Skip to main content

அகநானூற்றில் ஊர்கள்: 4/7 – தி. இராதா

அகரமுதல


அகநானூற்றில்  ஊர்கள் -4/7

  ஊனூர்

ஊனூர், தழும்பன் என்ற குறுநில மன்னன் ஆண்ட ஊர் ஆகும். இவ்வூர் மருங்கூர் பட்டினத்திற்கு அருகில் உள்ளது. முழங்கும் கடல் அலைகள் காலைப்பொழுது கரைவந்து மோதும் நெல்வளம் மிக்க ஊர். காதல் பறவையான மகன்றில் பறவைகள் வாழுமிடமாக ஊனூர் திகழ்கின்றது என்பதனை,
பழம்பல் நெல்லின் ஊனூர் ஆங்கன்                     (அகநானூறு 220)
மன்னன் பெருங்கொடை வழங்கும் சிறப்பினை உடையவன் என்பதை,
“……..தழும்பன்
                 கடிமதில் வரைப்பின் ஊனூர் உம்பர்                     (அகநானூறு 227)
என்ற வரிகள் புலப்படு த்துகின்றன.

எருமையூர்
நார் அரி நறவின் எருமையூரன்”                                   (அகநானூறு 36)
என்ற வரி பன்னாடையால் அரிக்கப் பெற்ற கள்ளினையுடைய எருமையூர்க்குத் தலைவன் என்பதை உணர்த்துகிறது.

ஒடுங்காடுகுடநாடு
குட்டுவன் காத்து வரும் ஊர் ஒடுங்காடு. இதன் அருகிலுள்ள ஊர் குடநாடு என்பதாகும். ஒடுங்காட்டில் பெரிய பலா மரங்கள் நிறைந்திருக்கும். ஆசினி எனும் மரமும் அதிகமாகக் காணப்படும் இதனை,
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
                 …………………………………..
                 …………………………………
                 குடநாடு பெறினும் தவிரலர்”                                                                            (அகநானூறு 91)
என்று அகநானூறு குறிப்பிட்டுள்ளது.

கருவூர்
செல்வம் கொழிக்கும் சிறப்பினை உடைய சேர நாட்டிலுள்ள அகன்ற நகரமாகிய ஊர் கருவூர். இதனை,
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை                                          (அகநானூறு 93)
என்ற இவ்வடி விளக்குகின்றது.

கழாஅர்
கழாஅர், மத்தி என்பவனின் ஊர். மிகுந்த அழகினையும், பொலிவினையும், திரண்ட தோளினையும் ஆட்டனத்தியின் முழவொலி இடைவிடாது கேட்கும் ஆரவாரமும் மிகுந்த ஊர் கழாஅர்.
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
                ………………………………………
                ஆட்டன அத்தி நலன்நயந்து உரைஇ                       (அகநானூறு 222)
என்ற வரிகள் இதனை உணர்த்துகின்றன.
“…………….படப்பை
                ஒலிகதிர்க் கழனிகழாஅர் முன்துறை                 (அகநானூறு 376)
கதிர்கள் கொண்ட வயல்களையும் உடைய ஊர் கழாஅர் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றது.
பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை                        (அகநானூறு 226)
பல்வேல் மத்தி கழாஅர் அன்ன எம்”                        (அகநானூறு 6)
இவ்வடிகள் பல்வேற்படைகளையுடைய மத்தி என்பானது கழாஅர் என்பதை அறிய முடிகிறது.

கழுமலம்
சோழ நாட்டிலுள்ள ஊர். கொடுத்து மகிழும் வள்ளல் தன்மையை உடைய குட்டுவனது ஊர் கழுமலம்.
நல்தேர் குட்டுவன் கழுமலத்தி அன்ன”                       (அகநானூறு 270)
என்ற வரிமூலம் அறியலாகிறது.
                “கணையன் அகப்பட கழுமலம் தந்த                    (அகநானூறு 44)
பெரும்பூட் சென்னி என்பவன் வலிமைபொருந்திய தேரினையுடைய கணையன் மற்றும் கழுமலம் எனும் ஊரினையும் கைப்பற்றினான் என்பதை இவ்வரி விளக்குகிறது.

கள்ளின்
களிப்பு மிகுந்த கள்ளில் என்ற ஊர் நல்ல தேரினை உடைய அவியன் என்பவனின் ஊர். இதனை,
களிமலி கள்ளின் நல்தேர் அவியன்”                       (அகநானூறு 271)
என்ற அடி மூலம் அறியலாகிறது.
கள்ளூர்
அழகும், பழமைச்சிறப்பு, புகழும் பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும், நிலத்துக்கு அழகு தரும் கரும்புத்தோட்டத்தையும் உடையது. இதனை,
“…………. குழனி
                கரும்பு அமல் படப்பை பெரும்பெயர்க் கள்ளூர்(அகநானூறு 256)
என்ற அடிகள் மூலம் அறிய முடிகிறது.

கொல்லி மலை
சேரனின் கொல்லிமலை அழகுத் தோற்றமும், தெய்வம் விரும்பி வாழும் அகன்ற இடத்தினையும், அருவியின் ஒலியையும் உடையது.
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்
                ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்(அகநானூறு 303)
என்ற கொல்லி மலையின் சிறப்பு குறிப்பிட்டுள்ளது.

காமூர்
கழுவுள் என்ற குறுநில மன்னனின் ஊர் பதினான்கு வேளிர் ஒன்று சேர்ந்து தாக்கிய காமூர் என்பதை,
“ஈர்எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்”                                                            (அகநானூறு 135, 365)
என்ற வரிகள் மூலம் அறியலாகிறது.
    – திஇராதா,
முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி
(தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue