யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – தொடர்ச்சி)
யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8
அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள்
அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி
அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம்
அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற
வெறியாலே உடன்பிறந்தார் உடல்பி ளந்து
வீதியெலாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம்
நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும்
நேர்த்திகடன் கோயில்முன் செய்கின் றோம்நாம் !
வானத்தை நாம்வில்லாக வளைக்க வேண்டா
வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும்
தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா
தேறுதலாய் நம்கரங்கள் கொடுத்தால் போதும்
தானத்தில் சிறந்ததெனும் நிதானத் தில்நாம்
தமரென்றே அனைவரையும் அணைத்தால் போதும்
மானுடந்தான் இங்குவாழும் சமத்து வத்தில்
மண்பதையே அமைதிவீசும் நேயத் தாலே !
(தொடரும்)
இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
இடம் – இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.
நாள் : வைகாசி 26, 2048 / 09 – 06 – 2017
கவியரங்கம்
தலைமை – கவியரசு ஆலந்தூர் மோகனரங்கம்
தலைப்பு – யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடுபவர் – பாவலர் கருமலைத்தமிழாழன்
Comments
Post a Comment