அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவாக...
ஞாயிறு கொண்டாட்டம்
First Published : 13 May 2012 12:00:00 AM IST
திருவனந்தபுரத்தில்
1912 ஏப்ரல் 26-ல் பிறந்தவர் அவ்வை சண்முகம். தந்தையார் கண்ணுசாமிப்
பிள்ளை. தாயார் சீதையம்மாள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன்
முறை.சிறந்த குணச்சித்திர நடிகராக உலா வந்தவர் அவ்வை. அவர் நடித்த
கதாபாத்திரங்களில் மறக்கமுடியாதவை பிரகலாதந், ராசேந்திரன், மாமல்லன்,
மதுரகவி, சித்தர் சிவா, போக்கிரி ராஜா, முரட்டு முத்தையன்."நடிப்புத்
திறமையைப் பொறுத்தவரையில் அவ்வை நாடகத்தில் அவ்வைப் பாட்டியாக நடிக்கும்
டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சிபாரிசு
செய்கிறேன். வேஷம், பேச்சு, நடையுடை பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம்.
நடிப்போ அபாரம். அவ்வையாரின் முகத் தோற்றங்கள் நடிப்புக் கலையின் உன்னத
சிகரமாக விளங்கின..'' இப்படிப் பாராட்டியவர் எழுத்தாளர் கல்கி.நாடக
அரங்கம் தவிர, வெள்ளித் திரையிலும் முத்திரை பதித்தார் அவ்வை. 1935-ஆம்
ஆண்டு வெளிவந்த "மேனகா' முதல் சமூகத் திரைப்படம். அந்தப் படத்தில் இவரின்
நடிப்பு பாராட்டப் பட்டது. இதுதவிர, மனிதன், பில்ஹணன், ஓர் இரவு, பெண்
மனம், பாலாமணி, பூலோக ரம்பை, கப்பலோட்டிய தமிழன் போன்ற பல திரைப்படங்களில்
அவர் நடித்துள்ளார்.அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) நியமிக்கப்பட்டார் அவ்வை.நடிப்பு
மேதையான அவ்வை, சிறந்த பாடகர், நல்ல கவிஞர். அண்ணாவின் "ஓர் இரவு'
திரைப்படத்தில் ஜமீன்தாராக நடித்ததுடன், ஒரு பாடலையும் எழுதியுள்ளார்."எங்க நாடு - இது எங்க நாடுஎங்கும் புகழ் தங்கும் நாடு'- என்று தொடங்கும் அந்தப் பாடல்.ஒருசமயம்
கடற்கரையில் நடைபெற்ற கூட்டமொன்றில், திடீரென்று அவ்வையை மேடைக்கு
அழைத்து, "ஜெய பேரிகை கொட்டடா' என்ற பாரதியார் பாடலைப் பாடச் செய்து
மகிழ்ந்தார். அன்றைய முதலமைச்சர். அவர் காமராஜர்.தன் முதல்
மனைவி நோயுற்று திடீரென இறந்துபோக, அந்த உடலை வைப்பதற்குக் கூட இடம்
கிடைக்காமல் தவித்தார் சண்முகம். அப்போது காலியாக இருந்த தன் புதிய
வீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு பிரமுகர். அவர் தந்தை பெரியார்.தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார் அவ்வை.இயக்குநர்
ஸ்ரீதர் எழுதித் தந்த "ரத்த பாசம்' நாடக எழுத்துப் பிரதியை ஒரே மூச்சில்
படித்து முடித்து, அதை நாடகமாகத் தயாரித்தார் அவ்வை. அதுமட்டுமல்ல..
மேடையிலேயே ஸ்ரீதரை நிற்க வைத்து, "இந்த நாடகத்தின் எழுத்தாளர் இவர்தான்'
என்று அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் அவ்வை."சிவலீலா'
நாடகத்தில் பாண்டியனாக நடித்தார் அவ்வை. அப்போது தன் குழுவில் புதியதாக
இணைந்த நடிகர் ஒருவர் விரும்பிக் கேட்டதற்காக, தனது வேடத்தை அவருக்குக்
கொடுத்து வாழ்த்தினார். அந்தப் புதிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.பத்திரிகைத்
துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், நாடகத்தில் ஆர்வம் கொண்டார்.
அவரை "முள்ளில் ரோஜா' நாடகம் எழுதவைத்து, மக்களிடையே பிரபலமாக்கினார்
அவ்வை. நாடகம் எழுதியவர் பின்னாளில் பிரபல இயக்குநர் ஆனார். அவர்
ப.நீலகண்டன்.கதர், கைத்தறி தவிர வேறு எந்த வகை ஆடைகளையும் அவர் அணிந்ததில்லை. சிவப்புக் கறை போட்ட கதர் வேட்டிதான் அவர் எப்போதும் அணிந்தார்.நாடக
விழாக்களுக்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டால், அழைப்பிதழ் தமிழில் இருக்க
வேண்டும். ஆங்கிலத்தில் இருந்தால், கிழித்துவிட்டு "விழாவுக்கு வர இயலாது'
என்று விழா அமைப்பாளருக்குத் தகவல் தெரிவித்து விடுவார். அந்த அளவிற்கு
தமிழ்ப் பற்று அவ்வைக்கு.அவரது மணிவிழாவின் போது அன்பளிப்புத்
தொகையாகச் சுமார் ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகை மூலம் பம்மல்
சம்பந்த முதலியார் அறக்கட்டளையைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில்
உருவாக்கினார் டி.கே.எஸ்.அவ்வை சண்முகம் அவர்களுக்கு வாரிசுகளாக நான்கு புதல்வர்கள். ஒரு புதல்வி. இவர்களில் மூத்தவர் டி.கே.எஸ்.கலைவாணன். 1973, பிப்ரவரி 15}ம்
நாள் காலமானார் அவ்வை சண்முகம். சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவ்வை
சண்முகம் சாலை என்றே பெயர் சூட்டப்பெற்று, இன்றளவும் அது வழக்கத்தில்
உள்ளது.