Skip to main content

அருள் வேந்தரே! மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்! – அர.விவேகானந்தன்

அகரமுதல

திருவண்ணாமலை தமிழ்ச்சங்கத்தின் நிறுவனரும்திருவண்ணாமலை பைந்தமிழ்ச்சோலையின் நெறியாளருமான  அருள்வேந்தன் மறைவிற்கான இரங்கற்பா

மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்!

அருள்வேந்தன் பேர்கொண்டீர் அன்பைத் தந்தீர்

அருந்தமிழின் சீர்கண்டீர் அருமை கொண்டீர்

இருள்தன்னை எங்களுக்கு விட்டுச் சென்றீர்

இனியென்ன செய்வோமோ தமிழின் வாழ்வில்

பொருளீந்தே முத்தமிழைப் பொலியச் செய்தீர்

பொன்னடியை இனியென்று காண்போம் மண்ணில்

மருள்தன்னை விளக்குகின்ற மாலை யானீர்

மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்!

செந்தமிழை ஊருக்குள் ஏற்றி வைத்தீர்

சொல்லிசையும் தொல்லிசையும் மீட்டி வைத்தீர்

பந்தமென்றே பைந்தமிழைப் பற்றி நின்றீர்

பண்பான உறவுகளைப் பக்கம் கொண்டீர்

நொந்தபோது நொடிப்பொழுதில் நோதல் மாய்ப்பீர்

நொந்துமனம் வேகின்றோம் ஏது செய்வோம்

அந்தமிலா வாழ்வன்றோ உம்மின் வாழ்வும்

அடிமறந்து தவிக்கின்றோம் அன்பில் நாங்கள்!

அழைக்கும்போ தெல்லாமன் பைப்பொ ழிந்தீர்!

அண்ணாம லையாகக் கண்டோ மும்மை

கழைக்கூத்தின் நூல்போலும் ஆடு கின்றோம்

கண்ணொன்றை இழந்ததைப்போல் வாடு கின்றோம்

அழைத்தாலி னிவருவீரோ இல்லை இல்லை

அருந்தமிழி லாழ்வீரோ விதியின் தொல்லை

இழையோடும் தமிழோடு வாழ்ந்த வும்மை

எம்வாழ்வில் நிறைப்போம்போய் வாரீர் வேந்தே!

அர.விவேகானந்தன்

பைந்தமிழ்ச்சோலை, திருவண்ணாமலை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்