ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 16 : ஆகமங்களின் தோற்றம் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – தொடர்ச்சி)
5. ஆகமங்களின் தோற்றம்
வேதங்களுக்கு எதிரான ஆகமங்கள்
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘’இந்தியத் தத்துவத்தின் சுருக்கம்” என்ற என் நூலில், இந்தியர்களால் இன்று பின்பற்றப்படும் சமயம், பெரும்பாலும் ஆகமங்களையே முழுமையாக அடிப்படையாகக் கொண்டுளது. வேதங்களோடான தொடர்பு ஒருசிறிதும், அல்லது, அறவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். வேத நெறிக் கடவுள் வழிபாட்டு முறையான வைதீக நெறி , மகாபாரதப் போருக்குப் பின்னர் அழியத் தொடங்கிவிட்டது. இக்காலை, அது பெரும்பாலும் அழிந்தே விட்டது. “சிரௌத கருமாவின் “ (அதாவது வேதவழிபாட்டு நெறியின்) பெரும்பகுதி அழிந்தே விட்டது. ‘’அக்கினி ஆதானம்,’’ மிகவும் எளிமையாக்கப்பட்ட வாசபெயம், கருடசயனம், மற்றும் சோமயாகம் போலும், அத்துணைச் சிறப்பிலா வழிபாட்டு நெறிகள் மட்டுமே, ஒருசில மக்களால் அவ்வப்போது மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தீ ஓம்பல் கடமையை மூன்று தலைமுறைகளாகப் புறக்கணித்து விடுவரோ, அப்பார்ப்பனக் குடும்பத்தவர், பார்ப்பனராம் தகுதியை இழந்தவராவர் என்ற விதிமுறையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டவழி நனிமிகக் குறைவான – குடும்பத்தவரே பிராமணர்களாக மதிக்கப்படுமளவு, “சுமார்த்த கரும” நெறிதானும் விரைந்து மறையலாயிற்று. இருந்தும் இந்தியா ஆழ்ந்த சமயச் சார்புடையதாகவே உளது; ஆனால் அந்த ஆழ்ந்த சமய உணர்வு, வேதநெறி வழிபாட்டு முறைகளையல்லாமல், ஆகம நெறி வழிபாட்டு முறை அளவிலேயே அமைந்துளது.
ஆகமம் பற்றிக் கூறும்போது, அச்சொல் உணர்த்தும் பல பொருள்களுள், ஆப்புதவசனம்’ (அதாவது, முற்றும் உணர்ந்த பெரியோர்களின் மெய்யுரை என்பதும் ஒன்று என்பதையும்), அதிலிருந்தே, ஆகமம் என்பதன் மற்றொரு பொருள் உருப்பெற்றது என்பதையும் ஆப்புதவசனங்களில், மிகப் பெரியது அல்லது மிகச் சிறந்தது. வேதம்” ஆதலின், அவ்வேதமும் சில சமயம் ஆகமம் என அழைக்கப்படும் என்பதையும் நான் மறந்துவிடவில்லை. உண்மையில், ஆகமம் என்ற சொல், பழைமையிலிருந்து வந்தது எனும் பொருள் உடையதாகும். ஆனால், ஆகமம் என்பது, சிவ, விட்ணு, சக்தி வழிபாட்டு நெறிகளை உணர்த்தும் புத்தகங்களாகிய தந்திரம்’ என்பதன் பெயர்களை உணர்த்தும் உண்மைப் பெயராகும். இப்பொருள் நிலையில், ஆகம நெறி வழிபாடுகள், வேதங்களோடு வேறுபட்டனவாம். பௌத்தர்கள், சைனர்களின் சமயக் கருத்துகளும் பழைமையாகவே வருவன ஆதலின், அவையும் ஆகமங்கள் என்றே அழைக்கப்படும். இவ்வாகமங்கள் அனைத்தும் அவற்றின் தொடக்க நிலையில், வேதங்களுக்கு அதாவது கரும காண்டங்களுக்கு எதிரிகளாம். சைவ ஆகம நெறி, மகேசுவர” நெறி, பாசுபத ” நெறி. எனவும் வழங்கப்படும். வைணவ” ஆகம நெறி , பாகவதம்” என்றும் (அதாவது இறை சார்புடைய) “சாத்தவதம்” என்றும் (சாத்தவத அரசியல் குடும்பத்தவரே, அவர்களைப் பெரும்பாலும் முதன் முதலில் ஆதரித்தமை யால்), பாஞ்சராத்திரம்” என்றும், வழங்கப்படும். இறுதியில் கூறிய இச்சொல், வேறு ஒரு பொருளையும் குறிக்கும். அது, விட்ணுவின் திருமேனியை வழிபடும் சிறப்பு வழிபாட்டு நெறியை உணர்த்தி , அப்பொருள் உணர்த்தும் வகையால், வைகானசர்கள்” பின்பற்றும் வழிபாட்டு நெறியோடு உணர்த்தப் பயன்படுவதோடு, வைகானசர்” எனும் இச்சொல், காடு சென்று வாழும் சந்நியாசிகளையும், பொதுவாகக் குறிக்கும்) ஆகம வழிபாட்டு நெறிகள், வைதீக வழிபாட்டு நெறிகளுக்குப் பகையாக அமைந்த பழங்காலத்தில், ஆகமத்திற்கும், வேதத்திற்கும் இடையிலான வேறுபாடு நன்கு உணரப்பட்டது. ஆனால் கடந்த பல நூறு ஆண்டுகாலமாக, அவை இரண்டும் இரண்டறக் கலந்து விட்டமையால், இக்கால மக்களால், அவ்விரண்டிற்கும் இடையிலான வேறுபாடு உணரப்படவில்லை. அது மட்டுமல்லாமல், அதற்கு மேலும் ஒருபடி சென்று, ஆகம நெறிகள், முடிந்த முடிபாக வேத நெறிகளிலிருந்தே உருப்பெற்றன; வேத உண்மைகளின் விரிவுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன; அல்லது இன்றைய கால நிலைக்கும் ஏற்கும் வகையில் அவ்வேத உண்மைகளைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளன என்ற கொள்கையும் பரவலாக வழங்கலாயிற்று. மந்திரங்கள் இயற்றப்பட்ட காலகட்ட முடிவிற்கும், பின்னர், வேதங்கள், ‘’அபௌரு செயம்” அதாவது, காலவெளி எல்லைகளைக் கடந்த புருசனாகிய ஈசுவரனாலும் இயற்றப்படாதன , எனக் கருதப்பட்டன. ஆனால், ஆகமங்கள் (சைவ, சாக்த , வைணவ) மட்டும், சிவன் அல்லது விட்ணுவின் வாயிலிருந்து வெளிப்பட்டன வாக உரிமை கோரப்பட்டு அதனால், அவை முறைப்படி “பௌருசேயம்” என அழைக்கப்படலாயின.
வேத சம்ஃகிதாக்களில் கூறப்பட்டிருப்பன எல்லாம், வைதீக சடங்குகளின்போது, ஓதுவதற்கான மந்திரங்களாம். ஆனால், ஆகமங்கள் சிவ அல்லது விட்ணு வழிபாட்டு நெறிகளின் விளக்கங்களையும், ஓகப் பயிற்சி முறைகளையும், தத்துவ ஞான ஆராய்ச்சிகளையும் நம்மகத்தே கொண்ட பாடநூல்களாம். மந்திரப் பகுதி, பிராமணப்பகுதி ஆகிய இரண்டையும் கொண்ட, அல்லது கருமகாண்டம், ஞான காண்டம் ஆகிய இரண்டையும், அல்லது, வேத வேதசிரசு ஆகிய இரண்டையும், குறிக்க, வேதங்கள், ஒரு மீமாம்சத்தின் துணையை நாடுகின்றன. ஆனால் ஆகமங்கள், முறையான பாட நூல்களாதலின் ஒரோவழி, தேவைப்படினும் உரை விளக்கம் ஒன்றை மட்டுமே எதிர்நோக்கும்.
ஆகமங்கள், கி.பி. 1000க்குப் பிற்பட்ட காலத்தே வழக்காற்றிற்கு வந்த ‘’பாசை’’ என்ற மொழிவடிவில் இருக்க, வேதங்கள், சந்தாசு” எனப்படும், மிகப்பழைய கிளை மொழியில் உள்ளன. இவ்வளவும், எழுத்து வடிவம் பற்றியனவாம். இனி வழிபாட்டு முறை பற்றியன. வைதீக வழிபாடு, தீ வழிபாடாம். ஒவ்வொரு வழிபாட்டு நிலைக்கும், நெருப்பு மூட்டப்பட வேண்டும், அந்நெருப்பு தீக்கொழுந்தாக எழுப்பப்பட வேண்டும். அத்தீயிடையிலேயே படையல்கள் கொட்டப்பட வேண்டும். ஆகமவழிபாடு, தீயற்ற வழிபாடு, படையல்கள், வணங்கப்படுவதன் முன் வறிதே காட்டப் பட்டுப் பின்னர் எடுத்துக் கொள்ளப்படும். முன்னதில் படையல்கள், தீயிடையே இடப்படுவதால் அவை, கடவுள்களால் உண்ணப்படுகின்றன. பின்னதில் ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படா நுண்ணிய ஒன்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளு மாதலின், இறைவழிபாட்டாளன், அப்படையலைத் தானும் உண்டு, தன் உறவினர்க்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிப்பன் ஆதலின் வழிபாட்டாளன், தன் படையல் பொருளில் எதையும் இழப்பதில்லை. வைதீக வழிபாட்டு நெறியில், உலகப் படைப்பு நிலையில் ஒவ்வொன்றும் தனித்தனி கடமைகளைக் கொண்ட எண்ணற்ற கடவுள்கள் வழிபடப்பட்டன.
ஆகம வழிபாட்டு நெறியில், விவிலிய நூலில் கூறப்படும் யூதர்களின் கடவுளாகிய “செஃகோவா” (Jehovah) வைப்போல, ஒரே ஒரு கடவுள் தான் வழிபடப்பட்டது. உலகத் தொடர்பான அத்தனை செயல்பாடுகளும், அதன் கைகளிலேயே அடங்கிவிடும். வேதவழிபாட்டு நெறியில் கடவுளுக்குப் படைக்கப்படும் ஒவ்வொரு படையலும்: வேதமந்திரம் தொடரவே படைக்கப்படும் என்பது மட்டுமன்று, வழிபடுவோனின் ஒவ்வொரு செயலும், உதாரணத்திற்குச், சோமபானம் கொண்டுவர வண்டியில் காளைகளைப் பூட்டுவது, அக்காளையைத் துரத்தி ஓட்ட ஒரு கொம்பினை ஒடிப்பது, படையல் பொருள் ஒன்றைக் கையால் பற்றுவது, பாலைக் கொதிக்க வைப்பது, கடைந்து மோர் ஆக்குவது. சுருங்கச் சொல்லின், சிறியனவோ, பெரியனவோ ஆன ஒவ்வொரு செயலும், செய்யுள் வடிவில் அல்லது உரை வடிவிலான ஒரு மந்திரம் ஓதலைத் தொடர்ந்தே நடைபெறும். ஆனால் ஆகம வழிபாட்டு நெறியில் வேத மந்திரங்களுக்குச் சட்ட பூர்வமான இடம் எதுவும் இல்லை. ஒருசில இங்கும் அங்கும் ஓதப்படுகின்றன. ஆனால் அதுவும் பெரிதும் முறையற்ற நிலையிலேயே ஓதப்படும். உதாரணத்திற்கு “து” என்ற அசைச்சொல்லோடு தொடங்கும் ஒரு மந்திரம், கடவுளுக்கு மணப்பொருளை அருப்பணிக்கப் பயன்படுத்தப்படும். உ-ம். ‘’தூப”. உண்மையில் இம்மந்திரம், ஒரு வண்டியின் நுகத்தடி எடுக்கப்படுவதைக் குறிப்பதாம். ஆனால் ஆகம வழிபாட்டு நெறியின் உயிர்ப்பகுதி, வணங்கப்படும் கடவுளைக் குறிக்கும் பல்வேறு பெயர்களை, நான் வணங்குகிறேன் எனப் பொருள்படும் ‘நமஃக” என்பதை. இணைத்துத் திரும்பத் திரும்பக் கூறுவதே ஆகும். வைதீக வழிபாட்டு நெறியின் சாரம், படையல்களைத் தீயிடைச் சொரிவதே ஆம். ஆனால், ஆகம வழிபாட்டு நெறியின் சாரம், உபகாரம் ஒன்றே; அதாவது தாம் வழிபடும் கடவுள் திருமேனியை நீராட்டுவது, ஒப்பனை செய்வது, உணவு படைப்பது, உண்மையில், தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் அல்லது தங்கள் அரசன் ஆகியோர்க்குச் செய்யும் அத்துணை உபசரணைகளையும் செய்வதாம்.
ஆகவே, வைதீக வழிபாட்டு நெறியில் வழிபடும் கடவுளின் காணக்கூடிய வடிவுடைய பிரதிநிதித்துவம் அதாவது தெய்வத்திருமேனி எதுவும் தேவையில்லை. காணக்கூடிய தீ ஒன்றே எல்லாக் கடவுள்களின் பிரதிநிதி ஆகும். ஆகம வழிபாட்டு நெறியில் வழிபடப்படும் ஒரு கடவுள், யாதோ ஒரு வகையில் கட்புலன் ஆகக்கூடிய சில சின்னங்களாக அமைய வேண்டும். அச்சின்னம், மூடநம்பிக்கை சார்ந்த வாள் அல்லது தண்டு, பட்டுப்போன அல்லது உயிருள்ள மரம், கல், ஓடும் அருவி, லிங்கம், சாலகிராமம் அல்லது அனைத் திற்கும் மேலாக, ஒரு படம், அல்லது வழிபடுவோரின் கருத் திற்கு ஏற்ப, உலோகம், கல், செங்கல், சுண்ணாம்பு இவற்றால் ஆன சிலை ஆகியன மூலம் பிரதிட்டை செய்யப்படுதல் வேண்டும்.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment