Skip to main content

அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார்

      14 September 2025      கரமுதல



(எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்-தொடர்ச்சி)

பழமை என்பது முதன் மாந்தன் தோன்றி வாழ்ந்து வந்த காட்டுமிராண்டிக் காலம் எனக் கருதிவிடல் வேண்டா. பண்பட்ட நாகரிகமெய்திய நல்வாழ்வு வாழ்ந்த நற்காலத்தையே. அக்காலங் கடந்து இன்றுகாறும் நடைபெறுகின்ற காலத்தையே புதுமையென்று குறிப்பிடுகின்றோம்.


பழமையில்
தமிழர் தனிவாழ்வு வாழ்ந்தனர். உயர்ந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு ஊட்டினர். தந்நலம் பெரிதெனக் கருதாது நாட்டுக்கும், மொழிக்கும் நற்பணி புரிந்தனர். தமிழ்மொழி ஒன்றே தமிழரின் ஆட்சிமொழி, பேச்சுமொழி, அனைத்து மொழியுமாக இருந்தது. தமிழர் பனிமலைமுதல் குமரிவரை பேராட்சி புரிந்தனர். சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று மேலைநாட்டறிஞர் ஆய்ந்து அறைகின்றனர். கடல் கொண்ட தென்னாடாகிய குமரிக் கண்டமே முதல் தமிழர் தோன்றிய தொல்பதி எனவும், தமிழே ஆண்டு முதலில் தோன்றிய முதுமொழியெனவும் கூறுப.
தங்கட்குள் எத்தகைய வேறுபட்ட செயல்கள், கருத்துகள் இருப்பினும், ‘தமிழ்’ என்ற அடிப்படையில் யாவரும் ஒன்றுபட்டே வாழ்ந்தனர். தமிழின வளர்ச்சிக்குத் தமிழ் மூவேந்தராகிய சேர, சோழ, பாண்டியர் மூவரும் உளமார உழைத்தமை இதற்கோர் எடுத்துக்காட்டாம். தமிழ் என்ற ஒரு மொழி கொண்டே உலகையாண்டனர். கடாரம், ஈழம்,

அரேபியா, காந்தளுர்ச் சாலை, புட்பகம், சாவகம், கிரேக்கம் முதலிய நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டு வாழ்ந்தனர். அப்பொழுது வேற்று மொழி கற்றுக்கொண்டு வேற்றுநாடுகட்கு வணிகஞ் செய்யச் செல்லவில்லை. தமிழைக் கொண்டே தரணியெலாம் தாவினர். சில நாடுகள்மீது படையெடுத்து வென்றனர்.
(இமயம்) பனிமலை வரை சென்று வென்றி கண்ட சேர அரசரோ, சோழ அரசரோ, பாண்டிய அரசரே வேற்றுமொழி கற்றுக்கொண்டு வடக்கே செல்லவில்லை. மொழிபெயர் தேயங்கட்குச் சென்ற ஞான்று, மொழிபெயர்ப்பாளர்களையே பயன்படுத்தினர். வேற்றுநாட்டு வணிகர் பலர் காவிரிபுகும் பட்டினத்தில் வந்து வாழ்ந்திருந்தமைக்குப் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்கள் சான்று செப்புகின்றன. இவற்றாலன்றோ ஒரு மொழி வைத்துலகாண்ட சேரலாதன் எனச் சிலம்பு சொல்லுகின்றது.


அறிவியல் பற்றிய ஆய்வும் இருந்தது. இன்று போன்று திங்கள் மண்டிலம் செல்லக் கூடிய திறன் இல்லையேனும், வானம்பற்றிய, விண்பற்றிய, வானில் இயங்கும் இயற்கைப் பொருள்கள் பற்றிய செய்திகளை அன்றைய அளவுக்கு இயன்றாங்கு தெரிந்திருந்தனர். ஞாயிற்றைப் பற்றியும், திங்களைப் பற்றியும் சில உடுக்களைப் பற்றியும் ஓரளவு அறிந்திருந்தனர் என்பதற்குத் தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் உள. அவைபற்றி ஈண்டு விளக்கல் இயலாது. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் படித்து அறியலாம். அன்றிருந்த சூழ்நிலையில் தமிழர் வறுமையின்றி, பொறாமையின்றி, காழ்ப்பின்றி, வஞ்சமின்றி, வன்னெஞ்சமின்றி கண்ணோட்டத்துடன், அந்தண்மையுடன் அமைதியாகவும், தந்நிறைவுடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர்.
இடைக்காலத்தில் அயல்நாட்டார் நம் நாட்டில் (நாவலந்திட்டில்) குடிபுகுந்த பின்னரே தமிழர் வாழ்வு சீர்கெட்டது; சிதைந்தது; மொழியும் தூய்மையற்றுப் போனது. இன்று தமிழ்க்காப்புக் கழகங்கள், தனித்தமிழ்க் கழகங்கள் அமைத்துச் செயல்படுத்த வேண்டிய அளவுக்கு வந்துவிட்டது. தம் நாகரிகம் இழந்து பிறர் நாகரிகத்தைத் தமதாக்கிக் கொண்டுவிட்டனர் தமிழர். நடை, உடை, நடிப்புகளிலும் பிறரைப் பின்பற்றி வாழக் கற்றுக் கொண்டனர். பல தீய பழக்கவழக்கங்கள் தமிழரிடையே புகுந்து தமிழ்க் குமுகாயத்தைத் தலைதடுமாறச் செய்தன. மொழியிலும் கலப்புண்டாயிற்று. அன்றுதான் தொல்காப்பியர் மொழிகாக்க முற்பட்டனர்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே

என்ற நூற்பா யாத்தார்.
திருவள்ளுவர் தமிழரிடையே புகுந்த, தமிழ்ப்பண்பாட்டிற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை எல்லாம் கண்டிக்கத் தொடங்கியும், தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டவும் தமிழர்க்கு நன்னெறி காட்டவும், தமிழ் மறையாகிய ‘திருக்குறளை’ யாத்தார். அதனுள் தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியன இலைமறைகாய் போன்று காணப்பெறுகின்றன. நுண்ணறிவும், நூலறிவும் இவை உடையோர்க்கு நன்கு புலனாகும்.

புதுமையில்


புதுமை வாழ்வு வாழக் கற்றுக்கொண்ட தமிழர் பல துறைகளிலும் தாழ்ந்துகொண்டே போகின்றனர்; பொறாமையைப் போற்றுகின்றனர்; வஞ்சனையை வரவேற்கின்றனர்; துணிவைத் தொலைக்கின்றனர்; தொடை நடுங்கித்தனத்தைத் தொடுக்கின்றனர்; தொன்மையை மறக்கின்றனர்; சிலர் மறைக்கின்றனர்; அளவை விஞ்சிப் பிறரைப் புகழ்கின்றனர்; போற்றுகின்றனர்; பாராட்டுகின்றனர்; உள்ளதை உள்ளபடி கண்ணின்று கண்ணறச் சொல்ல அஞ்சுகின்றனர்; எவரேனும் முன்வரினும், அவரை எச்சரித்து அடக்குகின்றனர்; எனவே, எதையும் அஞ்சாது செய்ய அஞ்சுகின்றனர்; அஞ்சி, அஞ்சிச் சாகின்றனர்; உருப்படியான செயல் எதையும் செய்ய ஒல்லாது இடர்ப்படுகின்றனர்.
கட்சிக் கண்ணோட்டத்தில் தாய்மொழியாகிய தமிழையும், நாட்டையும் மறக்கின்றனர்; வெறுக்கின்றனர்; தமிழ் நாகரிகம் இன்னதென்றறியாமல் இடருறுகின்றனர்; நாடும், மொழியும் நமக்கிரு விழிகள் என்று அறிஞர்கள் எடுத்தியம்பும் தமிழரிடம் இவை தலைகாட்டவில்லை; தன்மானத்தை இழந்தும் வாழ விரும்புகின்றனர்; தகுதியற்றவர்களையெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்; தமிழ்ச்சான்றோரைத் தலைநிமிர்ந்து பார்ப்பதில்லை; அடிமை மனப்பான்மை தமிழர்பால் அட்டை போல் ஒட்டிக் கொண்டு விட்டது; தக்கோரைப் புகழாது தகாதோரைப் புகழ்ந்து பேசக் கற்றுக் கொண்டனர்; வஞ்சம், பொறாமை, சூது, வன்னெஞ்சம், கள்ளம் யாவும் கற்றுக் கொண்டனர்; பணம் திரட்டுவது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு விலங்கு வாழ்க்கை வாழ்கின்றனர்; பரிந்துரை இன்றியோ, பணம் இன்றியோ இன்று எந்தச் செயலும் நடைபெறவில்லை; ஆதலால், பிறரைத்தகாத வகையில் புகழ்ந்தும் கால்கை பிடித்தும், பொருள் கொடுத்தும், போற்றியும் தமக்கு வேண்டும் வினைப்பாடுகள் விளைக்க வேண்டியுள்ளது.


எங்ஙனம் தமிழர் தன்மானத்துடன் வாழ முடியும்? ஒரு சிலர் பண்டைய தமிழ்ப்பண்பாட்டுடன் வாழ விழையின் அத்தகையோரைப் பலரும் கடிந்துரைத்தும், அச்சுறுத்தியும் தம் வழிப்படுத்தி விடுகின்றனர். அதற்கும் அசையாத உள்ளம் படைத்தவராயின், அவர்க்கு ஊறுவிளைக்கின்றனர்; உறுகண் செய்கின்றனர்; இடையூறு செய்கின்றனர்; இடுக்கண் இழைக்கின்றனர்; வாழ்க்கையில் முன்னேறவிடாது தடை செய்கின்றனர்; அத்தகு நல்லோர் அல்லலுற்றுத் தொல்லைக்குட்பட்டு நலிகின்றனர், வாழ வகையின்றி வாடுகின்றனர்.
தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும் உடையோரை வேற்றுக்கண் கொண்டு, இல்லை, வெறுப்புக்கண் கொண்டு நோக்குகின்றனர். எங்கே மொழி வளரும்? பன்மொழிப் பயிற்சியும், எழுத்துமாற்றமும், தமிழ்மொழிக்கு நலம் பயப்பனவாகா. ஒன்றை நன்றாகக் கற்ற பிறகே வேற்றுமொழிப் பயிற்சி விரும்பத் தக்கதாகும். வற்புறுத்தலின்றி வலியக் கற்றலே நன்றாம். தமிழ் எழுத்துகள் மாற்றப் பெற்றால் தமிழுக்கு அழிவே. இதனை வலியுறுத்துவோர் தமிழியல்பறியாத் தன்மையோரே. கொச்சைத் தமிழ் எழுதும் கோமாளிகளே தமிழைக் கெடுக்கும் தகாதோர்.


பழமையிலும், புதுமையிலும் நல்லவற்றை ஏற்றும், பழமையிலும் புதுமையிலும் தீயவற்றை ஏலாதும் வாழக் கற்றுக் கொண்டு, நல்வழியில் ஒழுகுவதே நல்லறிவுடையோரின் நற்செயலாகும். எப்பொருளைப் பற்றி எவர் மூலமாகக் கேட்டாலும், அப்பொருளின் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவுடைமை எனத் தமிழ்மறை அறைவதை அறிந்து செயல்படுத்துக

(தொடரும்)

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்