பேராசான் இலக்குவனாரே ! - Poem about Dr.S.Ilakkuvanar
பேராசான் இலக்குவனாரே !
நட்பு இணைய இதழ்
” நம் செந்தமிழைச் சிறை பிடிப்பதை விடுத்து
என்னைச் சிறை பிடியுங்கள் ; அதுவே நான் பெறும்
பேறு ஆகும் ” எனக்கூறி சிறைஏகிய மொழிப் போராளி
டாக்டர் இலக்குவனாரின் பிறந்தநாள் நாளை (17)அவர்
பற்றிய கவிதை ஒன்று தங்களுக்கும் நண்பர்களுக்கும்
அனுப்பியுள்ளேன்.
அவரைச் சிறை பிடித்தபோது புலவர் மணி
இளங்குமரனார் ” கன்னித் தமிழ் காக்க கால்நடைப்
பயணம் செய்தால் தமிழ்ப் புலவர் காலை வெயில் சுட்டு
விடும். பட்டுப் போகும் ஆட்சி எனச்சிறை பிடித்து
விட்டனரோ?” என்னும் பொருளில் எழுதியது என்
நினைவுக்கு வருகிறது.
பெ. ஆ. 134 தொ. ஆ. 2877 தி. ஆ. 2043
நளி ( கார்த்திகை ) 02 ( 17 – 11 – ‘ 12 )
நெஞ்சம் நினைக்கிறது !
சீர்பெற் றிலங்கும்நம் செந்தமிழ் வளர்ச்சிக்கு
வேர்ஆக இருந்தபன் னூறு அறிஞர்களில்
தூர்ஆக விருந்து துலங்கச் செய்தாரில்ஆணி
வேர்ஆக விளங்கிமொழிப் போராளி ஆனார்!
வாய்மை மேடு வளர்ந்த தூய்மையாளர்
காய்(மை )க் கருத்தைக் கனவிலும் நினையார்
பொய்மை மனத்தாரை புறமொதுக்கும் மெய்மையாளர்
தாய்மை குணம் தாங்கும் தகைமையாளர்!
வாழும்தம் வாழ்க்கை கீழ்ஆயினும் தாழார்
சூழும்புகழ்த் தமிழுக்கு சூழும் தாழ்வையோ
ஆழக்குழி புதைக்க வேழமென விளங்குவார்
தாழாத் தமிழ்க்குருதி பாலாகப் பாய்வதால்!
தொங்கிச் சுழலுமிப் பூ நிலத்தில்
தங்கி வாழும் மங்காத் தமிழர்பேசிய
இங்கித மானமுதன் இன்மொழி தமிழேஎன
மங்கிய அறிவுடையோர் மனதில் பதியவைத்தார்!
காசுக்காக இத்ழ்நடத்தும் காரிகை மனத்தாரிடையே
கூசாமல் நடத்தினாரே குறள் நெறியிதழ்
ஏசாமல் ஏசினர் ஏத்திபபிழைப் போர்சிலர்
காசு பெரிதல்ல கனித்தமிழே பெரிதென்றாரே !
இருநான்கு ஆண்டுகள்அப் பெருமகனுடன் நெருக்கம்
இருக்க மாயிருந்த இன்தமிழ் உணர்வைப்
பெருக்க வைத்தார்: பெருக்கிடச் சொன்னார்
உருக்கமுடன் அன்னார் உரைத்ததை மறவேன் !
எத்தனையோ அறிஞர்கள் சத்தனைய புத்தகங்கள்
மொத்தமாக எழுதினும் சித்தம் ஈர்க்கும்
சத்தானதொல் காப்பியத்தை சரிமொழி யாக்கம்
முத்தமிழ்ப் பேராசான் முழுதாய்ந்து எழுதினாரே !
” ஏல்”பல்கலைக் கழகத்திற்கே ஒல்காப்புகழ் நம்அண்ணா
தொல்கிழவன் காப்பியத்தை இல்கிழவன் படைத்தையே
நல்கி அவர்தம் நல்லறிவு பெருக்கவும்நம்
நந்தமிழ் வரலாற்றை நன்குணர வைத்தாரே !
நூறோடு ஈராண்டு நிறைவுற்ற பிறந்தநாள்
வேர்ஆக விருந்து விளங்குகின்றார் யார்?தமிழ்ப்
போராளி யாகவாழ்ந்து சீராகததமிழ் நெஞ்சக்குருதி
நீராகஇலங்கி ஓடும் பேராசான் இலக்குவனாரே !
என்றும் நினைக்கும் நெஞ்சம்
மா. கந்தையா – செயம்
மதுரை .
Comments
Post a Comment