Skip to main content

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82

 

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82



(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79-தொடர்ச்சி)

அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.

வக்கீல் : உமக்கு என்ன வேலை?

சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது.

வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா?

சாட்சி : ஆம். இருக்கிறது.

வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ?

சாட்சி : கட்டிடமாக.

விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு

சாட்சி : ஒரு இலட்ச உரூபாய் பெறும்.

வக்கீல் : ஊர்க்கடைசியில் கோவில் மதிற்சுவரை ஒட்டிப் போட்டிருக்கும் கூரைத் தாழ்வாரம் தானே உன் வீடு.

சாட்சி : ஆமாம்.

வக்கீல் : அதுவா ஒரு இலட்சம் பெறும்?

சாட்சி : கட்டாயம் பெறும். அதற்கு மேலும் பெறும். ஒருவர் 95 ஆயிரம்வரை கேட்டார்; மறுத்து விட்டேன். 99 ஆயிரத்திற்குக் கேட்டாலும் தரமாட்டேன்.

வழக்கறிஞர் அயர்ந்து போனார். நீதிபதி சிரித்து மகிழ்ந்தார். என்ன செய்வது? இப்படியும் சில சாட்சிகளை நீதிமன்றங்கள் சந்திக்கின்றன.
———-

50 ஆண்டுகட்கு முன்பு.

தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா.

த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.

முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாகச் சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. வரதநஞ்சைய பிள்ளையவர்கள் பேச வந்தார்கள்.

அவர் பேசத்தொடங்கும் பொழுதே ‘இந்த நாட்டாரும் நகரத்தாரும் பேசிய பிறகு. இந்தக் காட்டானை ஏன் ஐயா பேசவிட்டீர்கள், என்றார்.

கூட்டத்திலே சிரிப்பும் கைதட்டலும் அடங்கவே பல மணித்துளிகள் ஆயின.

குறிப்பு – சேலம் மாவட்டத்தில் சிற்றூரில் பிறந்தவர் அப்படி, அன்றி, உடையும் தோற்றமும் கூட அவர் கூற்றுக்குத் துணையாக இருந்தன.
————–

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்