Skip to main content

மெய் – முகிலை இராசபாண்டியன்


மெய் – முகிலை இராசபாண்டியன்

panipen
  வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் முத்தம்மா. நாலு வீட்டுக்குத் துணி துவைத்துப் பிழைக்கும் பிழைப்பும் போய் விடுமோ என்று அவளுக்குக் கவலையாக இருந்தது.
  பத்து மணிக்கு வழக்கறிஞர் வீட்டுக்குத் துணி துவைக்கப் போயிருந்தாள். அதன் பிறகு பயிற்றுநர் வீடு, வைப்பக அலுவலர் வீடு என்று பல வீடுகளுக்கும் துணி துவைத்துவிட்டு ஒரு மணிக்குத்தான் திரும்பினாள்.
  மற்றவர்கள் வீட்டுத் துணியைத் துவைத்தது எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. வழக்கறிஞர் வீட்டுத் துணியைத் துவைத்தது மட்டும்தான் நினைவு வந்தது.
  வழக்கறிஞர் ஐயாவின் மகள் மாலினி. ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். அவளுக்கு நேற்றுதான் பிறந்தநாள். பிறந்த நாள் கூட்டத்தில் முத்தம்மாவும் ஓரத்தில் நின்றாள். அவளுக்கும் இனிப்பு கிடைத்தது.
  வடை, இன்கூழ், சாப்பாடு என்று மீதி இருந்தது எல்லாமும் கிடைத்தன.
 மாலினிக்காக 2000 உருவாய்க்குப் புது உடை எடுத்திருந்தார்கள். அந்த உடையில் கழுத்தைச் சுற்றியும் சரிகையில் உரோசாப்பூ வைத்துத் தைக்கப்பட்டிருந்தது. இடுப்புக்குக் கீழே தையல் போட்ட இடங்களில் எல்லாம் வரிசையாக மஞ்சள் நிறத்தில் உரோசாப்பூ இருந்தது.
  இன்றைக்குக் காலையில் துணி துவைக்கும் போதே வழக்கறிஞர் வீட்டு அம்மா, “இந்தா பாரு முத்தம்மா… புது உடை, துவைக்கிற துணிகூடக் கிடக்கும்… பார்த்துப் பாதுகாப்பாக துவைக்கணும்… அழுத்தித் துவைக்காதே, சவக்கார(சோப்பு) நுரையில் லேசா அலசி எடுத்தா போதும்”னு சொல்லி யிருந்தாங்க.
முத்தம்மாவும் பார்த்துத்தான் துவைத்தாள். துவைத்து முடித்த துணிகளைத் தண்ணீர் வடிவதற்காகக் கம்பியில் போட்டாள்.
தண்ணீர் வடிந்த துணிகளை மொட்டை மாடியில் காயப் போடுவதற்காக அவள் எடுத்தாள். அப்போதுதான் அந்தப் புது உடை கிழிந்துவிட்டது. புதுத்துணி என்பதால் கம்பியின் ஓரத்தில் தனியாகத்தான் போட்டிருந்தாள்.
  துணியை எடுக்கும்போது அது கம்பியின் முனையில் சிக்கியிருந்திருக்கிறது. அதைக் கவனிக்காமல் முத்தம்மா இழுத்தபோது உடையின் கழுத்துப்பகுதி கிழிந்துவிட்டது.
  முத்தம்மாவின் உயிர் ஓட்டம் ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டது.
  விழிப்போடு பார்த்துத் துவைத்த துணி கிழிந்து விட்டது. இதை எப்படி வழக்கறிஞர் அம்மாவிடம் சொல்வது?|
  சொன்னால் உறுதியாய் வேலை போய்விடும். சொல்லா விட்டாலும் நாளைக்குள் தெரிந்து விடும்.
“வருவது வரட்டும்” என்று துணிகளை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் புறப்பட்டாள் முத்தம்மா.
அப்போது அங்கே வந்த வழக்கறிஞர்அம்மா, “இந்தா முத்தம்மா அந்தப் புது உடையை வெயிலில் போட்டுவிடாதே!நிழலில் காயப்போடு” என்று சொன்னாள்.
  அப்போதாவது துணி கிழிந்ததைச் சொல்லி யிருக்கலாம். அப்போதும் சொல்லவில்லை.
  அச்சம்… பாழாய்ப் போன அச்சம் வந்து தடுத்துவிட்டது. எப்படியும் தெரியத்தான் போகிறது. காலையிலேயே சொல்லியிருந்தால் இரண்டில் ஒன்று முடிவு தெரிந்திருக்கும். மனம் இப்படித் திக்… திக்… என்று அடித்துக் கொண்டிருக்காது.
  மிஞ்சிப் போயிருந்தால் வழக்கறிஞர் வீட்டு வேலையும் வேறு இரண்டு மூன்று வீட்டு வேலைகளும் போயிருக்கும். ஒரு திங்களுக்குத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டால் அடுத்த திங்களுக்குள் வேறு இரண்டு வீடுகளைப் பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த முத்தம்மாவுக்கு இன்னொரு செய்தி தொண்டையை வந்து கப்பென்று அடைத்தது.
“கிழிந்த துணிக்குக் காசு கேட்டால்… 2000 உருவாய்க்கு எங்கே போவது?” என்ற கவலையும் சேர்ந்து கொண்டு முத்தம்மாவை அரித்து எடுத்தது.
  மணி நான்கு இருக்கும். வெளியே வந்தாள் முத்தம்மா.
குடிசைக்கு வெளியே ஈரமாக இருந்தது. மழை பெய்தது கூடத் தெரியாமல் உள்ளே இருந்திருக்கிறாள்.
  பயிற்றுநர் வீடு, வைப்பக அலுவலர் வீடு, மருத்துவர் வீடு என்று எல்லா வீடுகளுக்கும் போய், காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்தாள். சாரலாகப் பெய்த மழையில் துணி அவ்வளவாக நனையவில்லை.
  கடைசியாகத்தான் வழக்கறிஞர் வீட்டுக்குப் போனாள். தயங்கித் தயங்கிப் பின்கட்டு வழியாக முத்தம்மா நுழைந்தாள்.
“இயல்பாகவே வழக்கறிஞர் வீட்டு அம்மா சினக்காரி; புது உடை கிழிந்தது தெரிந்தால் உண்டு இல்லை என்று பண்ணி விடுவாள். கிழிந்தது தெரியாமல் அப்படியே மடித்து வைத்துவிட வேண்டியதுதான்” என்று நினைத்துக் கொண்டாள்.
  ஆனால் நிலைமை தலைக்கு மேல் போய்விட்டது. மழை பெய்ததால் மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த துணிகளை வழக்கறிஞர்அம்மாவே எடுத்துவிட்டாள்.
  முத்தம்மாவின் தலையைப் பார்த்ததுதான் உடனே வழக்கறிஞர் வீட்டு அம்மா விரைவாக வந்தாள். அந்தப் புது உடை முத்தம்மாவின் மேல் வந்து விழுந்தது.
“என்ன பண்ணியிருக்கிற முத்தம்மா… புது உடை… 2000 உருவாய்… உருவாய்… உருவாய் கெடக்கட்டும் உருவா… பிறந்த நாளுக்கு எடுத்ததைக் கிழிச்சிட்டியே… நாயே! உன் கை என்ன இரும்பிலயா செஞ்சு வச்சிருக்கு… அந்த உடையைக் கிழிச்சதுபோல உன்னையும் கிழிக்கிறேன் பாரு..” என்று பெருஞ்சினத்துடன் கத்தினாள் வழக்கறிஞர் அம்மா!
  முத்தம்மாவுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை வியர்த்தது. “இன்றோடு தொலைந்தோம். இந்தப் பணப்பேய் அடிச்சுப் போட்டிடும்” என்று கலங்கினாள்.
அப்போது வாசலில்…
  தானி வந்து நின்றது. மாலினி பள்ளிக்கூடப் பையுடன் உள்ளே நுழைந்தாள்.
  சினத்துடன் முத்தம்மாவின் அருகில் போனாள் வழக்கறிஞர்அம்மா. மழையில் நனைந்த ஆட்டுக்குட்டியைப் போல் நடுங்கிக் கொண்டிருந்தாள் முத்தம்மா.
  கீழே கிடந்த உடையை எடுத்த வழக்கறிஞர் அம்மா, “பாரு… நல்லா பாரு… இப்ப நிறைவா… இதோட ஏன் விட்டுட்டே… தும்பு தும்பா கிழிச்சிருக்க வேண்டியதுதானே…” என்று கிழிந்த உடையைக் காட்டிய அவள் முத்தம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்தாள்.
  மாலினிக்கு நடந்தது என்ன என்பது புரிந்தது. முத்தம்மா நின்ற நிலையைப் பார்த்ததும் அவளுக்குக் கழிவிரக்கமாக இருந்தது.
  ஒரு துணி கிழிந்ததற்காக முத்தம்மாவை அடிக்கப் போகும் அம்மாவின் மேல் அவளுக்குச் சினம்தான் வந்தது.
  அடுத்த நொடி…
“அம்மா…!” என்று கத்தியபடி ஓடி வந்து தடுத்தாள் மாலினி. அந்த உடையை முத்தம்மா கிழிக்கலைம்மா… நேற்று மாலை விளையாடிக் கிட்டிருக்கிறப்ப கிழிஞ்சிடுச்சும்மா… உங்கள்கிட்ட சொன்னா நீங்கள் அடிப்பீர்கள் என்றுதான் நான் சொல்லலைம்மா” என்ற மாலினி அழாத குறைபோல் சொன்னாள்.
  முத்தம்மாவுக்கு அப்போதுதான் போன உயிர் திரும்பியதுபோல் இருந்தது. மாலினியைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.
மாலினி சொன்னது பொய்தான் என்றாலும் முத்தம்மாவுக்கு மனஅமைதியைத் தந்தது.
(கதைஞர் தொடர்பு எண்: 9444365642)
mukilai-rasapandiyan
– முகிலை இராசபாண்டியன்
Pughazhselvi Outside Attai1

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்