Skip to main content

மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை


மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்

முன்னுரை

பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அதன் பின்னர் ஏற்பட்ட அயலவர் படையெடுப்பாலும், ஆரியப்பண்பாட்டு மொழியான சமசுகிருதக் கலப்பாலும் தமிழின்நிலை தாழ்வுற்றது. மீண்டும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழை மீட்டுருவாக்கும் பணியினைப் புலிப்பாய்ச்சலோடு தொடங்கியவர்கள் தமிழறிஞர்களே ஆவர்.
பிரித்தானியர் ஆட்சியில் நான்கு தேசிய இனத்தவரின் நிலமாக சென்னை மாகாணம் இருந்தது. அதில் ஒன்றான தமிழ்த் தேசிய இனம் மட்டுந்தான் ஆரியப் பண்பாட்டு மொழியான சமசுகிருதத்தையும், இந்தியையும் எதிர்த்துப் போரிட்டது. இதை முன் நின்று தொடங்கி வைத்த பெருமை தமிழறிஞர்களையே சாரும்.
தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் தாயகம் ஆகிய மூன்றும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிக்கற்கள். தமிழ்மொழி மீட்புப் போராட்டத்தில் முன் நின்றவர்கள்தாம் தமிழினத்தை ‘திராவிடர்’ என்று திரித்துக் கூறியதையும் கடுமையாக எதிர்த்தனர். அத்தோடு நின்று விடாது மண்விடுதலைக் களத்திலும் தீரத்தோடு போரிட்டனர்.
தமிழகத்தில் முதல் இந்திய விடுதலைப் போரை முன்னெடுத்த தமிழர்கள் போராட்டத்தை இந்தியம் மூடி மறைக்கிறது. அதுபோல, தமிழர்கள் நடத்திய தாயக மீட்புப் போராட்டத்தைப் திராவிடம் மூடி மறைக்கிறது. மேலும், இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழர் சமத்துவத்துக்குப் போராடிய தொல்குடி தமிழர்களும் நினைவு கூரப்படுவதுமில்லை.
இந்நிலை களையப்பட்டு, தமிழர்களுக்கு வரலாற்றுணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். தமிழர்களின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள் நூற்றுக்கணக்கில் அடங்குவர். அவற்றில், முதன்மையாகப் பாடுபட்டவர்களைத் தெரிவு செய்து ‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்’ இதழில் ‘வரலாறு அறிவோம்’ என்று தலைப்பிட்டு எழுதி வந்தேன். தற்போது சில மாற்றங்களோடு நூல் வடிவில் வெளி வருவது குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழறிஞர்கள் வரலாற்றுத் தொடர் எழுதுவதற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தவரும், எனக்கு சரியான அரசியல் திசை காட்டிய  தமிழ்த்தேசிய ஆசான்களில் ஒருவருமான ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், நான் எழுதுவதற்கு  தமிழறிஞர்கள் வரலாற்றுக் குறிப்புகளை அவ்வவ்போது நேரில் வந்து கொடுத்து உதவிய பறம்பை குறிஞ்சிக் குமரன் அவர்களுக்கும்,   தட்டச்சு மற்றும் கணினியில் பக்க வடிவமைப்பு செய்து கொடுத்த தோழர் க.அருணபாரதி அவர்களுக்கும், மெய்ப்பு திருத்திக் கொடுத்து நூல் வெளிவர உதவிய தோழர் அ.ஆனந்தன் அவர்களுக்கும், இந்நூலைச் சிறப்பான முறையில் வெளியிட்டு உதவிய பன்மை வெளிப் பொறுப்பாளர் தோழர் வெற்றித்தமிழன்அவர்களுக்கும், அட்டைப்படம் வரைந்த ஓவியர் கவி பாசுகர் அவர்களுக்கும், நான் எழுதுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய துணைவியார் இரேவதி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கதிர் நிலவன்
மதுரை
2.1.2018

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்