Skip to main content

வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – புலவர் கா.கோவிந்தன்

 

வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – புலவர் கா.கோவிந்தன்



(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 17 : . வேதாந்தம் –  தொடர்ச்சி)

பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை – கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை, அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி , மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறிகளின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும் உள்ள நல்லனவற்றையெல்லாம் தேர்ந்து தன்னகத்தே கொண்ட ஒருநெறியினைப் பின்பற்றத் தொடங்கிய மக்களால், பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யாகங்களில், உயிருடைக் கால்நடைகளுக்குப் பதிலாக, மாவினால் செய்யப்பட்ட, அவற்றின் வடிவங்களை (“பிஷ்டபஷீ “) மாற்றுப் பொருளாக ஏற்கும் நிலைக்கும் கொண்டுவந்துவிட்டது.

பகவத்துகீதை, தொடக்கத்தில், ஆகம நெறியாளரின் ஒருபிரிவினராகிய பாகவதர்களின் சமய நூல் தொகுப் போடும், சிரீ கிருட்டிணன், பாகவதர்களின் பத்திநெறியை, வேதாந்திகளின் ஞானநெறி, சாங்கியர்களின், நனிமிகு நுட்பம் வாய்ந்த இயல்கடந்த ஆய்வு நெறிகளோடு ஒருங்கு இணைத்து, வேறு வேறுபடும் இந்நெறிகள் எல்லாம், ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு கோணங்களாகத் தோன்றும், உயர்ந்த நிலையிலிருந்து பேசத் தொடங்கி, அறிவெல்லை கடந்த இப்பேருண்மையை அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தான். என்றாலும், பகவத் கீதை, வேதத்தை, அதாவது கர்மகாண்டத்தை மிகமிகக் கடுமையான சொற்களால், தூற்றிக் கண்டிக்கும் நிலையில், தன்னுடைய ஆகம நெறி இயல்பை வேண்டுமளவு இன்னமும் பெற்றுளது.

“ஓ பார்த்தா! வேதங்கள் பற்றிய வாதங்களில் மகிழ்ச்சி காணும், அறிவிலிகள், அணிநயம் கலந்த இவ்வினிய சொற்களைக் கூறுகின்றனர். கரும பாதையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை, அவர்களின் உள்ளம் ஆசைகளால் நிரம்பி வழிகிறது. அவர்கள் சுவர்க்கத்தில் அனுபவிக்கப் போகும் இன்பத்திற்காக ஏங்கி நிற்கின்றனர். அவர்கள், மறு பிறவியை எது தருமோ, அதிலும், கருமத்தின் பயனிலும், எண்ணற்ற சடங்குகளைக் கொண்டுள்ள விழா நிகழ்ச்சிகளிலும், குறியாக நிற்கின்றனர்; இன்ப நுகர்வு அதிகார ஆணை நெறிகளைப் பின்பற்றுகின்றனர். இன்ப நுகர்வுக்கும், அதிகார. போதைக்கும் அடிமைப்பட்டுப் போன உள்ளத்தோடு, இன்ப நுகர்விலும் அதிகார போதையிலும் ஈடுபாடு கொண்டுவிடும் அவர்களின் புத்தி, அவர்களுக்குச் சிறிதே அறிவினைத் தருமாயினும், அமைதியான தியானத்தில் நிலையாக நிற்காது. வேதம், மூன்று குணங்களால் உருவான பொருள்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அர்ஜ்ஜூனா! அம் முக்குணங் களால் உருவாகும் பொருள்களுக்கு அப்பாற்பட்டவனாக இருப்பாயாக இவையல்லாமல், ஆகமங்களுக்கே உரியவாய எண்ணற்ற சொற்கள் பகவத்துகீதையில் இடம்பெற்றுள்ளன.

யாமிமாம் புசுயிதாம் வாசம் பிரவதந்த அவிசுகிதஃக

வேதவாத ரத்ஃகாஃ பார்த்த ! நான்யத் அசுதிதி வாதிஃகை

காமரத் மாஃக சுவர்க்க பரர்ஃக சன்மகர்ம பஃகல பிரதாம்

கிரியாவிசேச பஃகலாம் போகைசுவரிய பஃகலம்ப்ரதி

போகைசுவர்ய பிரசக்தனாம் தயா அப்ஃகிருத செதசாம்

வ்யவசாயாத்மிகா புத்திஃகி சமாதெளன விதியதெ

த்ரைகுண்ய விசுயா வேதா நிசுத்ரை

                             குண்யொ பவராசுலர்

                                      – பகவத் கீதை – 2 42-45

வைதீகர்கள், இதற்கு மாறாக, ஆகம வழிபாட்டினரை நனிமிக இழிந்தவராகவே மதித்தனர். இது பண்டை ஆரியர்கள், மந்திரம் ஓதும் தசுயூக்களை, ‘ம்ரித்ரவாஃக’ என அழைத்து வந்த ஏளனத்தின் தொடர்பே அல்லது வேறு அன்று. இவ்வெறுப்பு வளர்ச்சியின் அடையாளம் இன்றும் காணக்கூடியதே. வைதீக நெறியும், ஆகம நெறியும், யாமுனாச்சாரியர் காலம் தொட்டே, ஒரே நெறியாக இரண்டறக் கலந்துவிட்டன என்றாலும், சைவம் வைணவம் ஆகிய இரு சமயங்களையும் சார்ந்த கோயில் குருக்களைப் பொறுத்தமட்டில், கொடிய வேதாந்திகளால் இழிகுலப் பிராமணர்களாகவே மதிக்கப்பட்டனர். உண்மையில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வகையில், எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர்; வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும், ஆகமவழிபாட்டு நெறியை வன்மையாகக் கண்டிக்கிறது. ‘பாசுபதர்கள்’ (வேதாந்த சூத்திரம் – 22:34-41) ‘பாஞ்சராத்ரர்’ (வேதாந்த சூத்திரம் – 22:2; 42 -44) ஆகிய இருவர்களையுமே, பாத்ராயணர், தம்முடைய சூத்திரங்களில் வெளிப்படையாகவே பழித்துள்ளார்.

இனி, ஆகம வழிபாட்டு நெறிக் கொள்கைகள், உருப் பெற்றது எப்போது, அவை எங்கிருந்து முகிழ்த்தன என்பன பற்றி ஆராய்கின்றேன். முதற் கேள்வி, விடை காண்பதற்கு அரியது அன்று. அண்மையில் நடந்து முடிந்த உலகப்போரின் போது நடைபெற்றுவிட்ட நினைத்தாலும் நடுங்கத்தக்க பேரழிவு, புதிய வாழ்க்கை நெறிகளைக் கொணரத் தொடங்கியது போல், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உய்த்துணர்ந்து கூறுவது அத்துணை விரைவில் இயலாது.

மகாபாரதப் போரின் மிகப் பெரிய படுகொலைகள், இந்திய நாட்டு வாழ்வியலில், ஓர் ஆழமான மாற்றத்திற்கு வழிவகுத்துவிட்டன. “மந்திர மந்திரத்ரசுடாரஃக” ங்களின் கண்காணிப்பாளர்களாகிய ரிசிகளின் காலம், மீண்டும் வாரா வகையில் மறைந்துவிட்டது. வேதத்தின் கர்மகாண்டம் உறுதி அளித்த ஒன்றேயொன்றான, எல்லாமே கெட்டவைதாம் எனக்கருதும், அழுத்தமான சோர்வு வாதம், அதாவது இம்மையிலும், மறுமையிலும், சுவர்க்கலோகத்தில் போலவே, பூலோகத்திலும், ஐம்பொறி இன்ப நுகர்வின் மீதான கொடிய -வெறுப்புணர்ச்சி, மக்களை அடிமை கொண்டுவிட்டது.

சிந்தனையாளர்கள், நிலைதடுமாறும், இவ்வுலகியலுக்கு இடையில் (‘நாமரூபம்”) நிலைதடுமாறும் இயல்பு வாய்ந்த ஒரே பொருளான (“அட்சரம்”) பிரம்ம பரமம் மீதான பல்வேறு வகையான தியான நிலைகளில், கேட்டிலிருந்து . மீள்வதற்கான ஒரு வழியினைத் தேடிக் காணலாயினர். அதன் பயனாய், உபநிடஷதத்தின் முப்பத்திரண்டு வித்யாக்கள் பிறந்தன. கர்மகாண்டத்து வழிமுறைகளின் அடிச்சுவடுகள் காண்டொக்யத்திலும், ‘பிரஃகதாரண்யக’ விலும் விளங்க உரைக்கப்படும், வித்யாக்களில் தெளிவுறத் தோன்றுமளவு, உபநிடதங்கள், கர்மகாண்டத்திலிருந்து படிப்படியாகத் தோன்றி வளர்ச்சி நிலைபெற்றன. என்றாலும், மக்களில் பெரும்பாலோர் உள்ளுறுதி அற்ற நோஞ்சான்களாயினர். அவர்களின் உள்ளம், ஓளபநிடத கொள்கை, பயிற்சிகளின் விழுமிய சிறப்பு நிலையினை அடையும் உணர்வுகளால் நிறைந்து வழியலாயிற்று. அவர்களுக்காகவே முகிழ்த்தன. ஆகமக் கொள்கைகளும் பயிற்சிகளும். இவை, உலகின் சாதாரண வாழ்வின் இயல்புகளோடு பங்கு கொண்டு விட்டன. கடவுள் வழிபாடு என்பது மக்களைப் போற்றும், சிறப்பாக, குருக்கள் மற்றும் அரசர்களைப் போற்றும் வழிபாட்டு நெறியின் மறுபடிவமேயாம். இவ்வாறு, பாரதப், போருக்குப் பிற்பட்ட காலமே, உபநிடதங்களும், தலையாய ஆகமங்களும் தோன்றிய காலமாம் என்பதைக் காண்கிறோம்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்