இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ? – பாவேந்தர் பாரதிதாசன்

thamizhukku_ariyanai_

என் தமிழா!

கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள்
சட்டமியற்றுவதில் சம்மதமோ என்தமிழா!
கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல்
இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா!
தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும்
பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா?
உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும்
பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா!
‘தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர்’ — இதை
நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா!
தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை
நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா!
உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர்
கடல்காட்டி வீழ்என்று கத்துகின்றார் என்தமிழா!
தென்றற் பொதியமலை செந்தமிழ்க்கு மீறியதாய்
நின்றஉயிர் இந்திவந்தால் நீங்கிவிடும் என்தமிழா!
மொகலாயர் வந்து முடிபூண்டும் தம்மொழிதான்
சகலர்க்கும் சட்டமென்று சாற்றவில்லை என்தமிழா!
தாய்மொழிக்கு நேரெதிர்ப்பாய்த் தம்மொழியை வற்புறுத்தும்
பேய்களைநாம் கண்டதில்லை பேருலகில் என்தமிழா!
அன்று தமிழ்நூல் அழித்தார்கள் ஆரியர்கள்
இன்றுதமிழ் வேரறுக்க எண்ணிவிட்டார் என்தமிழா!
காய்ச்சலுறு நாட்டில் கனித்தமிழே யல்லாது
மூச்சுறுத்தும் இந்திவந்து முட்டுவதா என்தமிழா!
தேளுக் கதிகாரம் சேர்ந்துவிட்டால் தன்கொடுக்கால்
வேளைக்கு வேளை விளையாடும் என்தமிழா!
இயற்கைத் தமிழ்மொழியை ஈடழிப் பதோஇந்திச்
செயற்கைமொழி உள்நாக்கைத் தீண்டுவதோ என்தமிழா!
உய்யும் தொழிற்கல்வி உள்ளதுவா இந்தியிலே
துய்ய கலைக்கதிலே தோதுமுண்டா என்தமிழா!
நாட்டுரிமை நாட்ட நடுமொழியாய் இந்திதனை
நாட்டிவிட்டால் அவ்வுரிமை நாடிடுமோ என்தமிழா!
பலபாசை இரசியர்களின் பச்சை விடுதலையை
உலகோர் வியப்ப துணராயோ என்தமிழா!
நிலவடையும் தண்தமிழை நீக்குவதோ? இந்திக்
கலவடையை மாட்டிக் கதறுவதோ என்தமிழா!
இந்தியிலே வீரம் இருக்குமெனும் ஈனர்களின்
புந்தியிலே பொய்யே புழுத்ததுவோ ? என்தமிழா!
இந்திக் கருத்துகள் இங்குண்டு செந்தமிழின்
கந்தமெலாம் இந்தியிலே காட்டச்சொல் என்தமிழா!
இந்தி தனைப்புகுத்தி ஏற்படுத்தும் நல்லுரிமை
பந்தியிலே வேறான பார்ப்பனர்க்காம் என்தமிழா!
நல்லுரிமை தேடும் நரிகள் முகமொன்றே
சொல்லும் அவர்எண்ணும் சூழ்ச்சிகளை என்தமிழா!
பார்ப்பனர்க்கே இந்திவரும் பச்சைத் தமிழரெலாம்
சீர்ப்படுதல் எவ்வாறு செப்பிடுவாய் என்தமிழா!
பள்ளியிலே தேர்ச்சிபெறும் பத்தில் ஒருதமிழன்
தெள்ளெனவே இந்திவரின் தேறான்காண் என்தமிழா!
சாதி யொழித்துச் சமயப்பித் தம்தொலைத்தால்
மீதி இருத்தல் விடுதலைதான் என்தமிழா!
பேதம் வளர்க்குமொரு பீடையினை இந்திஎன்றால்
ஏதும் தவறில்லை என்றறிவாய் என்தமிழா!
பொதுமொழிவேண் டாம்வோண்டாம் புன்மை மடமை எனும்
மதிப்பழக்கம் தீர்ந்தால் வரும்உரிமை என்தமிழா!
எல்லாரும் ஒப்புடையார் என்ற பெருநோக்கம்
எல்லார்க்கும் ஏற்பட்டால் இன்பமடா என்தமிழா!
– பாவேந்தர் பாரதிதாசன்
bharathidasan06


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்