திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௯. தமிழ்நாட்டில் வடமொழி .. .. பிறமொழி – தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தமிழ்நாடு
௯. தமிழ்நாட்டில் வடமொழி – தமிழ் அகரமுதலி,
ஆங்கிலம் – தமிழ் அகரமுதலி, பிறமொழி –
தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின?
தமிழ்நாட்டில் ஆரியர், ஆங்கிலேயர், பிறமொழிக்காரர் முறையே குடியேறியும், ஆட்சி புரிந்தும் வாழும்படி ஏமாளித்தமிழர்கள் விட்டுக் கொடுத்துவிட்டு வீண் காலம் போக்கியதே காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று அயர்ந்து இருந்துவிட்டனர் அற்றைத் தமிழர். இற்றைத் தமிழர் பெரும்பாலாரும் அவ்வாறுதான் இருக்கின்றனர்.
ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி தம்மொழி, தம் நாகரிகம், பண்பாடு முதலியவற்றைப் பண்டைய ஏமாளித்தமிழர் மீது ஏற்றி, தமது மொழி (சமற்கிரும்), தேவமொழி என்றும், தேவர் (கடவுளர்) தாம் அம்மொழியைப் பேசலாம் என்றும், நரகர் (மனிதர்) அதனைப் பேசக் கூடாதென்றும் கதை கட்டிவிட்டனர். எவர் சொன்னாலும் நம்பும் இயல்புடைய ஏமாளித்தமிழர், அந்த ஊமை மொழியைத் தேவமொழி என்றும், அதைப் பேசுபவரைத் தேவர் (பூசுரர்) என்றும் போற்றிப் புகழத் தொடங்கினர்.
அம்மொழி நூல்களை (கந்தபுராணம், இராமாயணம், பாரதம், கீதை, கருடபுராணம் முதலியவற்றை) விருப்புடன் படித்தும், படிக்கக் கேட்டும், சிலர் ஆரியமொழியைக் கற்று அம்மொழி நூல்களைத் தமிழில் பெயர்த்தும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர். இராமாயணம், பாரதம், திருவிளையாடல் புராணம், கருடபுராணம், கந்தபுராணம் முதலியன மொழிபெயர்ப்பு நூல்களே.
கடவுள் என்றால் அஞ்சிக் கயமை பல செய்யும் தமிழர், தமிழ், தமிழ்ப்பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைக் கைவிட்டு ஆரியர்வயமாயினர். சமற்கிருதமும், தமிழும் சிவனின் இருவிழிகள் என்றும், சமற்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றிற்றென்றும் தவறான கருத்துகளைத் தமிழ்மக்(கு)களிடையே பரப்பிவிட்டனர். மேலும், வடமொழிச் (சமற்கிருதம்) சொற்களையும், தமிழ்ச் சொற்களையும் சமஅளவில் கலந்து எழுதி, அதற்கு ‘மணிப்பவளநடை’ என்று பெயர் சூட்டினர். எனவே தமிழ் வடமொழிமயமாயிற்று.
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழர் சிலர்க்குத் தமிழுணர்வு அரும்பத் தொடங்கியது. அதற்கு மூலகாரணமாயிருந்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்ற ஆங்கிலேயரே. சூரிய நாராயண சாத்திரி அவர்கள் தமிழ்ப்பாடம் கற்பித்தஞான்று, “தமிழ் உயர்தனிச் செம்மொழி, தனித்தியங்கும் தன்மையுடையது” என்று கூறியதைக் கேட்ட அந்த ஆங்கிலேய மாணாக்கர் உங்கள் பெயர் ‘சூரிய நாராயண சாத்திரி’ என்றிருப்பதைத் தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றினால் என்ன? என்று சொல்ல அன்றுமுதல் சூரியநாராயணசாத்திரி பரிதிமாற்கலைஞரானார்.
அப்பொழுது அவ் ஆங்கில மாணாக்கருடன் பயின்ற சாமி வேதாசலம் அவர்கள் மனத்தில் அவர் சொல்லிய சொல் சுருக்கென்று தைத்தது. தனித்தமிழ்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். தூயதமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ஒருநாள் வேதாசலம் தன் மகள் நீலாம்பிகையுடன் பூங்காவில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போழ்து மகளார் ‘உங்கள் பெயர் தமிழா?’ என்று கேட்டார். ‘இல்லை’ என்றார். ‘தூய தமிழில் எப்படிச் சொல்வது?’ என்றார். ‘மறைமலையடிகள்’ என்று சொன்னார். அன்றுதொட்டு ‘சாமி வேதாசலம், மறைமலையடிகள்’ ஆனார்.
நீலாம்பிகை தமிழ்ப்புலவர் பயிற்சி பெற்றவர். தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களுக்குத் தமிழ் எழுதி தந்தையாரிடம் திருத்தம் பெற்று, “வடசொற் றமிழ் அகரவரிசை” என்னும் பெயரில் நூலாக்கினார். தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அதனை அச்சிட்டு வெளியிட்டது.
தமிழறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களும் மறைமலையடிகளார் வழிநின்று தூய தமிழ் பற்றி ஆய்வு செய்து வடமொழி தமிழ்அகரமுதலி எழுதினார். இன்று பிறரும் பிறமொழி தமிழ் அகரமுதலி வெளியிட்டுளர்.
ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள் அறிய பல அகரமுதலிகள் உள. சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் – தமிழ் அகரமுதலி வெளியிட்டுளது.
மேலும், பத்தாண்டிற்குள் இந்தி – தமிழ் அகரமுதலியும் வந்துவிடும். தமிழர்கள் தாய்மொழியுணர்வற்ற ஏமாளிகள் என்பதற்கு இவ் அகர முதலிகள் தக்க சான்றாகும். தமிழக அரசு பெயரளவில் இருமொழிக் கொள்கையுடையது,
செயலளவில் மும்மொழிக் கொள்கையையே கொண்டதெனலே சாலும்.
இன்று தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர் மதுரையில் மாநாடு கூட்டி, தெலுங்கை இரண்டாவது மொழியாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுளர். எதிர்காலத்தில் கன்னடரும், கேரளரும் தம்தம் மொழிகளையும் கட்டாயப் பாடமாக்கக் கோரலாம்.
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment