காரைக்கால் அம்மையார்
உலகின் சிறந்த கவிகளில் ஒருவர் - காரைக்கால் அம்மையார்
தத்துவ தரிசனம் எந்தச் சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது
என்பதை உலகத்திலுள்ள பலமொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும்.
வார்த்தை, ஓசை முதலியனவற்றிற்கும் அப்பால் கவிதைக்கு ஒரு ஆத்மா
இருக்கிறது- அந்த ஆத்மாதான் கவிதையியே முக்கியமான அம்சம் என்று சொன்னால்
சுலபமாகவே எல்லாருமே ஏற்றுக்கொண்டு விடுவார்கள். இந்தத் தத்துவ ஆத்மா
இருக்கிறதே இது எல்லா மொழிக் கவிகளுக்கும் ஒன்றுதான். ஆங்கில ஷேக்ஸ்பியரும்
சரி, இத்தாலிய டாண்டேயும் சரி, தமிழ்க் காரைக்காலம்மையாரும் சரி-
எல்லாருமே ஒரு ஆத்ம மானஸரோவரிலிருந்துதான் தங்களுடைய கவிதைக் கங்கையைக்
கொணருகிறார்கள்.
உலகத்திலுள்ள ஞானமெல்லாம் எப்படி
ஷேக்ஸ்பியருக்கு வந்தது என்று அவர் கவிதையைப் படித்து ஆச்சரியப்பட்டுக்
கேட்பவர்கள் உண்டு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிற வகையில்
ஷேக்ஸ்பியரேயல்ல என்றும், வேறு எல்லாம் தெரிந்த வசதியுள்ள ஒருவர் என்றும்
சிலர் பதிலும் சொல்வதுண்டு. அதற்கு அவசியமேயில்லை. மனித குலத்துக்கெல்லாம்
பின்னாலுள்ள ஆத்ம ஞான மானஸரோவரை எட்டி அணுகக் கற்றுக்கொண்ட கவிக்குக் கவிதை
அற்புதமாகத்தான் அமையும்.
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றின் நீர்மையே-மேலுலகத்(து)
எக்கோலத் தெவ்வுருவில் எத்தவங்கள் செய்வோர்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்
என்று அற்புதத் திருவந்தாதியில் பாடுகிற காரைக்காலம்மையாரை மனித ஞான மானஸரோவரைக் கண்டவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
கலை,
இலக்கியம் இவை போலவே, தெய்வத்துக்கும் உருவமும் உருவமின்மையையும்தான்
அற்புதமான லக்ஷணங்கள். வேறு இலக்கணமே இதற்குத் தேவையில்லை என்று
சொல்லிவிடலாம்.
ஏதொக்கும் ஏதாவ்வா தேதாகும் ஏதாகா(து)
ஏதொக்கும் என்பதனை யாரறிவார்
யார்
அறிவார்? ஆனால் வார்த்தைகளுக்கு அகப்படாத ஒன்று உருவம் எடுக்கிறது.
எடுக்கிற இடமும் உண்டு. உலக மொழிகள் எல்லாவற்றிலுமே கவிதை வார்த்தைகளில்
அகப்படாத ஏதோ ஒன்றுக்கு வார்த்தையும் வடிவும் தர முயலுகிறது. தெய்வேம்
தேடி, பக்தி செய்கிற முயற்சியும் அதேபோல ஒன்றுதானே? அதில் என்ன சந்தேகம்?
காரைக்காலம்மையார் கவிதை வடிவு கண்டவர். அதை மாற்றி மாற்றி அவர் அமைத்துப்
பாடி அற்புதத் திருவந்தாதியைக் கவிதையாகவும் தத்துவமாகவும் நமக்குக்
காட்டுகிற காட்சி மகத்தானது.
அன்று திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்று திருவுருவும் காண்கிலேன்
என்று
சொல்கிற கவியேதான் நமக்குச் சிவபிரானுடைய கழுத்திலே உள்ள மறுவையும்
காட்டுகிறார். மறுவை மட்டும் கண்டால் போதுமா? முடிமேல் மதியும், கழுத்திலே
நாகங்களும்தான் புலனாகின்றன.
கலங்கு புனற்கங்கை யூடாட லானும்
இலங்கு மதியிலங்க லானும்-நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேல் பாம்பியங்க லானும்
விரிசடையாம் காணில் விசும்பு
என்றும்,
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ
என்று சொல்ல முடிகிறது கவிக்கு.
உருவத்தையும்,உருவமின்மையையும்
டாண்டேயாலும் இதே அழகுடன் சுவர்க்கத்தில் வைத்து, ஒரு கிறிஸ்துவ சாஸ்திரப்
பயிற்சியுடன் சொல்ல முடிகிறது. காரைக்காலம்மையாரில் இதே அழகும் ஆத்மாவும்
தத்துவமும் சிவபெருமான் பெயரால் வெளியாகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம்.
ஆத்ம ஞானத்தை முட்டும் இந்த இலக்கிய அனுபவம் அற்புதமானது என்றே சொல்ல
வேண்டும்.
உருவம் சரி-உருவு இல்லாமை சரி. அதேபோல விரிந்தும் குறுகியும் நிற்கும் திறந்தான் எங்கே? எப்படி வார்த்தையில் அடைப்பது?
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க-ஞானத்தால்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தான்என்பேன் யான்
‘யான்’
என்கிற அரங்கு போதும் அவனுக்கு- கலைக்கு-கவிதைக்கு-இலக்கியத்துக்கு. ஆனால்
அவன் உருவெடுத்து ஆடும்போது சில சமயம் அரங்கு ஆற்றாது. டாண்டே கண்களை
மூடிக்கொள்கிறார் தன் கவிதையிலே- காரைக்காலம்மையார் திசைகளையே சிதறி விழச்
செய்கிறார்.
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகாள்
முடிபேரில் மாமுகடு பேரும்-கடகம்
மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றாது அரங்கு.
ஆத்ம
மானஸரோவரை எட்டிப் பிடித்துவிட்டோம்- "இன்று நமக்கெளிதே!" என்று
பாடுகிறார் காரைக்காலம்மையார். ஆமாம். இன்று நமக்கெளிதே, டாண்டேக்கும்
காரைக்காலம்மையாருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் பிறகு என்று சொல்லத்
தோன்றுகிறது.
காரைக்கால் அம்மையாரே தன்னை காரைக்கால்
பேய் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளுகிறார். சிவகணங்களில் ஒன்றாகத் தன்னை
நினைத்து, அரனாடும் அரங்கைத் தன் நெஞ்சாக நினைத்த காரைக்காலம்மையார்,
"அரங்கமாய்ப் பேய்க் காட்டில் ஆடுவான்" என்று கூறி உலகையே
திருவாலங்காடாகவும், ருத்திர பூமியாகவும் காட்டுகிறார்.
அவரின்
அற்புதத் திருவந்தாதியை paradise என்று சொன்னால் மூத்த திருப்பதிகத்தைத்
தன்மை சிறிதும் மாறாத inferno என்று சொல்லலாம். ஆனால் மனித சங்காத்தம்
இல்லாத inferno அது. நரகம் அல்ல-நல்லது தீயதன் விளைவு அல்ல- வெறும்
வார்த்தைகளால் விளைந்த நரகம்.
சிவன் என்கிற
மரபையும்,தத்துவம் என்கிற உண்மையையும் கைவிட்டுவிடாமல் காரைக்காலம்மையார்
தமிழில் அற்புதமாக நமக்குக் கவிதை செய்து தருகிறார். பக்தியை மீறிய ஒரு
கவிதை பாவம் அவரிடம் கனிந்திருக்கிறது. அனுபவிக்கப் பழகிக்கொள்பவர்கள்
பாக்கியசாலிகள்.
"அண்டமுடி நிமிர்ந்தாடும்" அந்த ஒன்றை அறிந்துகொள்ள உலகத்துச் சிறந்த கவிகளிலே ஒருவராக நமக்குக் காரைக்காலம்மையார் பயன்படுகிறார்.
Comments
Post a Comment