சாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்
சாதிச் சதிக்குத் திதி!
இருக்கும்போது உன்னைத் தீண்டாதவனை
இறந்தபின்னை நீ ஏன் தீண்டுகிறாய்?
உயிர் இருக்கையில் உயர்ந்த சாதி
உயிர் பிரிந்ததும் அவனே
தாழ்ந்த சாதி
உயிர் இருக்கையிலேயே நம்மைப் பிணமாகப் பார்த்தவனை
அவன் உயிர் பிரிந்த பின்னும் நாம் பிணமாகப் பார்ப்பதில்லை
தோழனாக நினைக்கிறோம்
தோளிலே சுமக்கிறோம்
நன்றிகெட்ட சமுதாயம் ஒன்றிருக்க மறுக்குது
உயிரோடிருக்கையிலே ஊரை விட்டு ஒதுக்கியவர்கள்
உயிர் போன பின்னே நம்மோடு ஒதுங்குவார்கள்
உயிர் இருக்கும் வரை நீ உயர்சாதி என்றால்
எங்களுக்குள் இருக்கும் உயிர் என்ன மயிரா…..?
உயிர் தான் சாதி என்றால் அந்த மயிர் நமக்கெதற்கு?
பறையடித்துப் பறைசாற்றுகிறாய்
சாதி சாய்ந்தது என்று
பிணத்திற்கும் புரியவில்லை
இனத்திற்கும் தெரியவில்லை
மண் சட்டி உடைகிறது
மதச்சட்டியில் மனித இரத்தம்
எரியும் சிதையில் எழும் புகையில்
ஏது சாதி?
சடலம் சாம்பல் ஆனதால்
சவம் இந்து மதமா ?
குறுக்கெலும்புகள் எரியாமல் இருப்பதால்
சவம் கிருத்துவ மதமா
எரியும் சிதையைப் பிறை பார்த்துக்கொண்டிருப்பதால் சவம் முகமதியனா. ?
எங்கிருந்து வந்தது உங்கள்
சாதியும் மதமும்
அங்கிருந்தே ஆரம்பம் தீண்டாமையும் குழப்பமும்
தொழில் முறையில் தொடங்கிய சாதி
வழிமுறையாக வருகுது இங்கே
எரிப்பவன் இல்லை என்றால்
எந்தச் சாதிப் பிணமும் நாறிப்போகும்
நாவிதன் இல்லை என்றால்
நானும் காட்டு மிராண்டியே
அழகுபடுத்திப் பார்ப்பவனை
ஆராதிக்க வேண்டா
அவ மதிக்காதீர்கள்
ஊரடங்கில் உறங்கிக்கிடந்த தெய்வங்கள் எல்லாம்
அருச்சனை இல்லை என்று
அடக்கமானதோ
ஆலயங்கள் மூடியதால் ஆறறிவு மனிதன்
அழிந்தா போனான்
பம்பையும் உடுக்கையும் இல்லை என்று
பாமரன் பட்டினிதான் கிடந்தானா ?
தொழுகை இல்லை என்று கடவுள் தொலைந்துதான் போனானா?
தொன்றுதொட்ட சாதியினால்
தொலைந்து போகிறது மனித இனம்
உயிருக்கும் மதமில்லை
உணர்வுக்கும் மதமில்லை
அழிந்துபோகும் அவயத்திலும் தடயமில்லை
இவன் இன்ன மதம் என்று
ஏனோ மதம் பிடிக்கிறது
மனிதம் அங்கே மடிகிறது
ஏனோ சாதி பிடிக்கிறது
அங்கே சதி நடக்கிறது
சடங்குகள் இன்றிப் பிணம் புதையவில்லையா?
சடங்குகள் இன்றி மணம் புரியவில்லையா?
தோழர்களே தோள் கொடுங்கள்
சவத்தைச் சுமக்க அல்ல
சாபத்தை அழிக்க
சாதியை ஒழிக்க
சட்டங்களைத் திருத்துவோம்
இட ஒதுக்கீடு என்ற பெயரில் எங்களை
ஊருக்கு வெளியே ஒதுக்கியது போதும்
திறமை இல்லாதவர்கள் அல்ல நாங்கள்
எங்கள் திறமையால் தான் இதுவரை நீங்கள்
சாதிச் சாக்கடையின் கழிவுகளில்
கப்பல் விட்டு விளையாடும்
அரசியல்வாதிகளை வேரறுப்போம்
பிரித்து வைத்த நீங்களே
எங்களோடு சேர்ந்துகொள்ளும் நாள்வரும்
நீங்கள் சவமான பின்னே அல்ல நாம் சமமான பின்னே!
சாதி எனும் சதியை முறியடிப்போம்
மீதித் தலைமுறையாவது
மிளிரட்டும்
சாதியில்லா சமுதாயம் ஒளிரட்டும்
Comments
Post a Comment