காயடித்துக் கரும்பேடி யாக்குங்கள் - தமிழமல்லன் கவிதை

காயடித்துக் கரும்பேடி யாக்குங்கள்!
முனைவர் க.தமிழமல்லன்
நள்ளிரவில் உடம்பெங்கும் நகையணிந்து நடந்துசெல்லும்,
நங்கையர்க்குத் தீங்கிழைக்கா நாடன்றோ நன்னாடு!
பள்ளிசெல்லும் நேரத்தில் பண்பான பெண்களைப்போய்ப்,
பால்வெறியால் கற்பழிக்கும் பாரதமா? அந்நாடு?
துள்ளிவரும் பருவத்தில் துளிரழகு மகள்வனப்பால்,
துணுக்குற்றுப் பெற்றோர்கள் தவிக்கின்றார். துடிதுடிக்கக்
கள்வெறியர் கற்பழித்து முடிக்கின்றார், கூட்டணியின்,
கருவிந்தைக் கருக்கிவிடும் தண்டனைதான் அச்சுறுத்தும்!
கல்விகற்க மனமகிழ்ந்து அனுப்பிவைப்பார் கடமையென்றே!
களிமயக்கால் அஞ்சாமல் காமத்தீ வெறிப்பயல்கள்,
நல்வீட்டு மலர்க்கொத்தை நாசஞ்செய் கின்றார்கள்!
நம்நாட்டில் அன்றாட நடப்பிதுவாய்ப் போனதடா!
புல்லைப்போல் மேய்கின்றார் புகழ்மிக்க பெண்குலத்தைப்
புலையர்செய் குற்றத்தைப் பொறுப்பின்றிப் பொறுத்ததனால்,
கொல்கின்றார், பிழைக்கின்றார் குறியாரைக் காயடித்துக்
கரும்பேடி யாக்குங்கள்! கழுவாய்தான் கிடைக்கட்டும்!
சட்டத்தின் நெருக்கடியால், சாலைகளில் நல்லொழுங்கைச்
சரியாகச் சிங்கப்பூர், சயாமல்
செய்கிறது!
கட்டுப்பா டில்லாத கள்வர்க்கும் கயவர்க்கும்,
கடுந்தண்டம் அரபுமண்ணில் கனவச்சம் கொடுத்தல்போல்,
வெட்டிவிடும் தண்டனையை விரலுக்கு விரலென்றும்
வெண்மையான பல்லுக்குப் பல்லென்றான் அமுரூபி!
கெட்டசெயல் விலங்கைப்போல் கீழ்மாந்தர் குற்றத்தைக்,
கெடுப்பதற்குக் தூக்கிடலே முடிவாகும் தூக்கிடுங்கள்!

Comments

  1. உண்மைதான்! இப்படிப்பட்ட கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்