பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ – முனைவர் பா. இரா. சுப்பிரமணியன்
அகரமுதல
பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ முனைவர் பா. இரா. சுப்பிரமணியன்
அணிந்துரை
முனைவர் அ.செந்தில்நாராயணன் சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்மொழித் துறையில் முனைவர்ப்பட்ட ஆய்வாளராக இருந்தபோதும், பின்னர் எங்கள் மொழி அறக்கட்டளையின் தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதித் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியபோதும் தமிழ் இலக்கண ஆய்வில் அவர் காட்டிய ஆரவாரம் இல்லாத ஆர்வத்தின் அழுத்தத்தை உணர்ந்திருக்கிறேன். அழுத்தம் இல்லாத ஆர்வம் நீர்க்குமிழிபோல் கண நேரத்தில் காணாமல்போய்விடக் கூடியது. செந்தில் நாராயணனின் நிலைத்த, அழுத்தமான ஆர்வத்தின் வெளிப்பாடாகத்தான் தொல்காப்பிய உரைகள் என்னும் இந்த நூலைக் காண்கிறேன்.
தொல்காப்பியத்திற்கு எழுந்த உரைகளுள் முதலாவது இளம்பூரணரின் உரை. தொல்காப்பியத்திற்கும் இளம்பூரணரின் உரைக்கும் குறைந்தது 1200 ஆண்டு கால இடைவெளி இருக்கிறது. இந்த நீண்ட கால இடைவெளியில் இலக்கண ஆர்வலர்களிடையே அல்லது சமணத் தமிழ்த் துறவிகளிடையே தொல்காப்பியப் பயிற்சி இருந்திருக்க வேண்டும். அந்தப் பயிற்சியில் மறுப்பும் மறுப்பிற்கு மறுப்பும் இருந்திருக்காது என்று தோன்றுகிறது. செந்தில் நாராயணன் இளம்பூரணர் உரையைப் பற்றி ஓரிடத்தில் “இளம்பூரணர் உரையில் எவ்வித மறுப்புகளும் இல்லை” (பக். 55) என்று குறிப்பிடுவது கவனத்தைக் கவர்கிறது.
தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் கிடைத்திருக்கும் உரைகளில் பரவி, விரவிக் கிடக்கும் இலக்கணச் செய்திகள் அருமையானவை. அவற்றை எல்லாம் ஒருசேரக் காணக்கூடிய அரிய வாய்ப்பினை செந்தில் நாராயணன் ஐந்து தலைப்புகளில் திரட்டித் தந்திருக்கிறார். அந்த ஐந்து தலைப்புகளுள் ‘சொற்பொருள் விவரிப்பு’ என்பதும், ‘சொற்பொருள் விவரிப்பு-உத்திகள்’ என்பதும் அகராதி உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், பொதுவாகச் சொற்பொருள் குறித்து ஆய்பவர்களுக்கும் சிந்தனையைக் கிளறும் பல தகவல்களைக் கொண்டுள்ளன. நூலின் இறுதியில் உரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்பொருள் விளக்கங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சிலவற்றை இங்குக் காட்ட விரும்புகிறேன்.
அந்தப் பட்டியலிலிருந்து ஒரு தொகுப்பாக உள்ள சொற்களுக்கு உரையாசிரியர்கள் பொருள் தரும் முறை அல்லது வரையறை செய்வது இன்றைய அகராதியியலாளர்கள் பின்பற்றப் பரிந்துரைக்கும் முறையாக உள்ளது.
மாலை – இராப்பொழுதின் முற்கூறு
யாமம் – இராப்பொழுதின் நடுக்கூறு
வைகறை – இராப்பொழுதின் பிற்கூறு
விடியல் – பகற்பொழுதின் முற்கூறு
இவை அனைத்தும் இளம்பூரணரின் பொருள் விளக்க முறை. முன் பகுதி, பின் பகுதி என்னும் இரண்டை அடிப்படையாக்கி, இரவிற்கு மூன்றும் பகலிற்கு ஒன்றுமாகப் பிரித்து ஒரு வகை-மாதிரியில் பொருள் தந்திருக்கும் முறை சுருக்கமானது, குழப்பத்தைத தவிர்ப்பது. இன்றைய அகராதிகளில் காணப்படும்
ஞாயிறு – வாரத்தின் முதல் நாள்
திங்கள் – வாரத்தின் இரண்டாவது நாள்
என வார நாட்களுக்கு எண்ணிட்டு விளக்கும் முறையை நாம் இளம்பூரணரிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கற்றுக்கொண்டிருக்க வேண்டிய வகை-மாதிரி அவரிடம் உள்ளது.
‘உணவு’ என்பதற்கு உரையாசிரியர் சேனாவரையர் தரும் விளக்கத்தைப் பார்க்கலாம்.
உணவு – பசிப் பிணி தீர நுகரப்படும் பொருள்
பசியைப் பிணியாகக் கருதியிருக்கிறார், சேனாவரையர். பிணியை நோயாகக் கருதாமல் பசியால் ஏற்படும் வேதனை என எடுத்துக்கொண்டால், அந்த வேதனை தீர்வதற்காக உட்கொள்வது எல்லாம் உணவு என்பது சேனாவரையர் கருத்து.
‘கற்பு’ என்பதற்கு உரையாசிரியர் இருவர் விளக்கம் தந்துள்ளனர். நச்சினார்க்கினியர் இரண்டு இடங்களில் விளக்கியிருக்கிறார்.
“கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கம்”
“தன் கணவனைத் தன் தெய்வம் என்று உணர்வதொரு மேற்கோள்” (மேற்கோள் = உறுதி)
நச்சினார்க்கினியர் கணவன்–மனைவி என்னும் உறவு வட்டத்திற்குள் கணவனின் மேன்மையை நிலைநிறுத்துகிறார்.
ஆனால் முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர்
“மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்வு”
எனக் கணவன்–மனைவி, மேன்மை-பணிவு என்னும் வட்டங்களுக்குள் கற்பை வைக்கவில்லை. பெண்களின் மனதில் மாந்தரைக் காண்கையில் உண்டாகும் நிகழ்வு என ஓரு புதிய கோணத்தில் பார்க்கிறார். இளம்பூரணர் இவ்வாறு கூறியதன் காரணம் புலப்படவில்லை. எனவே மேலும் ஆய்விற்கு உரியது.
உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளும், அவர்களின் சமயச் சார்பும் அவர்கள் தரும் பொருள் விளக்கங்களில் ஒளிராமல் இல்லை. பொருளதிகாரத்தில் பேராசிரியர்
உயர்ந்தோர் – அந்தணரும் அவர் போலும் அறிவுடையோரும்
என விளக்கம் தந்திருப்பது அவர் காலத்தில் அந்தணரைக் குறித்த சமூக மதிப்பீடு.
இளம்பூரணர் பாங்கன் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கமும் சமூக மதிப்பீடு சார்ந்ததாகவே உள்ளது.
பாங்கன் – ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன்
அவரே பார்ப்பான் என்பதற்கு
பார்ப்பான் – உயர் குலத்தானாகிய தோழன்
என்று கூறுகிறார். யார் இழிகுலத்தானாகிய தோழன் என்று கருதப்பட்டனர் என்பதை பிற்சேர்க்கையில் உள்ள பட்டியலிலிருந்து அறிய முடியவில்லை.
உரையாசிரியர்கள் சில சொற்களுக்குத் தந்துள்ள பொருள் விளக்கம் சற்றே வியப்புத் தருவதாகவும் உள்ளது.
ஈ – ஒரு பறவையின் பெயர்
தெய்வச்சிலையார் ஈயைப் பறவையாகக் குறித்திருப்பது சற்றே வியப்பானது. சிறகுகள் உடையதாக இருந்தாலும் பறவைக்குச் சிறந்த உதாரணமாகக் காட்டக்கூடிய காகம், புறா போன்றவற்றிவலிருந்து ‘ஈ’ பெரிதும் விலகிச் சென்றிருப்பதால் பறவை இனத்தைச் சார்ந்ததாக நாம் அதைக் கொள்வதில்லை.
தொல்காப்பிய இலக்கணக் கருத்துகளை உரையாசிரியர்கள் எவ்வாறு விளக்கியுள்ளனர் என்பதை நூலாசிரியர் ஐந்து இயல்களில் விளக்கியுள்ளார்.
“… உரையாசிரியர்கள் நேர்த்தியான சில வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவையாவும் இந்நூலின் மூன்றாம் இயலுள் விளக்கப்பட்டுள்ளன”
என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த இயல் இலக்கண ஆய்வாளர்களின் கவனத்திற்கு உரியதாகிறது.
இறுதியாக, செந்தில் நாராயணனின் தொல்காப்பிய உரைகள் என்னும் இந்நூல் பல ஆய்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் இட்டுச்செல்லக் கூடிய தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. பல விரிவுகளுக்கு வழிவகுப்பதே இந்த நூலின் பலம். பலத்தைப் படித்துப் பார்த்து உணரவேண்டும். செந்தில் நாராயணனின் முதல் நூல் அவர்க்கு வெற்றி தந்திருக்கிறது.
நூலின் விற்பனையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இந்தக் ‘கனமான’ இலக்கண ஆய்வு நூலை வெளியிட முன்வந்த சந்தியா நடராசனும் பாராட்டுக்கு உரியவர்.
சென்னை 18.05.2016 பா. இரா. சுப்பிரமணியன்
இயக்குநர்
மொழி அறக்கட்டளை
எண்: 27, 3 ஆவது கிழக்குத் தெரு
திருவான்மியூர், சென்னை – 600 041.
தொடர்பு எண் 044 24424166
மின்னஞ்சல்: mozhitrust@yahoo.com
Comments
Post a Comment