கடிகாரக் கடவுள் – ஆற்காடு க. குமரன்
கடிகாரக் கடவுள்
ஒரே நாளில் அம்பானி ஆக முடியும் என்று
எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்!
ஒரே நாளில் அடிமையாகக் கூட ஆக முடியாது
வினை என்னவோ ஒரு நொடிதான்
விளைவுக்கு மட்டும் காலம் தேவைப்படும்
கடவுள் இருக்கிறானோ இல்லையோ ஆனால்
காலம் இருக்கிறது காலம் இருப்பதால்தான் நீயும்
அதைக் கடந்து கொண்டிருக்கிறாய்
காலம் உன்னை முந்தி கடந்து கொண்டிருக்கிறது
கடவுள் தண்டிக்கிறானோ இல்லையோ காலம் தண்டிக்கிறது
நாளும் புரிகிறது ஞாலம் சுழல்கிறது
காலம் தன் கடமையைச் சரிவர செய்வதால்தான்
பிறப்பும் இறப்பும் கூட நடக்கிறது
கண்ணுக்குத் தெரியாத கடவுளை வழிபடுவதை விடக்
கண்ணுக்குத் தெரிந்த காலத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்
பலருக்குப் பல பொழுதுபோக்கு
எனக்கு என் எழுத்தே போக்கு
என்னைக் காண்பவர்கள் காலவிரயம் செய்வதாய் நினைப்பார்கள்
என்னைப் பொறுத்தவரை நான் கால விரயம் செய்யவில்லை
என் கருத்தில் இருப்பதைப் பதியம் செய்கிறேன்
வாசிக்கும் நேரம் மிகக்குறைவு அதற்குள்
எனக்குள் வசிக்கும் எண்ணங்கள் எழுந்தாடி
எழுத்துகளைத் தேடி ஓடிவரும்
எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்குவதில்லை நான்
எண்ணங்கள் தோன்ற ஏது நேரம்
என்னை எழுத விட்டால் 24 மணி நேரமும் போதாது
அடுத்த நாளையும் காலத்திடம் கடன் கேட்பேன்
எழுதி முடிக்க ஏராளம் இருக்கிறது
ஏன் எழுதுகிறேன் எதற்காக எழுதுகிறேன்
எதுவும் தெரியாது எனக்கு ஆனால்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் காலம் என்னை எழுத வைக்கிறது
என் ஆயுள் முழுதுமே எழுதும் காலம் மட்டுமே
எதை நோக்கி இந்த ஓட்டம்
வெற்றியை நோக்கி சத்தியமாக இல்லை காரணம்
என்னை நான் முழுமையாக நம்பிய போது
அந்த வெற்றியை அடைந்துவிட்டதாக நம்புகிறேன்
அங்கீகாரத்திற்கான ஓட்டம் இது
வெற்றி என்பது என் இலக்கு அல்ல
எப்போதும் அது நிலையும் அல்ல
அங்கீகாரம் என்பது என் அடையாளம்
அதனை நிலைப்படுத்திக் கொள்ள
அதிகமாக எழுத வேண்டும்
அனுபவப்பட்டு எழுத வேண்டும்
பிறர் அங்கீகரிக்கும்படியும் அமைய வேண்டும்
காலம் கடத்த விரும்பவில்லை
உங்களுக்கும் எனக்கும்
காலம் பொன் போன்றது
அடகு வைத்து விடாதீர்கள்
அடுத்தவரை நம்பி
ஆக்கத்திற்குச் செலவு செய்யுங்கள்
காசாக இருந்தாலும்
காலமாக இருந்தாலும்
எவரையும் நம்பாதீர்கள்
என்னையும் நம்பாதீர்கள்
எதிரில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பாருங்கள்
யாருடைய இசைவுமின்றி அஃததன் கடமையைச் செய்கிறது
வலப்புறமாக ஓடிக்கொண்டே இருக்கிறது
முன்னேற்றத்தைத் தேடி
ஒன்றன்பின் ஒன்றாக ஒற்றுமையாய்ச் சுழல்கிறது
உழைத்துக் கொண்டே இருப்பதால் உயரத்தில் இருக்கிறது
கால விரயம் செய்யாதீர்
ஆயுள் காலம் தீரும் நேரம்
தெரியாதே!
இவண் ஆற்காடு க குமரன் 9789814114
Comments
Post a Comment