வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) பெரியாரைத் துணைக்கொளல்
அகரமுதல 166, மார்கழி10, 2047 / திசம்பர்25, 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 25 திசம்பர் 2016 கருத்திற்காக.. (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் பெரியாரைத் துணைக்கொளல் பெரியா ரரியன பெரியன செய்பவர்; பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்; பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்; மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்; இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்; மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்; 394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்; மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்; பின்னுறுந் தீங்கெலா முன்னறிந் தொழிப்பவர். மேலும் பின்னால் வரப்போகும் தீமைகளை முன்னரே அறிந்து அதை நீக்குபவர் ஆவார். அவரது துணைகொள லரும்பெருங் காப்பு. பெரியவர்களின் துணையைப் பெறுவது மிக அரிய உயர்ந்த பாதுகாப்பு ஆகும். ...