இருப்பவன் விதிப்பதே விதி! – ஆற்காடு க. குமரன்
இருப்பவன் விதிப்பதே விதி!
அரை நாழிகையில் அவதரித்தால் அரசன் ஆவான்
ஆருடன் சொன்னதைக் கேட்டு அறுத்து எடுக்கிறான்
என் இறப்பு அடுத்தவனுக்குச் சிறப்பு என்றால்
என் கதையை முடிக்கிறான்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில்
இறந்தவர்கள் விதி முடிந்தா இறந்தார்கள்?
எவனோ விதித்ததால் இறந்தார்கள்
சாத்தான்குளம் சம்பவம்
சடுதியில் முடிந்தது
சட்டமும் மறந்தது
விதி முடிந்ததால் நிகழ்ந்த மரணமா?
விதிமீறலால் நிகழ்ந்த மரணமா?
எவனும் வாய்ப்புக்காக வாசலில் காத்திருப்பதில்லை
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறான்
வசதிகளுக்காக ஏங்குவதில்லை
வசதிகளே அசதி கொள்ளுமளவுக்கு ஆண்டு களிக்கிறான்
தற்கொலை மரணங்கள் தலைவிதியா
தன்மானம் தள்ளிச் செய்த கொலையா?
விபத்தில் ஏற்படும் மரணங்கள் விதி முடிந்து போவது
விவேகம் இல்லாமல் பயணிப்பதால் வருவதா?
நேரம் சரியில்லை என்று எவனாவது சொன்னால்
நம்பாதீர்கள் நேரத்தைக் கண்டுபிடித்தது
கடவுள் அல்ல மனிதர்கள்!
கெட்ட நேரத்தை எதற்கு இந்தக் கேடு கெட்ட மனிதர்கள்
கண்டு பிடித்தார்கள்?
இராகு காலம் எமகண்டம் தனியாகவா இருக்கிறது
இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் தானே இருக்கிறது!
கெட்ட நேரத்தை எதற்குக் கடிகாரத்தில்
வீட்டில் மாட்டி வைக்கிறீர்கள்?
இராகுகாலம் எமகண்டம் பார்த்தா இயற்கை இயங்குகிறது?
இவற்றைப் பார்த்து இயங்காமல் இருக்கும் இந்த மனிதன்
இயற்கை மனிதனா இல்லை
ஆய்வுக் குழாயில் பிறந்த செயற்கை மனிதனா?
என் மூதாதையர்களின்
ஆயுள்காலம் நூறினைத் தாண்டியது
என் தந்தையின் ஆயுள் காலம்
எண்பதில் முடிந்தது
எந்தன் ஆயுள் காலம் அறுபதில்
முடிந்து போகும்
என் மகனின் ஆயுள் காலம்
நாற்பதில் முடியக்கூடும்
என் பேரன் பேத்திகள்
பிறவாமலும் போகக்கூடும்
இவை எல்லாம் விதியின் விளையாட்டா
இல்லை இல்லை
விதைத்தவனின் விளையாட்டு
வணிகத்தின் விளையாட்டு
விஞ்ஞானத்தின் விளையாட்டு
வேதியல் உரங்கள்
அதிநவீனக் கருவிகள்
குறைந்துபோன உடலுழைப்பு
கூடிப் போன உடல்பருமன்
தேடிக்கொண்ட தீய பழக்கங்கள்
வாடி வதங்கித் தேடிக்கொள்ளும் மரணம்
உனது நலவாழ்வுதான் உனது ஆயுளைத் தீர்மானிக்கிறது
நீர் நிலைகள் தொட்டிகளாய் மாறி எப்போது
மொட்டை மாடியில் குடி புகுந்ததோ
அப்போதே மண்ணின் நீர் வளம் குறைந்து போனது
இயற்கையை மீறி நினைத்தபோதே
இயல்பை இழந்து விட்டான் இந்த மனிதன்
செயற்கையை நம்பத் தொடங்கிய போதே
செத்தொழிந்து விட்டான்
உணர்வுகள் மட்டும் ஆங்காங்கே
மின்னலைப் போல் தோன்றி மறைகிறது
விதி என்று ஏதும் இல்லை
விளங்காதவன் பேசும் விதண்டாவாதம்
விதி என்று ஏதும் இல்லை
மதி இல்லாதவனுக்கு மறை
இறைவனை இல்லை என்று சொல்லும் ஒரு கூட்டம்
இல்லாத இறைவனை வைத்து
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம்….
நானே இறைவன் என்று
நாடகம் போடும் ஒரு கூட்டம்
இவர்களுக்கெல்லாம் விதியை விதித்தது யார்
விதி என்பது
நம்பிக்கை இல்லாதவனின் நம்பிக்கை
வழியில் ஒரு விலையுர்ந்த பொருள்
உங்களுக்கு கிடைக்கிறதென்றால்
உங்களைப் பொறுத்தவரை அது நல்லூழ்
அதைத் தவற விட்டவனுக்குத் தீயூழ்
ஒருவருக்கு இழப்பு ஒருவருக்குச் சிறப்பு
இதற்குப் பெயர் விதியல்ல
மதி இழந்ததால் வந்த சதி
தொப்புள் கொடியைக் கத்தரித்துத்
தொடங்கப்பட்ட உன் வாழ்க்கை
மூச்சுக் குழாயைக் கத்தரித்திருந்தால்
சுடுகாடு சேர்ந்திருக்கும்
விதியை நம்பாதே மதியை நம்பு
விதிப்படி எதுவும் நடப்பதில்லை
இருப்பவன் விதித்தபடி நடக்கிறது
Comments
Post a Comment