ஊரும் பேரும் 64 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – அருங்குன்றம்
(ஊரும் பேரும் 63 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சமணமும் சாக்கியமும் – தொடர்ச்சி)
ஊரும் பேரும்
அருங்குன்றம்
திருத்தணிகை மலைக்கு ஐந்து கல் தூரத்தில் உள்ளது அருங்குன்றம். அங்குக் காணப்படுகின்ற அழகிய சினாலயம் கார் வெட்டு நகரக் குறுநில மன்னரால் கட்டப்பட்டதென்பர். தமிழ்ச் சிறு காப்பியங்களுள் சிறந்ததாக மதிக்கப்படும் சூளாமணியின் ஆசிரியராகிய தோலா மொழித் தேவர் இவ்வாலயத்தில் அமைந்த தரும தீர்த்தங்கரரை வழிபட்ட செய்தி அந்நூற் பாயிரத்தால் அறியப்படுகின்றது. எனவே, அருகன் குன்றம் என்னும் பெயர் அருங்குன்றமெனக் குறுகிற்றென்று கொள்ளுதல் பொருந்தும்.
திருநறுங் கொண்டை
நடு நாட்டிலுள்ள திருநறுங் கொண்டை என்ற ஊர் சமணர்கள் சிறந்து வாழ்ந்த இடங்களுள் ஒன்றாகும். அங்குள்ள அப்பாண்ட நாதர் கோயிலிற் , பழைய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.18 அவற்றுள் ஒன்றில் இராசாதி ராசன் என்னும் சோழ மன்னன் மேலிற் பள்ளித் (மேலைக் கோயில்) திரு விளக்குக்காக அளித்த நன்கொடை குறிக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழன் காலத்தில் வீர சேகர காடவராயன் என்பான் நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளிக்கு வழங்கிய வரிக் கொடையும் சாசனத்திற் கூறப்படுகின்றது. இக்குறிப்புக்களால் நறுங் கொண்டை என்னும் பதி சமணர்களாற் பெரிதும் போற்றப்பட்ட தென்பது புலனாகும்.
சீனாபுரம்
கொங்கு மண்டலத்துக் குறுப்பு நாட்டில் உள்ள சனகை என்ற சனகாபுரம் சமணர்க் குரிய சிறந்த பதிகளுள் ஒன்று. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூல் இயற்றிய பவணந்தி முனிவர் அவ்வூரிலே பிறந்தவர். ஆதிநாத தீர்த்தங்கரருக்கு அங்கு ஒரு கோயில் உண்டு. இந்நாளில் சீனாபுரம் என வழங்கும் அவ்வூர் கோவை நாட்டு ஈரோடு வட்டத்தில் பெருந்துறைக்கு அருகேயுள்ளது.
அம்மணம்பாக்கம்
அருக தேவன் பெயர் தாங்கி நிலவும் ஊர்கள் தமிழ் நாட்டிற் பல பாகங்களில் உண்டு. தென் பாண்டி நாட்டில் அருகன் குளம் என்னும் ஊர் உள்ளது. சேலம் நாட்டில் அருக நத்தம் என்பது ஓர் ஊரின் பெயர். அருக சமயம் தமிழ் நாட்டில் சமணம் என்றும், அமணம் என்றும் பெயர் பெற்றது. அமணம் என்பது அம்மணம் எனவும் வழங்கலாயிற்று. தொண்டை நாட்டிலும் அதை அடுத்துள்ள நாடுகளிலும் அம்மணம் என்னும் பெயருடைய சில ஊர்கள் காணப்படுகின்றன. செங்கற்பட்டு வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்ற ஊரும், மதுராந்தக வட்டத்தில் மற்றோர் அம்மணம் பாக்கமும் உண்டு. தென் ஆர்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் பிறிதோர் அம்மணம்பாக்கம் உள்ளது. விழுப்புர வட்டத்தில் அம்மணங் குப்பம் என்பது ஓர் ஊர். இவ்வூர்கள் எல்லாம் சமண மணம் கமழ்ந்த இடங்களாக இருந்திருத்தல் வேண்டும்.
பேரமனூர்
தொண்டை மண்டலத்துச் செங்குன்ற நாட்டைச் சேர்ந்த பேரமனூர் என்னும் ஊர் சமண சம்பந்தமுடையதென்பது அதன் பெயரால் விளங்குவதாகும். இக்காலத்தில் பேரமனுர் என வழங்கும் அவ்வூர் செங்கற்பட்டு வட்டத்தில் உள்ளது.19
போதிமங்கை
முன்னாளில் புத்தர்கள் சிறந்து வாழ்ந்த ஊர்களில் ஒன்று போதி மங்கை. அது புதுவை நாட்டில் தெளிச்சேரி யென்னும் பாடல்பெற்ற பதியின் அருகே இருந்ததாகத் தெரிகின்றது. போதிமரம் புத்தர் போற்றும் புனிதமுடைய தாதலின் அதன் பெயரால் அமைந்த ஊர் போதிமங்கை எனப் பட்டது போலும் அங்குப் புத்தமத வேதமாகிய பிடக நூலையும், அளவை நூலையும் துறைபோகக் கற்றுப் பிற சமய வாதிகளை அறை கூவி வாது செய்ய அழைக்கும் அறிஞர் பலர் இருந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பர சமய கோளரியாக விளங்கிய திருஞான சம்பந்தர்,
“சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை”
யின் வழியே போந்தாரென்றும், அங்கும் புகைந்து எழுந்த புத்த நந்தி பொன்றி வீழ்ந்தான் என்றும், சாரிபுத்தன் என்னும் சாக்கிய அறிஞன் அவ்வூர்ச் சத்திர மண்டபத்தில் திருஞான சம்பந்தரோடு வாது செய்து தோற்றான் என்றும் பெரிய புராணத்திலே கூறப்படுகின்றது. இவ் வரலாற்றால் ஏழாம் நூற்றாண்டில் புத்தர்கள் போதி மங்கை முதலிய ஊர்களில் சிறந்து வாழ்ந்தனர் என்பதும், அவர்களுள் கலை பயில் தெளிவும் கட்டுரை வன்மையும் உடையார் பலர் இருந்தனர் என்பதும் நன்கு விளங்கும்.
அறப்பணஞ்சேரி
ஐம்பெருங்காவியங்களுள் ஒன்றாகிய மணிமேகலையில் அறவண அடிகள் என்னும் பெளத்த முனிவரின் பெருமை விரிந்துரைக்கப் படுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த புத்த சங்கத்தைச் சேர்ந்தவர் இம்முனிவர். மதுரையம்பதியில் கோவலன் கொலையுண் டிறந்ததை அறிந்து அருந்துயரடைந்த மாதவி இவரைச் சரணடைந்து தவ நெறியை மேற்கொண்டாள்.
“மறவண நீத்த மாசறு கேள்வி
அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து”
தன் ஆற்றாமையை அறிவித்த மாதவிக்கு அடிகள் ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி உய்வகை உணர்த்தினார் என்று மணிமேகலை கூறும்.20
காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்ட பின்பு இவர் காஞ்சி மாநகரம் போந்து நெடுங்காலம் தவம் புரிந்தார். காஞ்சிபுரத்தில் இன்றும் இவர் வாழ்ந்த இடம் அறப்பணஞ் சேரி என்று வழங்குவதாகும். கொங்கு நாட்டில் அறவண நல்லூர் என்னும் ஊர் உண்டென்று கொங்கு மண்டல ஊர்த் தொகை கூறுகின்றது.21 முன்னாளில் சோழ மண்டலக் கரையில் சிறந்ததொரு துறைமுக நகரமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் பெளத்த மதத்தைச் சார்ந்தோர் பலர் இருந்தனர். அவர் பொருட்டுத் கடாரத் தரசனாகிய ரீமாரன் என்பவன் புத்தவிகாரம் ஒன்று கட்ட விரும்பினான்.22 அப்போது சோழ நாட்டில் அரசு வீற்றிருந்தவன் இராசராசன் என்னும் பெருவேந்தன், அவன் சைவப் பற்றுடையவனாயினும் புறச் சமயங்களையும் ஆதரிக்கும் பெருமை வாய்ந்தவன். ஆதலால், நாகையில் புத்த விகாரம் கட்டிக் கொள்ள அவன் ஆணை தந்தான். கடாரத்தரசன் மன மகிழ்ந்து சூடாமணி வருமன் என்னும் தன் தந்தையின் பெயரால் ஒரு பத்ம விகாரம் கட்டத் தொடங்கினான். இராசராசன், ஆனைமங்கலம் என்னும் ஊரை அதற்குப் பள்ளிச் சந்தமாக அளித்தான். ஆயினும், பத்ம விகாரத் திருப்பணி முற்றுப் பெறு முன்னே சோழமன்னன் காலம் சென்றான். அவன் மைந்தனாகிய இராசேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்து, வென்று, மீண்ட பின்னர்த் தன் தந்தையார் சூடாமணி பத்ம விகாரத்திற்குக் கொடுத்த நன்கொடையைச் சாசன வாயிலாக உறுதிப்படுத்தினான்.23
இராசேந்திர சோழன் மகனான வீர ராசேந்திரன் புத்த மித்திரன் என்பவரை ஆதரித்தான். இவர் பொன் பற்றி என்னும் ஊரினர்; புலமை வாய்ந்தவர்; வீர சோழியம் என்னும் தமிழிலக்கணம் இயற்றியவர். இவர் புத்த மதத்தைச் சார்ந்தவர் என்பது வெளிப்படை. மிழலைக் கூற்றத்திலுள்ள பொன்பற்றி மன்னன் என்று இவர் குறிக்கப்படுதலால் வீரசோழன் காலத்தில் ஒரு குறுநில மன்னராக இவர் வாழ்ந்தவர் எனக் கருதலாம்.
“ஈண்டுநூல் கண்டான் எழில்மிழலைக் கூற்றத்துப்
பூண்டபுகழ் பொன்பற்றி காவலனே – மூண்டவரை
வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்தன்
சொல்லின் படியே தொகுத்து“24
என்னும் பாட்டால் வீரசோழன் விருப்பத்திற் கிணங்கி இவர் இலக்கண நூல் இயற்றினார் என்பது நன்கு விளங்குகின்றது. எனவே, வீரசோழன் அரசு புரிந்த பதினொன்றாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்த சிற்றரசரும் இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டு அறந்தாங்கி வட்டத்திலுள்ள பொன் பேத்தி என்ற ஊரே புத்த மித்திரனார்க்குரிய பொன்பற்றி எனக் கருதப்படுகின்றது.
பள்ளிச் சந்தம்
பண்டைத் தமிழரசர் சைன பெளத்தக் கோயில்களுக்கு இறையிலியாக விட்ட நிலமும் ஊரும் பள்ளிச் சந்தம் என்று பெயர் பெற்றன. முற் காலத்தில் சிறந்திருந்த சில பள்ளிகளின் பெயர்கள் சாசனங்களால் அறியப்படுகின்றன. செங்கற்பட்டு நாட்டிலுள்ள ஆனந்த மங்கலத்தில் சினகிரிப் பள்ளி இருந்தது.25 தென்னார்க்காட்டில் உள்ள திருநறுங்கொண்டையில் பெரிய பள்ளியும்,26 இராசேந்திரபுரத்தில் கங்காசூரப் பெரும் பள்ளியும்27 சனநாத புரத்தில் சேதிகுல மாணிக்கப் பெரும் பள்ளி, கங்ககுல சுந்தரப் பெரும் பள்ளி என்னும் இரு பள்ளிகளும்,28 இன்னோரன்ன பிற பள்ளிகளும் இருந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும். அத்தகைய பள்ளிகளைத் தமிழரசர் ஆதரித்த பான்மை பள்ளிச்சந்தம் என்று பெயர் பெற்றுள்ள ஊர்களால் விளங்கும்.
தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள பள்ளிச் சந்தம் என்னும் ஊர் அங்குள்ள சமணப் பள்ளியால் பெயர் பெற்றதென்பது சாசனத்தால் விளங்குகின்றது. கண்டராதித்தப் பெரும் பள்ளி அருகே சிறப்புற்று விளங்கிய பான்மையும், நேமிநாதர் என்பவர் அதனைப் பரிபாலனம் செய்த முறையும் அவ்வூரிற் கண்ட சாசனம் ஒன்றால் அறியப் படுவனவாகும். 29 தஞ்சை நாட்டு நாகப்பட்டின வட்டத்தில் ஒரு பள்ளிச் சந்தமும், இராமநாதபுரச் சிவகங்கை வட்டத்தில் மற்றொரு பள்ளிச் சந்தமும் உள்ளன.இத்தகைய நன்கொடைகளால் தமிழ் வேந்தர் சமண சாக்கிய மதங் களையும் வேற்றுமையின்றி ஆதரித்தனர் என்னும் உண்மை இனிது விளங்குவதாகும்.
அடிக் குறிப்பு
- இக்கோயிலில் உள்ளவர் (இ)ரிசப தீர்த்தங்கரர் என்றும், அவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசரை ஆண்டருளிய காரணத்தால் அப்பரை யாண்ட நாதர் என்று அழைக்கப்பட்டார் என்றும், அப்பெயரே அப்பாண்ட நாதர் என மருவிற்றென்றும் ஒரு கதை வழங்குகின்றது. –
- செ.க.அ. 1934-35 (M. E. R., 1934-35.)
- மணிமேகலை, கதை, 2,60
- கொங்கு மண்டல ஊர்த்தொகை, 8.
- சீமார விசயோத்துங்க வருமன் என்பது அவன் (popGuust I. M. P. P., 1345.
- சோழர் சரித்திரத்திற்குப் பேருதவியாயுள்ள லிடன் சாசனம் என்பது இதுவேயாகும்.
- பெருந்தொகை 1467.
- 430 /1922.
- 385/ 1902.
- 277/1916.
- 392 /1907.
- செ.க.அ. 1937-38 (M. E. R., 1937-38.)
ஊரும் பேரும், இரா.பி.சேது(ப்பிள்ளை)
Comments
Post a Comment