செந்தமிழாற்றுப்படையில் தமிழின் சிறப்புகள்

சங்கப்பலகை செந்தமிழாற்றுப்படையில் தமிழின் சிறப்புகள்

First Published : 24 November 2013 02:26 AM IST
இன்றைய நாகரிக வளர்ச்சியில் மனிதனின் பண்பு, பழக்கவழக்கம் மனிதநேயம் மற்றும் மரபு சார்ந்த நிலைகள் போன்றவை மாறுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவன் பேசக்கூடிய மொழியும் சிதைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையை உணர்ந்து 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை உணராத சில தமிழ் மக்களுக்குத் தமிழின் சிறப்பு, இயல்பு, எதிர்காலத் தமிழக நிலை, தமிழை வளர்க்கும் முறை ஆகியவற்றைக் கூறி, தமிழனைத் தமிழ் படித்து தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி சுந்தர சண்முகனார் என்பவர் "செந்தமிழாற்றுப்படை' என்னும் நூலை 1951 ஆம் ஆண்டில் இயற்றியுள்ளார். 519 அடிகள் கொண்ட இந்நூலில் தமிழின் சிறப்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
"செந்தமிழாற்றுப்படை' என்பது தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனை, தமிழ் கற்றுத் தாய்நாட்டுக்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ்த்தாயிடம் ஆற்றுப்படுத்துவதாகும். அஃதாவது, எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தாயிடம் செல்லாக் குழந்தையைத் தூண்டித் தாயிடம் அனுப்பும் விந்தையாகும். இங்கே ஆற்றுப்படுத்துவது தமிழனை, ஆற்றுப்படுத்தும் இடம் தமிழ்த்தாய். எனவே, தமிழர் தமிழ்த்தாய் இரண்டிற்கும் பொதுவாகத் தமிழாற்றுப்படை என்னும் பெயர் அமைந்துள்ளது.
தமிழ் மகன் நிலை கூறி ஆற்றுப்படுத்துதல் (1-33)
தாயானவள் பிள்ளைக்கு உணவு தந்து பின் தன் பிள்ளையிடம் பதிலுதவி நாடுகிறாள். ஆனால் தமிழ்நாடோ மக்களுக்குப் பல்லாண்டு உறையுள், உணவு கொடுத்து பதிலுதவி எதிர்பார்ப்பதில்லை. ஆகையால் அது தாயினும் சிறந்தது செந்தமிழ் மகனே! மனிதப் பிறப்பில் உயர்வு தாழ்வுகள் இடையில் வருவனபோல், மனிதன் இடையில் எத்துணை மொழி கற்றாலும் அவன் இளமையிலும், இறக்கும்போதும் மனைவி மக்களிடத்தில் பேசும் வளமை வாய்ந்த மொழி தமிழ்மொழி மைந்தா!
அறுசுவை விருந்தில் அமுதைத் துறந்தேன், திருமணத்தில் தாலி மறந்தேன், உலகமானது தட்டை எனக் கூறினோர் போல தமிழ் கலை, தமிழிசை இல்லையென தமிழை உணராது தாழ்த்தும் தமிழா! நெய்யைப் பெற்ற பித்தளை அதன் சுவையை சுவைக்க முடியாதது போல தமிழைத் தாய் மொழியாகப் பேசப்பெற்றும், அதன் நூல் நயம் அறியாதவனே! பயன் தரும் பைந்தமிழ் மதுவை விரும்பினயாயின் நான் கூறுவதைக் கேட்பாயாக! என்று கூறி ஆற்றுப்படுத்துகிறார்.
தமிழன் ஒருவன் தான் மட்டும் தாய்மொழித் தமிழை உணர்ந்து நுட்பமாய் அறிந்து வளம் பெற்று அனுபவிக்காமல், எதிர்ப்பட்ட தமிழனிடத்தில் தமிழின் இயல்பினையும் சிறப்பினையும் கூறி ஆற்றுப்படுத்துவது அவனது சுயநலமில்லாத எண்ணத்தையும் தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றையும் எடுத்துக் காட்டுகிறது.
அடுத்து, 77 முதல் 186 அடிகளில், தமிழின் தொன்மை, சிறப்பு, வளர்ச்சி மற்றும் 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்கள் பற்றிய செய்திகள், தமிழ்ப் புலவர்கள் தமிழைப் பேணிக்காத்த முறைமை, தமிழனின் பெருமை, தமிழ் நிகழ்த்திய அற்புதங்கள் போன்றவற்றைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்.
221-353 அடிகளில் தமிழ்மொழியின் (இழி) நிலையைக் கூறி, தமிழை வளர்க்க ஆற்றும் கடமையைத் தமிழன்னை கூறல், தமிழைப் பிழையாக எழுதும் தமிழர்தம் பிழையை உணரச்செய்தல், நாட்டில் எல்லா நிகழ்ச்சிகளையும் தமிழில் இயற்ற வேண்டும் எனக் கூறுதல், தமிழின் நுட்பத்தை அறிந்துகொள்ளச் செய்தல் போன்ற பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.
445 முதல் 504 அடிகளில், "தமிழைக் கற்க இன்னின்ன கல்லூரியில் சென்று பயில்க' எனக் கூறுதல், தமிழ் மொழியை வளர்ப்பதற்கு படிக்கத் தகுந்த பல கல்லூரியின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கூறி அக்கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் படித்து தமிழைக் கற்று தமிழ்மொழியை வளர்த்திடுவீர்! என்றும் கூறி ஆற்றுப்படுத்துகிறார்.
இந்நூலின் மூலம் நம் தமிழ் மொழியின் இயல்பினையும் சிறப்பினையும் நன்கு அறிந்து, நுட்பமாய் உணர்ந்து தாய்மொழியாகிய நம் தமிழ்மொழியைப் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் முன்வர வேண்டும்; வேற்றுமொழியைப் பேசினாலும் நம் தாயாகிய தமிழ் நாட்டில் தமிழிலேயே பேசுதல் வேண்டும்; தமிழ் மொழிக்கு அனைத்துத் துறைகளிலும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்