Skip to main content

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்


சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல்

(Quarantining in Sangam Period)

பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும்.
தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் கழல்களில் பூக்களும், சின்னங்களும், கொடிகளும் அழகிய வேலைப்பாடுகளாய்ச் செய்யப்பட்டிருக்கும். அப்படியான உயர்ந்த கழல்களை அணிந்திருக்கிறான் தலைவன்.
மண்ணைத் தீண்ட வந்த பகைவரை துரத்துகிற களமொன்றில், அரசனுக்கென்றே வந்த பெரும் வேல்களிலும் அம்புகளிலும் இருந்து தலைவன் அரசனைக் காப்பாற்றி விட்டான்.
உடல் முழுதும் வேற்புண்கள் என்றால் வேதனை எப்படி இருக்கும்? மாரில் உள்ள புண்ணுக்குள் இரண்டு கைகளையும் விட்டு உடலை பிளந்து மாளலாம் போல வீரர் எண்ணுதலுண்டு.
மாரில் பாய்ந்த வேலைப் பிடுங்கிப் பகைமேலேயே திருப்பி எறிவதற்கு, உடலிலும் மனத்திலும் திமிர் இருக்க வேண்டும். ஆயினும் போர் முடிந்த பின்னர் கொடுமையாகப் புண்பட்ட உடல் வாடி வருந்தத்தானே செய்யும்!
அரசனைக் காப்பாற்றிய தலைவன், வீட்டில், உடல் வருத்தம் போக்கும் மருத்துவத்தில் இருக்கிறான். அவனைக்காணப், பாடலை எழுதிய பெரும்புலவர் அரிசில் கிழார் வருகிறார். அரசன் பார்த்து வரச்சொன்னானோ தெரியவில்லை.
தலைவனின் மனைவி, தனது இல்லத்தின் இன்னொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்கிறது.
“ஆழமான புண்கள். மருந்து போட்டிருக்கிறேன். ஆறவேண்டும் என்றால் வெளியேயிருந்து தொற்று ஏதும் வந்துவிடக்கூடாது. நாமும் வெளியே போய்த் தொற்றிக் கொண்டு வரக்கூடாது.
வாசலின், இறவாணத்தில் வேப்ப இலைகளோடு, இரவந்தழைகளைச் செருகி வைக்கலாம். அவை வருவோருக்கு உள்ளே வரவேண்டா என்று செய்தியைச் சொல்லிவிடும். பேய் போன்ற வெருவிகள் (virus), பிறகிருமிகள் உள்ளே நுழையவும் விடா.
மையென அரைத்த சாந்தினை வீட்டின் உள்ளே சுற்றிப் பூசிவிடுவோம். எறும்பு போன்றன ஊர்ந்து வந்து தலைவனின் புண்ணைத் தீண்டா.
தலைவனின் படுக்கையைச்சுற்றி வெண்கடுகை (ஐயவி) தூவி வைப்போம். அதைத்தாண்டி எந்தக் கிருமியும், பூச்சியும் பேயெனப் போக முடியாது.
இந்தப் பெரிய வீடு முழுதும், வெருவி போன்ற தொற்றுகளைக் (Infections) கடிந்து விரட்டுகிற/கொல்கின்ற மூலிகைப்பண்டங்களை இட்டு நறுமணப்புகை வீசச்செய்வோம் (கடிநறை).
இவை அவனின் உடலைக் காக்கும். கூடவே, பிள்ளைகளை விட்டு ஆம்பல் குழல்களை ஊதச்செய்வோம்! (அல்லிமலர்த் தண்டு, குழல் போல இருக்கும். அதை ஊதினால் ஓசை வரும்) பிள்ளைகள் ஊதும்போது வீடும் கலகலப்பாக இருக்கும், தலைவனின் மனத்திற்கும் இதமாக இருக்கும்.
விரைவில் புண்கள் ஆறவேண்டும் என்றும், நோய்த்தொற்று புண்களைத் தீண்டிப் புரையோட விடக்கூடாது என்றும் வேண்டி, காஞ்சிப் பண் கூட்டிய பாடல்களைப் பாடுவோம்; ஒலிக்கும் மணியை அடிப்போம். பின்னர், ஆங்கு, கோட்டுயாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து இனிமையான இசையால் இல்லத்தை நிறைப்போம்.
தலைவனின் உடலில் உள்ள புண்களை மருந்தால் ஆற்றுவோம். மனத்திற்குப், பாடலும் இசையும் கலகலப்பும் மருந்தாகட்டும்.”
இவ்வாறு அனைத்து முறைகளையும், தன் இல்லப்பெண்டிர் ஒருத்தியிடம் தலைவி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட புலவரான அரிசில் கிழார், “தலைவனின் வீட்டுக்குள் செல்ல வேண்டா, சென்று மருத்துவத்திற்கு இடர் தரவேண்டா” என்று எண்ணி, திரும்பிப் போய்விட்டார்.
போனவர் தலைவி பேசிக்கொண்டிருந்ததைப் பாட்டாக எழுதி அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனாரோ என்னவோ! அரசக்குடி, அரசனின் உயிரைக் காத்த தலைவனைப் பற்றிய அந்தப்பாடலை வழிவழியாய்க் காப்பாற்றி, ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் நமக்கும் படிக்கத் தந்திருக்கிறது.
மகுடை(கொரொனா) வெருவியால் உலகமே தனிப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையிலும், வேம்பைச் செருகி, வேம்புமஞ்சள் நீரில் கழுவி, நாற்புலன்களை கட்டி, வீட்டையும் பொருள்களையும் தம்மையும் தூய்மையாக்கிக் கொண்டு தனித்திருக்கும் இதே காட்சியைச் சங்கக் காலத்திலும் காணமுடிகிறது.
தனிமைப்படுத்தல் என்பதற்கு நமது தொன்மையான வாழ்வியலிலேயே இலக்கணம் உண்டு. அதைத்தான் புறநானூற்றுப் பாடல்கள் 281உம், 296உம் சொல்கின்றன.
அதன் தொடர்ச்சியை அம்மை வார்த்த இல்லத்தில் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது தமிழ்க்குமுகம். வேம்பு, மஞ்சள், தூய்மை, கூழுணவு, மோர் போன்றவற்றோடு, மன வலுவிற்கு மாரியம்மன் தாலாட்டைப் பாடுவதுதான் தனிமைப்படுத்தப்பட்ட அம்மை மருத்துவம்.
வெண்கடுகை அகிலோடு கலந்து இல்லம் முழுதும் புகைக்க வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டிலேயே இன்றும் உண்டு.
காஞ்சித் திணையில், அரிசில் கிழாரின் 281ஆம் பாட்டு என்ன துறை தெரியுமா? தொடாக்காஞ்சி. தொடா என்றால் என்ன? பேய்/வெருவி ஒருத்தரை தொடாதிருக்க, தீண்டாதிருக்க, தனிமையில் இருக்க, (Quarantine-இல் இருக்க) ஒரு பாட்டுத்துறையே இருக்கிறதென்றால், தமிழ்க் குமுகத்தின் தொன்மத்தை அளக்க முடிந்தால் அளந்து கொள்ளுங்கள்!
புறநானூற்றுப்பாடல் 296ஐப் பற்றி விளக்கப்போவதில்லை. தொடர்பிருப்பதால், தொட்டுக்காட்டுகிறேன்.
வாகைத்திணையில் ஏறாண்முல்லைத்துறையில் பாடிய பாட்டில்,
“வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்று அவ்வே……”
“போரில் இருந்து திரும்பிய புண்பட்ட வீரர்களின் வீட்டிலெல்லாம் வேப்பந்தழையைப் பறிக்கவும், வெண்கடுகை இட்டுப் புகைக்கவும் (அகில்/சாம்பிரானி மாதிரி), காஞ்சிப்பண்னைப் பாடவுமாக இருக்கிறார்கள்; பேய்/நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க” என்பது அந்த மூன்று வரிகளின் பொருள்.
ஐயவி என்ற வெண்கடுகை, அகில் என்ற சாம்பிரானியுடன் (வேண்டுமானால் வேறு சில மூலிகைகளையும் சேர்த்து) வீட்டில் புகைப்பது கண்ணுக்குத் தெரியா வெருவிகள், கிருமிகள் போன்றவற்றிருந்து நமது உடலையும் மனத்தையும் பாதுகாக்கும் அருமருந்தென்று புறநானூறு சொல்லித்தருகிறது.
பாடல்: புறம்-281
பாடியவர்: அரிசில் கிழார் (காஞ்சித்திணை, தொடாக்காஞ்சித்துறை)
தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.
பொருள்:
தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ = இனிமையான கனிகளைத் தரும் இரவமரத்தின் இலைகளோடு, வேப்பந் தழைகளையும் சேர்த்து வாசலில் இறவாணத்தில் செருகி.
யாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க = ஆங்கு, கோட்டு யாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து.
ஐயவி = வெண்கடுகு
கைபய = மெதுவாக கையைப் பெயர்த்து
மையிழுது = மை போன்ற சாந்து
இசைமணி = பூசை செய்யும் போது அடிக்கின்ற மணி போன்றது
காஞ்சி பாடி = காஞ்சிப்பண் கூட்டிய பாட்டைப் பாடி
நெடுநகர் = பெரிய வீடு
கடிநறை = நோய்விரட்டும் நறுமண புகை தரும் பொருள்
காக்கம் வம்மோ = காப்பாற்றலாம் வாம்மா
வேந்து உறு விழுமம் தாங்கிய = அரசனுக்கு ஏற்பட்ட இன்னலைத் தாங்கிய
பூம்பொறிக்கழல் = உயர்ந்த பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட கழல்
நெடுந்தகை = உயர்ந்த வீரன்
– பொறி.நாக.இளங்கோவன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்