Skip to main content

௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும் சொற்களும் திருத்தமும் – வி.பொ.பழனிவேலனார்

 

௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – வி.பொ.பழனிவேலனார்



(க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை-தொடர்ச்சி)

தமிழ்நலம் பேணும் தகையோர்க்கும், தமிழ் பயிற்றும் தமிழறிஞர்க்கும், தமிழாய்வு செய்யும் தனியர்க்கும் சிந்திப்பதற்கு ஒன்றுள்ளது. தமிழ்மொழி ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகப் பல சீர்கேடுகளுக்கு உள்ளாகி நலிவுற்று வருகிறது. இன்று தமிழ்மொழி ஒரு பல்கலப்பு மொழியாகக் காட்சியளிக்கிறது. தமிழில் எழுதினாலோ, பேசினாலோ பலர்க்குப் புரியவில்லை. அப்படிச் செய்பவர் ஏளனப் பேச்சுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்க்குத் தமிழ் புரியவில்லை என்றால் தமிழ் வேறு எந்த நாட்டிற்குப் போகும்?

தமிழில் வேற்றுமொழிகள் பல கலந்து  தமிழின் தூய்மை, இனிமையைக் கெடுத்து விட்டதனால் தமிழர்க்குத் தமிழ் புரியாத நிலை உருவாகிவிட்டது. முன்னர் மணிப்பவளநடை உண்டாயிற்று. இன்று கொச்சை நடையுண்டாகியிருக்கிறது. இன்னும் ஒரு நூறு ஆண்டு கழிந்து என்ன நடையுண்டாகுமோ? தமிழில்லா நடையுண்டாயினும், வியப்படைதற்கில்லை.

ஏனெனில், இன்று தமிழ்நாட்டு மக்கள் பெயர் தமிழில் இல்லை; ஊர்ப்பெயர்கள் பல தமிழில் இல்லை; இறைப் பெயர்கள் தமிழில் இல்லை; தமிழர் நடத்தும் நிறுவனங்களின் பெயர்கள்  தமிழில்  இல்லை;  தமிழரின்  இல்லப்  பெயர்கள்கூடத் தமிழில் இல்லை; தமிழர் தொழில் செய்யும் தொழில் பெயர், தொழிலகப் பெயர்கள் தமிழில் இல்லை; தமிழர் வாழும் தெருப்பெயர்கள் பல தமிழில் இல்லை; வேறு என்னதான் தமிழில் இருக்கிறது? தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தபோது,  தமிழக அரசுப் பணிமனைகளின் பெயர்கள் தமிழாக்கப் பெற்றுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலரும் பிறரும் தமிழில் ஒப்பமிட வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது.

தமிழ்மொழிக்கு ஏற்பட்டுள்ள மேற்கண்ட சீர்கேடுகளைப் போக்கித் தமிழைச் செம்மைப்படுத்த தமிழர் முன்வருவரா?

மொழி பற்றிச் சிந்திக்கத் தமிழர்க்கு நேரமேது? பதவி ஆசைதான் மேலோங்கி நிற்கிறது.

ஒரு சில தமிழ்ப்பற்றுள்ள தமிழ் அறிஞரேனும் மக்கள் பயன்படுத்தும் பிழையான சொற்பலுக்கல்களை அறிந்து அவற்றிற்குச் சரியான திருத்தமான சொற்பலுக்கல்களை வழக்கில் கொணர வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன், சில பிழையான பலுக்கல்களும், சரியான திருத்தங்களும் இவண் தரப்பட்டுள்ளன..

     அருகாமை               அருகில் (அ)அருகமை

     அருவருப்பு               அருவெறுப்பு

     எந்தன்                  என்றன்

     ஏழ்மை                  ஏழைமை

    ஏற்கனவே                   ஏற்கெனவே

    ஒருமனதாக                  ஒருமனமாக

    கண்ட்ராவி                   கண்ணராவி

    காக்கை பிடித்தல்               கால் கை பிடித்தல்

    காலா காலம்                 கால காலம்

    சாக்கடை                    சாய்க்கடை

    மென்மேலும்                  மேன்மேலும்

    குடுத்தான்                    கொடுத்தான்

    கொலை (கொத்து)              குலை

    சிலவு                       செலவு

    சுவற்றில்                     சுவரில்

    புண்ணாக்கு                   பிண்ணாக்கு

    முயற்சித்தான்                 முயன்றான்

    மனதில்                     மனத்தில்

    மானாவாரி                   வானவாரி

    மேதை                      மேதகை

    ரெண்டு                      இரண்டு

   ரொம்ப                       நிரம்ப   

   வாளாயிருந்தான்                வாளாவிருந்தான்

   வெட்டிவேர்                    வெறிவேர்

   வெவ்வேறு                    வேறுவேறு

   பாவக்காய்                    பாகற்காய்

   பொண்ணு                     பெண்

   புள்ளை                      பிள்ளை

   மொவன்                      மகன்

   தோப்பனார்                    தகப்பனார்

(தொடரும்)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்