கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி-தொடர்ச்சி)
பூங்கொடி
சண்டிலி புகழ்ந்து வேண்டல்
`அன்னைஎன் மொழியுள் அமைந்தநல் லிசையும்
தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும்
ஒல்லும் வகையான் உணர்ந்துளேன் ஆயினும்
உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப
வெள்ளம் பாயும் வியனிசை இதுபோல் 225
இந்நாள் எல்லை யாண்டும் கேட்டிலேன்;
என்நா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்?
இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ?
பதமிது வன்றேல் பைந்தொடி பொறுத்தருள்’
எனநான் பணிவுடன் இயம்பினே னாக, 230
அனநடை புன்னகை அரும்பினள் இயம்பும்;
தமிழிசைச் சிறப்பு
`மனமொழி செயலினை வயப்படச் செய்யும்
தனியொரு செயற்றிறம் தமிழிசைக் குண்டு;
கொடுந்தொழில் விலங்கும் கடுவிட அரவும்
படிந்திடச் செய்யும் பாங்கிதற் குண்டு; 235
மூவாத் தமிழில் மொழியிசை வளர்க்கும்
தேவா ரப்பண் தெரிந்தொன் றிசைத்தேன்
அவ்விசை கேட்டுளம் அதனுட் கூட்டினை!
செவ்விய அந்நூல் திறமெடுத் துரைப்பின்
மாசில் வீணையும் மாலை மதியமும் 240
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே’
என்றுளம் அன்பால் இளகிட மொழிந்தனள்;
—————————————————————
ஈர்த்தது – இழுத்தது, பதம் – சமயம், அனநடை – அன்ன நடை.
+++++++++++++++++++++++++++++
சண்டிலியை ஆற்றுப் படுத்தல்
நன்றுரை கேட்டு நயந்துளம் மகிழ்ந்தே
`உன்மொழி யிசைஎனக் கோதுதி யோ?’என 245
`என்னால் இயம்புதல் இயல்வதொன் றன்று
மின்னோர் இடையாய் மேம்படு செல்வர்
தக்கார் அறவோர் தகுகலை யறிவின்
மிக்கார் பலரும் தொக்குடன் வாழும்
மணிநகர் என்னும் அணிநகர் உளது 250
பணிபுரி தொழிலே அணியெனப் பூண்டுள
மலையுறை யடிகள் நிலைபெற நிறுவிய
கலையகம் அந்நகர்க் கண்ணதுஅப் பள்ளியில்
இசைக்கே இசைதரும் பெற்றியள் எமதுதென்
திசைக்கே விளக்கந் திகழ்ந்திடத் திகழ்பவள் 255
இளங்கொடி பூங்கொடி எனுந்திரு வாட்டி
உளங்கொள இசையை ஓதும் பணியினள்
அவளுழைச் செல்கநின் ஆவல் நிறைவுறும்’
என்றெனைப் பணிக்க ஈங்கிவண் வந்தேன்;
சண்டிலியின் துணிந்துரை
தணியா வேட்கை தணித்தனை! செல்விநின் 260
பணியால் தமிழிசை பாருல கெங்கும்
இணையிதற் கிலையென ஏற்றமுற் றோங்கும்
துணிவோ டிதனைச் சொல்லுதல் வல்லேன்
சிறியவள் எனக்குச் செந்தமி ழிசைபால்
முறுகிய ஆவலின் முழுதுணர்ந் தனனால்; 265
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment