அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்
(எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
அ. தமிழும் – தமிழரும்
தமிழ்நாட்டில் இன்று ஆரியர், ஆந்திரர், கன்னடர், துளுவர், கேரளர், துருக்கியர், ஆங்கிலோ-இந்தியர் முதலிய பலர் வாழ்கின்றனர். ஆயினும், பல்லாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருவதனால் இவர்கள் தம் தாய்மொழி “தமிழ்” என்றே மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போதும், படிக்கவும், வேலைக்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் போதும் பதிவு செய்கின்றனர். அவர்கள் இல்லங்களில் ஒருவர்க்கொருவர் உரையாடும் போதும், உறவினர்களுடன் பேசும்போதும், அவரவர் உண்மையான தாய்மொழிகளாகிய சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம், உருது, ஆங்கிலம் முதலிய மொழிகளைத்தாம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வளர்க்கப் பாடுபடுவதும், அவற்றையே. உண்மையான தமிழர் மிகமிகக் குறைவே. அவர்களிலும் பேராயம், பொதுவுடைமை முதலிய தேசமளாவிய கட்சிகளைச் சார்ந்தவர்களுக்குத் தாய்மொழிப்பற்று அறவே கிடையாது. எனவே, உண்மையான தமிழ்ப்பற்றும், தமிழறிவும் உள்ள தமிழர் மிக மிகக் குறைவே.
முற்கூறிய ஆரியர் முதலான பிற மொழியாளர் பிழைப்புக்காகத் தமிழ் படித்துத் தமிழ்ப் புலவர்களாகவும், தமிழ்ப் பேராசிரியர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்கள் அருகியே காணப்படும். ஏனெனில், பல மொழிச் சொற்களையும் கலந்தே பேசுவர்; எழுதுவர். தமிழ் வளர்ச்சி பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. தமிழ்ப்பற்றும், தூய தமிழறிவும் இலர். அன்றியும், தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் பாடுபடுகிறோம் என்கிற தமிழக அரசியல் கட்சியினரும், சீர்திருத்தக்காரர் என்கிற தி.க.வினரும், தன்மான இயக்கத்தைச் சார்ந்தவரும் பிறமொழி கலந்தே பேசுவர்; எழுதுவர்.
‘தமிழ் வளர வேண்டும்; தமிழர் வாழ வேண்டும்’ என்று மேடைகளில் பேசுவார்களே அன்றித், தமிழில் (பிறமொழிச் சொற்கள் கலவாமல்) பேசத் தெரியாது; எழுதவும் தெரியாது. எங்கே தமிழ் வளரும்? பார்ப்பனர் (ஆரியர்) பாடுபடுவது வடமொழியை (சமற்கிருதம்) வளர்க்கவேயன்றி, தமிழை வளர்க்கவன்று. ஏனையோர் எந்த மொழி பற்றியும் கவலாது, எல்லா மொழியும் கலந்து பேசி தமிழைக் கொச்சையாக்குகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள ஆங்கில இதழ்களும், தமிழ் ஏடுகளும் தமிழுக்கு ஆக்கம் தரும் வகையில் எழுதுவதில்லை. தமிழில் வெளியிடப்படும் நாளிதழ், கிழமையிதழ், மாத இதழ்களும் கொச்சைத் தமிழிலேயே எழுதுகின்றன.
எல்லா ஏடுகளும், தமிழில் பிறமொழி கலந்தால்தான் தமிழ் வளரும் என்கின்றன. சமற்கிருதத்திலிருந்துதான் தமிழ் பிறந்தது; அதனால்தான் தமிழ் வளர்ச்சியடைந்து வருகிறது; எவ்வளவுக்கு எவ்வளவு பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் கலக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் வளர்ச்சி அடையும் என்றும், அவ் ஏடுகள் அலறுகின்றன. அவை சார்ந்தவரும் அறிவுரை கூறுகின்றனர். தமிழின் இயல்பறியாத இவ் ஏடுகளையும், இவர்களையும் என்னென்பது? ஒரு வேளை அறிந்தும் அழிப்புப்பணி செய்கின்றனவா? என்பதை உங்கள் ஆய்வுக்கே விடுகிறேன்.
இந்த ஏடுகளும் அவை சார்ந்த மக்களும், “இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்ற தி.மு.க., அ.தி.மு.க.,வினரும், மொழிப்பற்று இல்லாதவர்கள்; பேச்சில்தான் மறவர்; செயலில் குறவர். பிறரைத் தமிழ் படியுங்கள், தமிழ்மூலம் படியுங்கள் என்கின்றனர். தமிழ்மூலம் பிற பாடங்கள் படிக்கிறவர்களுக்கு ஊக்கத் தொகையும் தமிழக அரசு அளிக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை, ஆங்கிலப் பள்ளிகளில்தான் சேர்த்துப் படிக்கச் செய்கின்றனர். இந்தி மொழியும் படிக்கச் செய்கின்றனர். என்னே! இவர்கள் தாய்மொழிப்பற்று. பிறர்க்குத்தான் சட்டம், தமக்கில்லை என்கின்றார்கள் போலும்!” என்று அந்த ஏடுகள் குற்றம் சாற்றுகின்றன.
“அமைச்சர்கள், தமிழார்வலர்;கள் அவ்வாறு செய்கிறார்களே? நம்மை ஏமாற்றவோ இங்ஙனம் செய்கிறார்கள்? மக்களே! இவர்களை நம்பாதீர்கள்; நம்பினால் பின்னர் துன்பப்படப் போகிறவர் நீங்கள்தாம்; அவர்களல்லர்” என அறிக்கை விடுகின்றனர். இவர்கள் யார்? என்பதை உண்மைத்தமிழர் உணர்தல் வேண்டும். நாள்தோறும் தமிழ்க்கொலை புரியும் ஏடுகளும், மக்களுமே இவ்வாறு கூறுபவர் என அறிவீராக. தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் பிடிப்பு உடையது. அதைக் கெடுக்கவே அனைவரும் சூழ்ச்சி செய்கின்றனர்.
சமற்கிருத மொழியைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக வைக்க வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்துகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகர் திரு. சாந்தப்பா என்பவர் “சமற்கிருதம் செத்த மொழியன்று, உயிர்ப்பு மொழியே. அதில் பல அறிவியல், கலை, இலக்கிய, இலக்கண, வரலாற்று நூல்கள் உள. யாவரும் அவற்றைப் படித்தல் வேண்டும். அதற்குச் சமற்கிருத அறிவு இன்றியமையாதது”, என்று கழறியுள்ளார். இவரைப் போன்று பல தமிழர் பேசிப் பிழைக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இவர்கள் வையாபுரியார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றோரின் பிறங்கடையினராகத்தான் இருப்பர்.
தமிழ்நாட்டில் உள்ளவர் எத்தனை மொழி பயின்றாலும், நமக்குக் கவலையில்லை. ஆனால், தமிழுக்குக் கேடு விளைத்தல் கூடாதென்பதே எமது வேணவா.
தமிழர் என்கிற போர்வையில் இருந்து கொண்டு தமிழ்மொழிக்குக் கேடு சூழ்கின்ற வன்னெஞ்சரை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தகையோரை இனங்கண்டு கொண்டு ஒதுக்கி விடவேண்டும். அவர்தம் பேச்சையும், எழுத்தையும் நம்பி ஏமாறக் கூடாதென்று, உண்மையான தமிழர்களை வேண்டுகிறோம்.
சமற்கிருதத்தால் தமிழ் வளர்ந்தது என்பாரும், வளரும் என்பாரும் தமிழ்ப்பகைவர்களே. மக்களைத் திசை திருப்பவே,
‘தமிழ்ப்பற்றாளர் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் அமைச்சர்களும், பிறரும் தம் மக்களை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துளர். அவர்களுக்கு இந்தியும் கற்பிக்கின்றனர்’ என்று கழறுகின்றனர்.
அமைச்சர் வீட்டுப் பிள்ளைகளும், பிற தமிழார்வலர் வீட்டுப் பிள்ளைகளும் ஆங்கிலம் படித்தாலென்ன? இந்தி படித்தாலென்ன? தமிழுக்கு, உங்களைப் போல் கேடு செய்கின்றார்களா? தமிழக அரசுப் பணிகளில் இந்தி படித்தவர்களுக்குத்தாம் முதலிடம் என்று சட்டமியற்றி விட்டனரா? தமிழ் படித்தவர்களுக்கு வேலையில்லை என்கின்றார்களா? அறிவைப் பெருக்கிக் கொள்ள எத்தனை மொழி படிக்கவியலுமோ? அத்தனை மொழி படிக்க அனைவர்க்கும் உரிமையுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டுமென்பது அறிவுடைமையாகாது.
தமிழக அரசுப் பணிகட்குத் தமிழ் மட்டில் போதும். அயலார் தொடர்புக்கு ஆங்கிலம் சாலும். இந்தி தேவையே இல்லை. இந்தி படித்தால் வடநாட்டில் வேலை பெறலாமென்பவர் அசாமைப் பாருங்கள். அந்தந்த மாநிலத்தார்;க்குத்தாம் அந்தந்த மாநிலத்தில் அரசுப் பணிகள் என்னும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏனெனில், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. நடுவணரசு அலுவலகங்களில் இந்தி படித்தால் வேலை கிடைக்குமென்று ஆசை காட்டி இந்தி படிக்குமாறு தமிழர்களைத் தூண்டுகின்றனர். ஆனால், உண்மை நிலை என்ன? இந்தி படித்தவனை பீகார், ஒரிசா தவிர்த்த பிற மாநிலத்தில் நடுவணரசு அமர்த்தி விட்டால் இந்தியால் பயனிலையே? பின்னர் அந்த மாநில மொழியையும் படிக்க வேண்டி வருமல்லவா?
தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசு அலுவலகங்களில் பணிபுரிய இந்தி தேவையில்லை. ஆனால், நடுவணரசு இந்தி படித்தவர்க்கு முன்னுரிமை அளிக்கிறது. தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறவர்க்கு இந்தியால் என்ன பயன்? தமிழறிவு தான் தேவை. தமிழ் தெரியாத பலர் தமிழ்நாட்டில் பணிபுரிவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இந்திய அரசு இந்தி மொழியைத் தமிழ்நாட்டில் புகுத்த இந்தச் சூழ்ச்சியைக் கையாள்கிறது. இதை உணர்ந்தோ, உணராமலோ பலரும் இந்தி படிக்குமாறு மக்களை வற்புறுத்துகின்றனர். இவர் தமிழ்ப் பகைவரே.
தமிழ்நாடு முழுவதும் இந்தியைப் பரப்ப நடுவணரசு கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது. பல இந்தி பரப்பு மன்றங்கள், தமிழ்நாட்டில் உள. இந்தியை இலவயமாகக் கற்றுக் கொடுக்கின்றனர். இந்திப் புத்தகங்களும், எல்லார்க்கும் இலவயமாகக் கொடுக்கின்றனர். தமிழர் ஏமாளிகள் என்பதை நடுவணரசினர் நன்குணர்ந்துளர். இலவயமென்றால் எதையும் தமிழர் ஏற்பர் என்பது அவர்கள் கருத்து. அது உண்மையாகவும் இருக்கலாம். அன்றியும், தமிழ்நாட்டில் தமிழ் முதல்மொழி; ஆட்சிமொழி; தமிழர் பேசுவதும் தமிழ்தான். ஆனால், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழில் பிற பாடங்களைக் கற்பித்தால் புரியவில்லையாம். அதனால், தமிழ்வழி கற்பிக்கும் பாடப்பகுதி வகுப்புகளில் மாணவர் யாரும் சேர முன்வரவில்லையாம். ஆங்கிலவழிப் பாடம் படிக்கவே அனைவரும் விரும்புகின்றனர் எனவும், அதன்பொருட்டு மாணவர் கிளர்ச்சி செய்கின்றனர் எனவும் அறிந்து நனியும் வேதனைப்படுகிறோம். இது தமிழ்நாடுதானா? இங்கு வாழ்பவரெல்லாம் தமிழர்தாமா? என்று ஐயமுண்டாகிறது.
எல்லாக் கல்வி நிலையங்களிலும், எல்லாப் பாடங்களும் தமிழ் மூலம்தான் கற்பிக்கப்படும் என்று அரசு ஆணையிட்டால் அப்பொழுது என்ன செய்வரோ?
தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைவரும் தமிழில் புலமை பெறல்வேண்டும் என்னும் சட்டமியற்றல் இன்றியமையாததாகும். தமிழ்நாட்டில் இந்திப் பயிற்று நிலையங்கள் ஏற்படுத்தும் நடுவணரசு, வடநாட்டில் தமிழ்ப்பயிற்றுப் பள்ளிகள் நிறுவப் பொருளுதவி செய்யுமா? என அறிய விரும்புகிறோம். தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா வழியைப் பற்றி ஆட்சிபுரிகின்றவர் இருக்கும் வரைதான் இருமொழிக் கொள்கை செயல்படும். தமிழ் வளம்பெறும் வாய்ப்பும் உண்டு.
பிற கட்சிகள் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பேற்றால், மும்மொழிக் கொள்கை முன்வரும், தமிழ் தாழ்வுறும். ஏனெனில், பேராயக் கட்சியினர் (Congress Party) ஆண்டபோது, இந்தி கட்டாயமாக்கப்பட்டது. சென்னை மாநிலத்தைத் தமிழ்நாடு என்று பெயரிடவும் மறுத்;தது. பேரறிஞர் அண்ணாத்துரையார் ஆட்சிக்காலத்தில் அன்றோ தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பெற்றது. அ..இ.அ.தி.மு.க., தி.மு.க., தவிர்த்து வேறு எந்தக் கட்சி தமிழ்நாட்டை ஆண்டாலும் இந்தி புகும், தமிழ் அழியும். எனவே, வரும் தேர்தல்களில் தமிழுக்கும், தமிழர்க்கும் ஆக்கம் தரும் உண்மையாகத் தமிழ்ப்பற்றுள்ள, இருமொழிக் கொள்கையை அடியொற்றிப் பின்பற்றுகின்ற கட்சியினர்க்கே தங்கள் ஒப்போலைகளை (Votes) அளிக்குமாறு தமிழின் சார்பில் தமிழ்மக்களை வேண்டுகின்றோம்.
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment