Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடுக்கண் அழியாமை

     27 September 2015      No Comment

attai_kuralarusolurai

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை

துன்புறினும், மனம்கலங்காது, வென்று
நின்று, இன்புற்று வாழும்திறன்.

  1. இடுக்கண் வரும்கால், நகுக; அதனை,
      அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல்.

      எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து
        சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி.

  1. வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார்,
      உள்ளத்தின் உள்ளக், கெடும்.
     வெள்ளம் போன்ற பெரும்துயரும்,
        சிந்தனை உறுதியால் சிதையும்.

  1. இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு)
      இடும்பை, படாஅ தவர்.

 துன்பத்தைக் கண்டு துன்பப்படாதார்,
       துன்பத்தைத் துன்பப் படுத்துவார்.

  1. மடுத்தவாய் எல்லாம், பக(டு)அன்னான் உற்ற
     இடுக்கண், இடர்ப்பா(டு) உடைத்து.

கலங்காது, இழுக்கும் காளையைப்
போன்றாரால், துன்பமும், துன்பப்படும்.

  1. அடுக்கி வரினும், அழி(வு)இலான் உற்ற
      இடுக்கண், இடுக்கண் படும்.
      அடுக்கியே வரினும், கலங்கானது
        கடும்துன்பமும், துன்புற்றுக் கெடும்.       .

  1. “அற்றேம்”என்(று), அல்லல் படுபவோ?” பெற்றேம்”என்(று),
      ஓம்புதல் தேற்றா தவர்

 பெற்ற பொழுது, காப்பாற்றாதார்,
       இழந்த பொழுது, துன்புறலாமோ?
.
  1. “இலக்கம் உடம்(பு),இடும்பைக்(கு)” என்று, கலக்கத்தைக்,
      கைஆ(று)ஆக் கொள்ளா(து)ஆம், மேல்.

      “இவ்உடம்பே, துன்பத்தின் இலக்கு”எனக்
         கலக்கத்தைக் கொள்ளாமையே மேல்.

  1. இன்பம் விழையான், “இடும்பை இயல்(பு)’’என்பான்,
      துன்பம் உறுதல் இலன்.

      இன்பத்தை விரும்பாதான், “துன்பம்
        இயல்புதான்” என்பான், துன்பப்படான்..

  1. இன்பத்துள் இன்பம், விழையாதான், துன்பத்துள்
     துன்பம் உறுதல், இலன்.

 இன்பத்தில் இன்பத்தை விரும்பாதான்,
        துன்பத்தில் துன்பத்தை அடையான்.

  1. “இன்னாமை இன்பம்” எனக்கொள்ளின், ஆகும்,தன்
      ஒன்னார் விழையும் சிறப்பு.

 “துன்பமும், இன்பம்”எனும் நினைப்பு
          பகைவரும் விரும்பும் சிறப்பு.
பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்