வள்ளலார் போட்ட பூட்டு!

வள்ளலார் போட்ட பூட்டு!








வள்ளலார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன் புருஷோத்தமன் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு மதுரை ஞானசம்பந்தர் சுவாமிகள் மடத்திற்குச் சென்றுவிட்டார். அந்த மடாதிபதிக்கு ராமலிங்க அடிகள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த அங்கிருந்த புலவர்கள் சிலர், "இராமலிங்க அடிகளை பெரிய வித்துவான் என்று சொல்கிறார்கள்; ஆனால் கடிதம் பாமரத்தன்மையாக உள்ளது, அவருக்கு இலக்கணப் புலமை கிடையாது' என்று கூறினர். அதன்பொருட்டு இராமலிங்க அடிகள் மீண்டும் சன்னிதானத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் அந்தப் புலவர்களால் அக்கடிதத்தைப் படித்து புரிந்துகொள்ள இயலவில்லை. வள்ளலாரின் இலக்கண நுண்மான் நுழைபுலத்துக்கு இக்கடிதமே மிகச்சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இது "வள்ளலார் கடிதங்கள்' (பக்.100) என்ற நூலில் "இலக்கண நுண்மான் இயல்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுவரை இதற்கு சரியான விளக்க உரை இல்லை என்பதால், இயன்ற அளவு விளக்க உரை எழுதியுள்ளேன்.
திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய இலக்கணக் கடிதத்தின் விளக்கம் இதுதான்:
இயல்வகையான் இன்னவென் றவற்றின் பின்மொழி: இயல்புடைய மூவர். 1.பிரம்மசரிய ஒழுக்கத்தான், 2.மனைவி வழிபடத் தவம் செய்பவன், 3. முற்றும் துறந்த யோக ஒழுக்கத்தான். (யோக)
மதிக்கு முன்மொழி: மதி - திங்கள், முன்மொழி - ஞாயிறு (யோக ஞாயிறு)
மறைக்கு முதலீறு: மறை- ஆகமம், முதலீறு - முதலாகவும் ஈறாகவும் விளங்கும் ஆகமவடிவம்.
விளங்க முடிப்பதாய பின்மொழி: விளங்க-விளங்குமாறு, முடிப்பது -சூடியது, பிறைமதி பின்மொழி (மதி)
அடைசார் முன்மொழி: அடை-சொல்லைச் சிறப்பிக்கும், சொல்-வளர்திரு, முன்மொழி- வளர் (மதிவளர்)
ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு: ஞாங்கர் - உயர்வு (உயர்ந்து விளங்கும் ஞானிகட்கு)
பொய்யற்கு எதிர்சார்புற்ற: பொய்யன்-இராவணன்(கு) எதிர்சார்புற்ற - எதிர்ப்பக்கம் இருந்த இராம(ன்)
மூலி ஒன்று: மூலிகை ஒன்று சாதிலிங்கம் - வேறுபெயர் லிங்கம்-(இராமலிங்கம்)
வளைந்து வணக்கம் செய்த: தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்து
ககனநீர் எழில் என்றும்: ககனம் - வானம், நீர்-ஆறு, வான்கங்கை, எழில்-உயர்வு (வான் கங்கை அளவு உயர்வு), உயர்வு - உத்தரம், உத்தரம்-மறுமொழி
வான்வழங்கு பண்ணிகாரம் என்றும்: வான்-விண், பண்ணிகாரம் - அப்பம் (விண்ணப்பம்)
நாகச்சுட்டு மீன் என்றும்: நாகம் - மலை, வரை, சுட்டு-அது, இது, உது, மீன் - மகரம் (ம்) வரை+உது+ம் = வரையுதும்
அண்மைச் சுட்டடுத்த ஏழாவதன் பொருண்மை: அண்மைச்சுட்டு - இ, ஏழாவதன் -ஏழாம் வேற்றுமையின், பொருண்மை - பொருள், இடம். இ+இடம்= இவ்விடம்
உம்மை அடுத்த பல்லோர் வினாப்பெயர்: பல்லோர் வினாப்பெயர்-யாவர், உம்மை அடுத்த(து) யாவர்+உம்= யாவரும்
குறிஞ்சி இறைச்சிப் பொருள் ஒன்றனொடு புணர்ப்ப: குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள் பதினான்கினுள் ஒன்று கிளி. கிளிக்கு வேறு ஒரு பெயர் "சுகம்'
சேய்மைச் சுட்டடுத்த அத்திறத்து இயல் யாது?: சேம்மைச் சுட்டு - அ, அத்திறத்து-அ+அத்திறத்து=அவத்திறத்து. அவ-அப்பால், அவ்விடம். திறத்து-சுற்றத்தின், இயல் -தன்மை (யாது) அவ்விடத்தில் உள்ள சுற்றத்தின் நலம் எவ்வாறு உள்ளது?
இரண்டன் உருபொடு புணர்ந்த தன்மைப் பன்மை: இரண்டன் உருபு - ஐ (சேர்ந்த), தன்மைப் பன்மை -எம், எம்+ஐ= எம்மை
ஆறாவதன் பொருட்டு ஆக்கினார்க்கு: ஆறு-சமயம், ஆவது-நல்வழி(யில்), ஆக்கினார் -செலுத்தியவர் கருங்குழி மணியகாரரான ரெட்டியாருக்கு, உய்த்த - கிடைத்த
கற்பியல் அதிகரிப்பின் வரும்: கற்பியல்- இல்லறம், அதிகரிப்பு - அதிகாரம் புருஷ(ன்)
தலைமகன் பெயர்: தலைமகன் - உத்தமன் -புருஷோத்தமன்
ஊகக் கழிவிலை: ஊகம் - மன மயக்கம், கழிவில் -மிகுதியில், ஐ-தந்தை(யை)
இரண்டினோடு இரண்டிரண்டு: இரண்டு ல இரண்டு ல இரண்டு = எட்டு-விலகி (னன்)
பெயரவும் - மீண்டும்
மகரவீற்று முதனிலைத் தனிவினை: - வம் (வம்-வா)
செயவென் வாய்ப்பாட்டு வினை எச்சத்தனவாக: வர (வந்தால்)
கலம்பகச் செய்யுள் உறுப்பாக: கலம்பகச் செய்யுள் உறுப்புகள் பதினெட்டினுள் ஒன்று களி - மகிழ்ச்சி +ஆல் (மகிழ்ச்சியால்) சிறத்தும் - மிகுவோம்.
இக்கடிதத்தில் வள்ளலார் சொல்ல வந்த செய்திகளைக் காண்போம். "யோகஞாயிறு, ஆகமவடிவம், மதிவளர் உயர்ந்துவிளங்கும் ஞானிகட்கு, இராமலிங்கம் மறுமொழி விண்ணப்பம் வரையுதும். இவ்விடம் யாவரும் சுகம். அவ்விடத்தில் உள்ள சுற்றத்தின் நலம் எவ்வாறு உள்ளது? எம்மை நல்வழியில் செலுத்திய கருங்குழி மணியகாரரான ரெட்டியாருக்குக் கிடைத்த புருஷோத்தமன், தந்தையை விலகினன். மீண்டும் வந்தால் மகிழ்ச்சியால் மிகுவோம். ஓர் விசேடணத்து ஆ.வேலையன் (ஆறுமுகமுதலியார் மகன் வேலாயுத முதலியார்) பின்னர் எழுதிமுடித்தது. சில காரியங்களுக்காக சிதம்பரம், மருதூர் செல்ல எண்ணினோம். விரும்பியவற்றை விரும்பியபடியே அடைக. மிகுதியான மாறுபாட்டை (கணைச்சலம்-கணை-மிகுதி; சலம்-மாறுபாடு) நீங்கினோம். மணிமுடியைச் சூட்டிய இராமலிங்க வள்ளலார் உத்தரவின்படி வேலாயுத முதலியார் எழுதியது. இவ்வாறு அக்கடிதம் அமைகிறது.

5.10.13 - அருட்பிரகாச வள்ளலாரின்
190-ஆவது அவதாரத் திருநாள்.

"இலக்கண நுண்மாண் இயல்'

""உணர்ந்தோரானியல் வகையவின்ன வென்றவற்றிற் பின்மொழி மதிக்கு முன்மொழிமறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய பின்மொழியடைசார் முன்மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு பொய்யற் கெதிர்சார்புற்ற மூலியொன்று வளைத்து வணக்கஞ்செய்த ககந நீரெழி லென்றும் வான் வழங்கு பண்ணிகார மென்றும், நாகச்சுட்டு மீனென்றும் வேறு குறிப்பதொன்று.
அண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மை யும்மையடுத்த பல்லோர் வினாப் பெயர்ப் பொருள் குறிஞ்சி யிறைச்சிப் பொருளொன்றனோடு புணர்ப சேய்மைச் சுட்டடுத்த வத்திறத்தியல் யாது.
இரண்டனுருபொடு புணர்ந்த தன்மைப் பன்மை யாறாவதன் பொருட் டாக்கினார்க் குய்த்த கற்பிய லதிகரிப்பின் வருந் தலைமகட்பெயர விரண்டினோ டிரண் டிரண் டூகக் கழிவிலைப் பெயரவு மகாரவீற்று முதனிலைத் தனிவினைச் செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சத்தனவாகக் கலம்பகச் செய்யுளுறுப் பாற்சிறத்தும்.
இருவகை முதற்பொரு ளொன்றன் பாகுபட் டுறுப்பிற் குறித்த வைம்பெரும் பூதத்தோர் விசேடணத் தெதிர்மறை நடுக்குறை யியற்சொற் பெயர்வுயிர்ப் பெயராக வெதிர்காலங் குறித்து நின்றது சிலவினைச் சார்பான் விலங்கு சூடிய வரையில் வெளியாம்.
இதனோ டீரிரு வகைப்பட்ட வோர் சார் புது நிலஞ் செலவுய்த்தனம் வேண்டுழி வேண்டியாங் குய்க்க மற்றைய பின்னர் வரைதும்.
இற்றே விசும்பிற் கணைச்சலம்
இங்ஙனம்
நங்கோச்சோழன் வீரமணி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்