Skip to main content

மாற்றம் விரைவில் உண்டாகும் – மு. பொன்னவைக்கோ

மாற்றம் விரைவில் உண்டாகும்


தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு
உரைத்தான் தெய்வம் ஒன்றென்று
யாதும் ஊரே என்றுரைத்தான்
யாவரும் கேளிர் என்றழைத்தான்
அறமே வாழ்வின் நெறியென்றான்
அருளே பொருளின் முதலென்றான்
அன்பின் வழியது உலகென்றான்
ஆசைப் பெருகின் அழிவென்றான்
ஒழுக்க வாழ்வே உயர்வென்றான்
அழுக்கா றின்றி வாழென்றான்
ஒன்று பட்டால் வாழ்வென்றான்
ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான்
பணிதல் யார்க்கும் நன்றென்றான்
பகையே வாழ்வின் இருளென்றான்
சினமே உயிர்க்குப் பகையென்றான்
சீற்றம் தவிர்ப்பது சிறப்பென்றான்
இன்சொல் யார்க்கும் அணியென்றான்
இன்னா செய்தல் பழியென்றான்
வாய்மை வாழ்வின் நெறியென்றான்
தூய்மை வாழ்வின் விளக்கென்றான்
அமிழ்தின் இனிய பண்பெல்லாம்
அணியாய்க் கொண்ட தமிழன்தான்
தன்னை இழந்து வாழ்கின்றான்
தமிழை மறந்து அழிகின்றான்
ஆங்கில மொழியின் தாக்கத்தால்
ஆன்ற பெருமை இழக்கின்றான்
கற்றோர் கொண்ட கலக்கத்தால்
கல்விச் சிக்கல் எழுந்திங்கே
ஆங்கில வழியில் கற்றால்தான்
அறிவைப் பெறலாம் என்றவர்கள்
உலகைப் புரிந்து கொள்ளாமல்
உளறி வைத்தனர் மக்களிடம்
ஓங்கிய தமிழ்வழி இல்லாமல்
ஆங்கில மொழிவழிக் கல்வியினால்
ஈங்குநம் குழந்தைகள் இழந்தார்கள்
இயல்பாய் படைக்கும் ஆற்றலினை
கருத்தறி வில்லாக் கல்வியினால்
காரிருள் சூழ்ந்தது இம்மண்ணில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கத் தாலே இம்மண்ணில்
படிக்கா தவரும் ஆங்கிலத்தின்
பிடிக்குள் ளானார் படிப்படியாய்.
ஆங்கில மொழியின் அடிமைகளாய்
ஆயினர்  தமிழர்  அதனாலே
வழக்குச் சொற்கள் பலயிழந்தோம்
வாழ்வின் நெறிகளும் மறந்துவிட்டோம்
தமிங்கில மக்களாய் வாழ்கின்றோம்
தமிழ்வழி மாறிச் செல்கின்றோம்.
இந்நிலை தடுத்து நிறுத்தோமேல்
எந்நிலை யாகும் இந்நாடு
மண்ணின் மக்கள் தமிழர்களாய்
மாறுவ தெப்போ திந்நாட்டில்.
தமிழைத் தமிழாய்ப் பேசும்நிலை
தழைப்ப தெப்போ திந்நாட்டில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கம் மாறின் நிலைமாறும்
துறைகள் தோறும் தமிழாட்சி
தொடங்கின் நாட்டின் நிலைமாறும்
கல்வி மொழியும் தமிழாயின்
கடிதில் இம்மண் கதைமாறும்
கோயில் மொழியும் தமிழாயின்
குடிகள் மாறும் தமிழ்வழியில்
ஆயின் இவற்றைச் செய்வதற்கு
ஆரே யுள்ளார் இம்மண்ணில்
மக்கள் எழுச்சி பெறவேண்டும்
மண்ணில் மாற்றம் எழவேண்டும்
மக்கள் புரட்சி எழுமானால்
மாற்றம் விரைவில் உண்டாகும்

முனைவர்  பொறிஞர் மு. பொன்னவைக்கோ

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue