இனிதே இலக்கியம் – 7 அன்பே கடவுள்! : இராமலிங்க அடிகள்
7
அன்பே கடவுள்!
அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே
அன்புரு வாம் தேவ தேவே!
“அன்பு என்னும் கைப்பிடிக்குள் அடங்கும்
பெருமலையே! பெருமனையில் தங்கியிருந்தாலும் அன்பெனும் சிறு குடிலுக்குள்
புகும் அரசே! அன்பாகிய வலைக்குள் அகப்படும் பெரும் பரம்பொருளே! அன்பெனும்
கைக்குள் அடங்கும் அமுதே! அன்பாகிய சிறு குடத்திற்குள் அடங்கும்
பெருங்கடலே! அன்பெனும் உயிரில் ஒளிரும் அறிவே! அன்பெனும் அணுவில் அமைந்த
பேரொளியே! அன்பின் உருவமாகத் திகழும் தேவர்க்குத் தேவனே! ”
என வள்ளலார் இராமலிங்க அடிகள் அன்பிற்கு
ஆட்படுபவன் இறைவன் என்கின்றார். அன்பே கடவுள் என வள்ளலார் வலியுறுத்துவது
எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் பொருந்துவதுதானே!
கைப்பிடி, குடில், வலை, கரம், கடம்,
உயிர், அணு, ஆகியனவாக அன்பு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மலை, அரசு,
பரம்பொருள், அமுது, கடல், அறிவு, ஒளி ஆகியனவாக இறைவன்
உருவகிக்கப்படுகிறான். அன்பு சிறிய உருவங்களாக உருவகிக்கப்பட்டு, இறைவன்
பேருருக்களாக உருவகிக்கப்பட்டுள்ளமையால் அன்பு சிறிய அளவாக இருந்தாலும்
வலிமை வாய்ந்தது என்பதை வள்ளலார் உணர்த்துகிறார்.
கை, வினைகள் ஆற்றுவதற்குரிய கருவியாகப் பயன்படுகிறது. இதனடிப்படையில் ‘கர்’ என்னும் மூலச் சொல் கொண்டு பிறந்த கரம் என்பது தமிழ்ச்சொல்லே! ஆரியச் சொல்லன்று!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Comments
Post a Comment