செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி
செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக.. (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) 6.சீன ‘வளர்ச்சி’யின் உண்மை நிலை என்ன? சீனாவிற்குள் நுழைந்தவுடன் என்னிடம் எனது அலுவலகப் பணியாளர்கள் கடவுச்சீட்டைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளித்து, தற்காலிக குடியிருப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றார்கள். அதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தில், சீன மொழியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சீன மொழியிலேயே என்னிடம் கேட்டு விடை எழுதினர். தங்குமிடம், எவ்வளவு நாள் வரை தங்குவோம் முதலான தகவல்கள் அதில் கேட்கப்பட்டிருந்தன. சீன நகரங்களில் குடியிருப்பதற்கு, வெளி நாட்டவர் மட்டுமின்றி உள்நாட்டவர்கள் கூட, இவ்வாறான தற்காலிக இசைவுச் சீட்டு பெற வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டிலிருந்து இவ்விதி செயல்படுத்தப் படுகின்றது. 1970களின் பிற்பகுதியில் மாவோ காலவட்டம் முடியும்வரை, சீனாவில் வேளாண்மை...