எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்
- கரையிடை யிட்ட காட்டா றிரண்டு
எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின்
குலமுங் குடியும் கொடிய சாதியும்
உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும்
- எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே
இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர்
“மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில்
உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்”
- என்றறிந் திருவரும் எவருங்காணா
இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்
எவரும் கொண்டிட ஏது வின்றி
எழிலர சியுமே இவனைப் பலர்முன்
- உருத்தே யிகழ்வள் “ஒன்றுமறியான்
தேடுமின் திறனுடன் செய்வான்” என்பள்
தீங்கனி வாயால் செவியி லின்பம்
திளைக்குமாறு செப்புவள் வசையாய்
- புற்றராத் துணையை பொய்யாய்க் கடிப்பபோல்
“தங்காய் இவனே தத்துவ முணர்ந்தோன்
ஒருவழி நில்லா ஒருபெருஞ் செல்வம்”
நம்மிடம் நிலைபெற நாடுவோன் என்றும்
- பகைவரும் இவனின் பண்புடை மொழிகளால்
முயல்வ ரென்றற்பின் மொழியவும் வேண்டுமோ
இவனுடைத் திறலை; இவன் றுணை யின்றேல்
உலகிற் பெரும் பொருள் உற்றும் பயனிலை
- தங்காய் அவனை நலிவுறுத் தேலினி
நம்மைக்காக்க நாடி யுழைப் போன்”4
என்றலும் அவளும் இசையாதவள் போல்
தோற்றம் விளைத்து “சொல்லிய வுண்டேல்
- நன்றே யாகுக யானும் அவ்விதம்”
கரவிற் கூடிக் காதலிற் கட்டுண்
டின்பந்துய்த் தனள்; எவரு மறிந்திலர்
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
Comments
Post a Comment