தமிழ்கூறும் நல்லுலகம்
- Get link
- X
- Other Apps
தமிழ்கூறும் நல்லுலகம்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-ஆவது
வெளியீட்டு விழா மலரில் இடம்பெற்ற டாக்டர் தனிநாயக அடிகளின் "தமிழ்கூறும்
நல்லுலகம்' கட்டுரையின் (மிக நீண்ட) சுருக்கம் இது. தமிழுக்குச் "செம்மொழி'
அந்தஸ்தைப் பெற்றுத்தந்த அன்னாரின் நினைவு நாளான இன்று (1.9.1980),
"தமிழ்கூறும் நல்லுலகம்' படைத்த அன்னாரைத் தமிழ்கூறும் நல்லுலகம்
என்றென்றும் நினைவுகூரட்டும்!
ளிநாடுகளில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றுவதற்குத்
தமிழறிஞர்களுக்குக் கணக்கற்ற வாய்ப்புக்கள் உள. கீழ்த்திசை நாடுகளில்
தமிழ்ப் பண்பாடு மிகவும் பழைமையான காலத்திலேயே பரவியதும் சாவகம், சுமத்திரா
போன்ற இடங்களுக்கு, இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரேயே தமிழ்மக்கள்
குடியேறி இருக்க வேண்டுமென்பது ஹைனே கெல்டேர்ன் போன்ற அறிஞர்களின் கருத்து.
இந்தோனேசிய மொழியில் வழங்கும் சொற்கள் பல, அம்மக்கள் தமிழ்நாட்டுடன்
கொண்ட வணிகத் தொடர்பைக் குறிப்பன. எடுத்துக்காட்டாக, கப்பலைக் "கபல்'
என்கின்றனர். வேறு சில சொற்கள்: வடை, சுக்கு, இஞ்சி, கஞ்சி, கொத்துமல்லி,
குதிரை, கூடை, பெட்டி, பிட்டு போன்றவை. பாலித் தீவில் இந்து சமயக்
கோயில்கள் பல உள. அங்கிருக்கும் ஓரிடத்திற்குக் "கபல்' என்று பெயர்.
மலேயா போன்ற இடங்களில் தமிழரின் வழிபடுந் தெய்வங்களின் சிலைகளும், பண்டு
தமிழ் பேசும் மக்கள் அமைத்த கோயில்களும் உள. ஆயினும் மலேயாவைக் கடந்து
கம்போதையா வியட்னாம் போன்ற இடங்களுக்குச் சென்றால் அங்கு காணும் தமிழரின்
சின்னங்கள் பெருவியப்பைத் தருகின்றன!
கம்போதியாவின் அரண்மனையில் நடைபெற்று வந்த நாட்டியக்கலை பரதநாட்டியக்
கலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. தாய்லாந்தில் சிறப்பாகத் தமிழ்ப்
பாக்களை தாய் மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடிவருகின்றனர் என்பதை இன்று
தமிழர்கள் சிலரேனும் அறிவர். பேங்காக் மாநகருக்குச் சென்றிருந்தபொழுது
இந்து சமயப் பிராமணர் என்பவர் இருக்கும் கோயில்களைப் பார்க்கச் சென்றேன்.
அங்கு அவர்களுடய ஏடுகளிலிருந்து, தம் மன்னரின் முடிசூட்டு விழாவில்
பாடிவரும் செய்யுட்களை அவர்கள் பாடியபொழுது "தமிழ்' என்று அறியாது பாடும்
""ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை'' எனும் மாணிக்கவாசகரின்
திருவெம்பாவை (திருவாசகம்)ப் பாட்டைக் கேட்டுப் பெருவியப்பு எய்தினேன்!
திருப்பாவை, திருவெம்பாவைத் திருநாட்களைப் பண்டு மிகவும் சிறப்பாகக்
கொண்டாடி வந்தனர் தைநாட்டு மக்கள். தை மொழியில் இருக்கும் இராமாயணம்
வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியது அன்றென்றும், பெரும்பாலும் கம்பரின்
இராமாயணத்தையே தழுவி இருத்தல் கூடுமென்றும் "பியானுமன்' எனும் தை அறிஞர்
எனக்குத் தெரிவித்தார். அதே அறிஞர் "தங்கம்' எனும் சொல், தமிழிற்குச்
சீனத்திலிருந்து தை நாட்டின் வழியாக வந்த ஒரு சொல் என்றும் கருதினார்.
"தமிழ்' என்ற சொல்லை, "தமின்' என்று ழகரத்தின் இடத்தில் னகரம்
கொடுத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தைமொழியில் "தமின்' என்ற சொல்
"கடுமையான மகன்' எனப் பொருள்படும். பல்லவர், சோழர் காலத்தில் செல்வாக்குப்
படைத்த பல்லவ, சோழ மன்னர்களின் அரண்மனை முறைகளையும், சடங்குகளையும்
கடைப்பிடித்த தை மக்கள் பிற்காலத்தில் "தமிழ்' என்னும் சொல்லுக்கு இத்தகைய
பொருளைக் கொடுப்பதற்குக் காரணம் யாது?
பிற்காலச் சோழர்களின் படைகள், ஈழம் முதலிய வெளிநாடுகளின்மீது
படையெடுத்ததன் காரணமாக அந்நாடுகளுக்குப் பெருந்துன்பம் நேர்ந்தது. அதனால்
ஈழத்தில் வாழ்ந்த புத்த பிக்குகள் தம் நாட்டைவிட்டுப் புத்தமதக்
கோட்பாடுகளைப் பேணிவரும் தை நாட்டின்கண் சென்று அடைக்கலம் புகுந்தனர்.
தென்னாட்டுத் தமிழ் மன்னர்களால் தம் நாட்டிற்கு ஏற்பட்ட அழிவினை
அறிவித்தனர். அதனால் பண்டு உயர்சொல்லாக வழங்கிய "தமிழ்' எனும் சொல்
இப்பொழுது இழிவுச் சொல்லாக வழக்கில் திரிந்து வழங்குகின்றது. இப்பொருள்
மாற்றத்தை உறுதிப் படுத்தும்பொருட்டு, வானூர்தி நிலையத்தில் பணியாற்றும்
பாமரன் ஒருவனை அணுகி - ""அப்பா, "தமின்' என்ற சொல்லுக்குப் பொருள் யாது?''
என்று வினவினேன். அதற்கு அவன் சிறிதும் தயங்காது "By Tamin I mean a cruel
black Indian' என்று விடையிறுத்தது வியப்பை விளைத்தது!
பண்டைக் காலத்தில் கிரேக்க நாடு, ரோம்நாடு போன்ற மேல்நாடுகளுடன்
தமிழ்மக்கள் கொண்ட வணிகத் தொடர்பு மிகவும் சிறந்தது என்பதற்குச் சங்க
இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் நல்ல உறுதியான ஆதாரமாக அமைகின்றன. அரிசி,
இஞ்சிவேர், கருவாய் போன்ற தமிழ்ச்சொற்கள் கிரேக்க மொழியில் உள்ளன.
தமிழ் நூல்கள் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் அச்சேறின என்ற
ஒரு கருத்தும் பரவிவருகின்றது. ஆயினும் தமிழ்மொழிதான் இந்திய மொழிகளில்
முதன்முதலில் அச்சினைக் கண்ட மொழி. 1554-இல் லிஸ்பன் மாநகரில் இலத்தீன்
எழுத்துக்களைக் கொண்டு தமிழ்ச் செபங்களை ஒலிபெயர்த்த நூலினை அச்சிட்டனர்.
அஃதில் ஒரு வரி தமிழ் ஒலிவடிவைக் காட்ட, மற்றொரு வரி போர்த்துகீசிய
மொழியில் பொருளைத் தர, மூன்றாவது வரி தமிழ்ச் சொல்லிற்கு நேராகிய
போர்த்துக்கீசியச் சொல்லைத் தருகின்றது. இவ்வாறு இம்மூன்று வரிகளாகவும்
இருநிறங்களிலும் அச்சிடப்பெற்ற அழகிய இந்நூல் ஐரோப்பிய அச்சுக்கலைக்கே
அணியாக விளங்குகின்றது.
மேலும், பல பயனுள்ள கையெழுத்துப் பிரதிகளையும் பண்டு அச்சிடப்பெற்ற
தமிழ் நூல்களையும், ஜகார்த்தா, லிஸ்பன், பாரீஸ், வத்திக்கான்,
கொப்பென்கெய்கன், இலண்டன் இன்னோரன்ன நகர்களிலுள்ள நூற்கூடங்களில்
கண்டிருக்கின்றேன். மேலைநாட்டு அறிஞர்கள் பலர் இன்றும் தமிழ் ஆராய்ச்சியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களும், தமிழ்ச் சின்னங்களும், தமிழ்ப் பண்பாட்டை நினைவூட்டும்
பழக்க வழக்கங்களும் பாரெங்கும் பரவி இருக்கின்றன. இத்தகைய தமிழ்ப் பரப்பின்
பான்மையையும், செறிவையும் இயல்பையும் வகையையும் தமிழறிஞர் வருங்காலத்தில்
வரையறுத்துக்கூறத் தமிழ்த்துறைகளைக் கொண்ட
பல்கலைக்கழகங்கள் மேலான வாய்ப்புக்களை அளித்தருள்க.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment