சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2019 கருத்திற்காக.. சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரைச் சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை. மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் ‘இலெமூரியா’ என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது ‘இலெமூர்’ என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று தார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம். வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் எனப் பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய ‘பேரியல...