பூங்கொடி 7 – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக
(பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர்காதை தொடர்ச்சி)
ஒற்றுமை பரப்புக
எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை
தத்தங் கொள்கை தவிர்த்து நாடும்
மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே
வழியெனக் கருதி வழங்குக பேருரை
முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும்
சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக
ஓரினம் காமென உன்னுக பெரிகே.
வாழிய வாழிய
காரினம் மழையைக் கரவா தருள்க
பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி
வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல்
செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக
வாழிய பொங்கல் வாழிய திருநாள்’
என்னுமிவ் வறிக்கை எங்கனும் பரந்தது;
பொங்கற் கொண்டாட்டம்
பொழிபனி கழியப் பொங்கலும் வந்தது;
எழில்பெறச் செய்தனர் இல்லங் தோறும்
வெண்ணிறச் சுண்ணம் விளைத்தது தாய்மை;
கண்கவர் முறையிற் கட்டினர் தோரணம்;
வண்ணப் புத்துடை வகைவகை பூண்டு
கன்னல் துண்டி னைக் கடித்திடும் சிறுமகார்
தெருவினில் ஒடித் திரிந்தனர் யாண்டும்;
கருவிழி மகளிர் கடும்புனல் ஆடித்
தறிதரும் ஆடை தரித்தனர் ஆகி
நெய்வழி பொங்கல் செய்ம்முறை செய்து
கைவணம் காட்டிக் காதலர் மகிழப்
படைத்தனர் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்தனர்;
கடைத்தெரு வெங்கணும் களிகொள் ஆட்டம்;
ஏறு தழுவினர்
கவைபடு கூரிய காளையின் கொம்பிடைத்
துவைபடத் தழுவிச் சுற்றிய துணிமணி
அவிழ்க்கன ராகி ஆர்த்தனர் காளையர்;
அன்பிற் குரிய ஆடவர் காளையை
அஞ்சில ராகி நெஞ்சுரங் காட்டிக்
குழுவினர் நடுங்கக் கழுவுதல் கண்டு
வஞ்சியர் களித்தனர் வாழ்த்தொலி கூவினர்;
கலை நிகழ்ச்சி
அறிஞர் ஒருபால் ஆய்வுரை நிகழ்த்தினர்,
கலைபயில் கூத்தினைக் கண்கவர் அரங்கில்
இலைநிகர் எனுமா றேற்றினர் கலைஞர்,
இசையொலி கடலொலி பிறக்கிட எழுந்தது,
வசையெனப் பிறமொழிப் பாடல்கள் வழங்கிலர்
தமிழே இனிமைத் தமிழே இசைத்தனர்,
மணிநகர் எங்கனும் மாபெருந் திருநாள்
அணிபெறத் திகழ்ந்தது ஆர்ப்பொலி யுடனே. (78)
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment