத்ததம் பொருளெலாம் நீரென இறைத்துப்     

          பேரின் புறூஉம் பெருநிலக் கிழார்பால் 105

          நேரிற் சென்று நேரிழை இசைத்திறன்

கூறுதும் என்று கூடினர் ஏகி,

          வங்க வினைஞரும், வச்சிரத் தச்சரும்,

கொங்கக் கொல்லரும், குளிர்மலை யாளரும்,

          தமிழக வினைஞர் தம்மொடு கூடிப்        110

          புகழ்பெறு மாறு புதுமையின் இயற்றிய

கண்கவர் வனப்பிற் கைவினை முற்றிய

விண்தவழ் முகப்பும் வியன்பெரு வாயிலும்,

வெண்சுதைப் பாவை விளங்கிடும் அரணும்,  

          ஒள்ளிய சாந்து வெள்ளிய நிலவொளி    115

          அள்ளி இறைக்கும் அழகுறு மதிலும்,

திரள்பெருந் தூணிற் செய்வினைப் போதிகை

மருள்படச் செய்யும் மனங்கவர் சித்திர

விதானப் பரப்பொடு விளங்குநல் மண்டபத்துக்      

————————————————————–

          ஊதுலைக்குருகு – துருத்தி, தண்ணுமை – மத்தளம், மறுகிடை – தெருக்களில்.

+++

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்