Skip to main content

இனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! : தாயுமானவர்

thalaippu_inidheilakkiyam02

6

விண்ணப்பத்தைக் கேட்பாயாக!

thaayumanavar01
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
     ஆரமிர்தே என்கண்ணே அரிய வான
பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்
     பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
     காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி
இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்
     விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே!
  பாரதிக்கு முன்னோடியாக எளிய நடையில் பாடல் எழுதிய தாயுமானவரின் இறைச்சுவை உணர்த்தும் பாடல் இது.
  தாயுமானவர் பாடல் தொகுப்பில் ஆகாரபுவனம் – சிதம்பர இரகசியம் என்னும் 14 ஆவது தலைப்பில் 7ஆவது பாடலாக உள்ளது.
  “உண்ண உண்ணத் தெவிட்டாத அருள்பழத்தின் இன்சுவையாய் விளங்குபவனே! கரும்பின் இனிய பிழிவே! தேனின் நற்சுவையே! கிடைத்தற்கரிய அமிழ்தே! என் இருகண்ணாய் விளங்குபவனே! அரும்பொருள் யாவற்றையும் தரும் அரிய பொருளாக விளங்குபவனே! எச்சூழலிலும் கருணை நீங்காமல் முழு அருள்வடிவாய் நிற்பவனே! தூய வாழ்வே! கருத்தினுள் கருத்தாய்ப் பரவி, காலமும் இடமும் வகுத்து, கருவி முதலிய உறுப்புகளின் நல்வினை, தீ வினைப் பயன்களைக் கூட்டி, உயிர்க்கூட்டங்களை அவ்வவ் வினைகளுக்கிணங்க ஆட்டுவிக்கும் சிறந்த பொருளே! நான் கூறப் போகும் விண்ணப்பத்தினைக் கேட்டு அருள்வாயாக!”
என இறைவனை வேண்டுகிறார் தாயுமானவர்.
  துன்பக் கசப்பு நிறைந்த உலகில்   கசப்பை நீக்ஙகும் நம்பிக்கை தரும் அருள்வடிவாய் உள்ளமையால் பல் சுவைகளாக இறைவன் அழைக்கப்படுகிறான்.
  பூரணம் என்பது முழுமையைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லே! 52 சுழிகளை உடைய மிகப்பெரிய எண் முழுமையாகக் கருதப்பட்டுப் பூரியம் எனப்பெற்றது. முழுமையாக உப்பும் உணவுப் பண்டம் பூரி எனப்பட்டது. முழுமையான நிலா பூரண நிலா என்றுஅழைக்கப்பெற்று பூரணி ஆகவும் பௌர்ணமி ஆகவும் மாறியது.
  இறை நம்பிக்கை உடைய யாவருக்கும் பொதுநிலையில் பொருந்தக்கூடிய பாடல்களில் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று.
– இலக்குவனார் திருவள்ளுவன்




Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்