Skip to main content

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 27: புலவர் கா.கோவிந்தன்: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்

 




(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    26 : சேர, சோழ, பாண்டிய அரசுகள் – தொடர்ச்சி)

கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. இது குறித்துக் கெளடில்யர் கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். “நிலவழி நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தட்சிண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது என்று கூறுகிறார் ஆசிரியர். வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து யானைகள், குதிரைகள், நறுமணப் பொருள் வகைகள், தந்தம், தோல் மிகமிக நேர்த்தியான பொன், வெள்ளி அணிகலன்கள் வந்தன. அப்படி இல்லாமல், ஆட்டு மயிர்க்கம்பளங்கள் நீங்கலாக, தோல் குதிரை, சங்குகள், வைரம், நீலம் முதலாம் மாணிக்கங்கள், பொன்னாலான அணிகலன்கள் தட்சிண பாரதத்திலிருந்து பெருமளவில் வந்தன என்று கெளடில்யர் கூறுகிறார். தட்சிண – பரதத்தில் பற்பல சுரங்கங்கள் வழியாக, மிகச் சிறந்த வாணிகப் பொருள்கள் பெருமளவில் கிடைக்கும் நகரங்கள் வழியாக, பல்வேறு வகை மக்களை ஆங்காங்கே கொண்டுள்ள வழியாகச் செல்லும், நீண்ட வழிப்பயணம் செய்வதற்கு எளிமையானது ஏனைய வழிகளிலும் சிறப்பு வாய்ந்தது”. (இசுத்ஃகல பாத பி ஃகை மவதொ. தட்சிண பத்துஃகாஎக்ரெயான்)

ஃகய்த்துயசுவ கந்த்துஃக தந்தாசின் (உ)ரூப்பிய சுவர்ன பன்யாஃக் சாரவத்தராங்கு இத்யாசார்யஃக்கு நெதி கெளடில்யஃக்கு கம்பலாசினாசுவபன்ய வருசாஃக்கு சாங்குஃகவசிரமணிமுக்குதாஃக்கு. சுவர்ணபண்யாசுகரப்பஃகத்துரா. தட்சிணாபுத்துஃகே தட்சிணாபத்துஃகே பி பாஃகுகனிஃக்கு சார்பண்யஃக்கு பிரசித்த கதிர் அல்பவ்யாயா மொ வா வணிக்பதஃக இசுரெயான் (அருத்த சாத்திரம். சாலி, இசுகிமித்து (Julius Jolly and Richard Schmidt )வெளியீடு. பகுதி 2 : 12 பக்க ம் 30 – 34))

இது பண்டங்களைக் கொண்டு செல்லும் பழைய முறையினைப், புகைவண்டித் தொடர்களும், சுமையூர்திகளும், அழித்து விடாமல் விட்டு வைத்திருக்கம் இடங்களில் இன்றும் நாம் காண்பது போல், ‘கிரீச்’ எனும் ஒலி ஓயாது எழ, குமரி முதல் பருடலி வரையான, சீர்மிகு , சீர்கெட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் கட்டைவண்டிகளாம் வணிகச் சாத்துக்கள் மூலம் நடைபெற்ற மிகப் பெரிய வாணிக நிலை பற்றிய காட்சியைக் காட்டுகிறது. வேறு ஓர் இடத்தில் அரசன் கருவூலத்திற்குச் செல்லும் அரும் பொருட்கள் பற்றிக் குறிப்பிடும்போது, கெளடல்லியர், தாம்பரபரணி, பாண்டிய காவடகா, மற்றும் சூர்ணா (இது, பிற்காலத்தே, உரையாசிரியரால், முரசி” அதாவது கேரள நாட்டில் உள்ள முசிறிக்கு அணித்தாக ஓடும் ஆறு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது) ஆகிய இடங்களிலிருந்து வந்த இரத்தினங்கள் (அருத்த சாத்திரம் – 11 26:2) பல்வேறு வண்ணங்களில் ஆன வைடூரியங்கள் (மேற்படி 26:30 ) ஓர் உரையாசிரியர் இது, திரீராச்சியத்திலிருந்து அஃதாவது மலபாரிலிருந்து வந்ததாகக் கொள்வர்) பட்டை தீட்டப் பெற்ற மாணிக்கக்கல்லின் மேனி போல் மெத்தென்றிருக்கும். கருமை நிறம் வாய்ந்த பெளண்டுரகக் கம்பளங்கள், (அருத்த சாத்திர மொழி பெயர்ப்பாளராகிய காமா சாத்திரி யார் இவை,  பாண்டி நாட்டுச் செய்பொருள்கள் என்கிறார்) 90). மற்றும் மதுரையில் இருந்து வந்த பருத்தி ஆடைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (Arthasastra : Jolly and Schmidt. ii. 26.119)  

சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும் :

கி.மு. நான்காம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் உலகம் அறிந்த நனிமிகு புகழ்வாய்ந்த சந்திரகுப்புதன், ஒரு நூற்றாண்டின் கால்கூறு காலத்திய ஒளிமயமான ஆட்சிக்குப் பின்னர், இந்தியப் பேரரசர் பலரையும் போலவே, வைராக்கியமாகிய நோயால் திடுமெனப் பற்றிக் கொள்ளப்பட்டு, ஒரே இரவில் வாளையும் முடியையும் துறந்து சமணத்துறவியாகி பத்ரபாகுவின் 12,000 மாணவர்களில் ஒருவராகிவிட்டான். தன் குருவோடும், தன்னொத்த மாணவர்களோடும், மைசூர் மாநிலம், ஃகசன் மாவட்டத்தில் உள்ள சரவண பெல்கோலாவைக் கால்கடுக்க நடந்து அடைந்தான். ஏனையோர் ஆங்கிருந்து பாண்டிய, சோழ நாடுகளுக்குச் சென்றனராக, பத்ரபாகுவும், சந்திரகுப்புதனும் அங்கேயே தங்கிவிட்டனர். ஆங்குப் பிச்சைக்காரனாக மாறிவிட்ட அப்பேரரசன், தன் குரு இறக்கும் வரை, அவருக்குத் தேவையானவற்றை அளித்துப் பணிவிடை  செய்து கொண்டிருந்தார். சந்திரகுப்புதன், தன் ஆசிரியருக்குப் பின்னர்ப் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தான். பின்னர்த் , தான் உயிர் வாழ்ந்த பயன் கிட்டிவிட்டது : தன் உடல் தனக்கு இனிப் பயன் இல்லை என உணர்ந்ததும், சமண சமயமுறையாம், பசியோடிருந்து வடக்கிருந்து உயிர் துறத்தலாம் “சல்லெக்குஃகனம்” மேற்கொண்டு உயிர் துறந்தான். ஒரு பேரரசின் வாழ்க்கை , மறைவுகள் குறித்து நாம் கருத்தில் கொள்ளத் தேவையில்லை, ஆனால், இப்போது சாதுக்கள் என அழைக்கப்படும் ஆயிரக் கணக்கானவர், இன்று வழிபாட்டிடங்களுக்குச் சென்று திரும்பும் பல்லாயிரவர் போல வடநாடு விடுத்துத் தென்னாடு வந்தது பற்றியே கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இச்சமண முனிவர்கள் தமிழ்நாடு மலைச்சரிவுகளில் உள்ள இயற்கையான குகைகளில் வாழ்ந்து, படித்துப் பொருள் காண்பதன் மூலம், தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு ஒளிகாட்டும், கல்வெட்டுகளை அக்குகைகளில் விட்டுச் சென்றுள்ளனர். 

பெளத்த நாடோடிகள்

சமணர்களைப் போலவே, பெளத்தர்களும் தம் யோக நெறியை அமைதி குலையாமல் பயில்வதற்கு ஏற்ற தனிமை இடங்களைத் தேடி , தென்னிந்தியாவுக்கு அலைந்து திரிந்து வந்து சேர்ந்தனர். அவர்களும், இயற்கைக் குகைகளில் வாழ்ந்து கல்வெட்டுகளை விட்டுச் சென்றனர். பல இடங்களில், குறிப்பிட்ட ஒரு குகை, சமணர் வாழ்ந்ததா, பெளத்தர் வாழ்ந்ததா என்பதை அறிந்துகொள்வதில் சிறிது சிரமமே. அது போலும் குகைகள், பாண்டிய, சேர நாட்டுப் பல்வேறு மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெளத்த சந்நியாசிகளின், தொடக்கக்கால இக்குடிப் பெயர்ச்சிக்கு அரசியலோ, சமயம் பரப்பும் ஆர்வமோ, காரணங்களாகா. பண்டைக்கால இரிசிகளைப் போலவே, கி.மு. ஐந்து மற்றும் நான்காம் நூற்றாண்டு புத்த பிக்குகளும், அரசர்களின் நிறைமனத்தோடு படாத ஆதரவிலிருந்தும், துறவறச் சந்நியாசிகளை வரையறையின்றி மகிழ்விப்பதன் மூலம் மிகப் பலவாய புண்ணியத்தையும், மலிவான தகுதிப்பாட்டையும் பெறத் துடிக்கும், பொறுப்பற்ற மாணவர்களின், பொறுக்கவொண்ணாப் போலிப் புகழ்ப்பாட்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளவே, தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு வெளியேறினர். சமணர்களும், பௌத்தர்களும் முறையான மனப்பயிற்சியினை யோக முறை மூலம், மேற்கொள்ளுதல் வேண்டும்; அதன் வெற்றிப் பயிற்சிக்குத் தனிமை தேவை. சமணர்களுக்கு, இவற்றிற்கு மேலாக, சல்லெஃகனம்” என அழைக்கப்படும் ஒருவகைத் தனிச்சிறப்பு வாய்ந்த முறையாம் வடக்கிருந்து அமைதியாக உயிர் விடுதற்கு ஏற்புடைய மக்கள் நடமாட்டத்திற்கு அப்பாற்பட்ட உறைவிடமும், தேவைப் பட்டது. பண்டைக்காலத்தைச் சேர்ந்த இம் முனிவர்களுக்கு, உயிரைக் காக்கத் துடிக்கும் பேராசை எதுவும் இல்லை. மகாவீரரும், புத்தரும் மக்களைப் பெருங்கூட்டமாக வானுலகிற்கு அனுப்புவனவாகச் சமயங்களைக் கருதவில்லை. கட்டாயமாக்கப்பட்ட பிறப்பு, மறுபிறப்பு  எனும் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து தனிமனிதனைக் காக்கும் மனப்பயிற்சி முறைகளைச் சந்நியாசிகளுக்குக் கற்பித்தலே சமயமாம் எனக் கொண்டனர். இவ்வறவுரையாளர்கள் உலகத்தவர்க்கு உலக வாழ்க்கைக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை. துறவிகளுக்குத் துறவற நெறிக்கே விடுத்தனர். அவர்கள் தொழுகை இடங்களை நிறுவினார் அல்லர். நோன்பிடங்களையே கண்டனர். அவர்கள், மாணவர்களின் மனத்தைச் சமயக் கருத்துக்களால் நிரப்பினாரல்லர். மாறாக அவர் உள்ளங்களை, உயிர் உணர்ச்சிகளைத் தூண்டவல்ல அறவுரைகளால் கிளர்ச்சி பெறச் செய்தனர். எப்பொழுதும் ஓயாது இயங்கிக் கொண்டு இருக்கும் அலையலையான அகக்கிளர்ச்சிகள் அடங்கிப்போக, அவற்றின் இடத்தைத் தன்னை மட்டுமே உணரும் நிலைபேறுடைய மனவுணர்வுக்குவியல் வெற்றி கொண்டுவிட்டதோ, எப்பொழுது, கடுமையான புலனடக்க நெறி மேற்கொண்டு, தன் உயிரின் வீடுபெற்றிற்காம் விருப்பம், உலகத்தவர்க்குச் சமயக் கொள்கைகளை அவர் உள்ளம் ஈர்க்கும் சொற்களால் விளக்கி, அவ்வுலகத்து உயிர் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் குப்புறத் தள்ளப்பட்டதோ, எப்பொழுது, உணர்ச்சிக்கு உள்ளாகி, ஓயாது துடித்துக் கொண்டிருக்கும் உயிர், மாறா நியதிகளாம், வலிய இரும்புச் சங்கிலிகொண்டு சிறை செய்யப்பட்டுவிட்டதோ, எப்பொழுது, புத்தர் கூறுவது போல மனத்தொடுபடும் கோட்பாடு, கண்ணொடுபடும் கோட்பாட்டால் கெட்டு மங்கிப் போய்விட்டதோ, எப்பொழுது சாங்கியர் கூறுவது போல் புத்தியின் ‘அத்யவசாயம்” மனத்தின் ‘’சங்கல்பவிகல்பங்களால், ஒளிகெட்டு மங்கிப் போய்விட்டதோ, அப்பொழுதே, சீனர், புத்தர்களின் போதனைகள் சமணமாகவும், காத்தியாயனரும் பதஞ்சலியும் பெருங்கேடாக, மனிதனின் தன்னை மட்டுமே மதிக்கும் அகவுணர்வு மேலும் இரு சமயப் பிரிவுகளை உருவாக்கி விட்டது. அந்நிலையே பௌத்தர்களின் பேரவைகள் கூடலாயின. ஏனைய மக்களின் உயிர்களைக் காக்கும் சமயத்தின் பெயரால், வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வேட்கையால் உந்தப்பட்ட புத்தத் துறவிகள், நாட்டை அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டனர். முந்திய தலைமுறை களைச் சேர்ந்த புத்த பிக்குகள் போல் அல்லாமல் போர்க் குணம் வாய்ந்த இப்புத்தத் துறவிகள் தங்கள் சமயப் பிரசாரத்திற்கு மகதப் பேரரசின் துணையையும் பயன் கொண்டனர்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்